செம்மொழி அல்ல தமிழ் பற்றே இல்லாத கருணாநிதி குடும்பம்-தலித் பாண்டியன்
கரூர்: உலகத் தலைவர்களில் ஒப்பற்ற தலைவர் என்று போற்றப்படும் முதல்வர் கருணாநிதியின் குடும்பத்திற்கு தமிழ் மொழி மீது சிறிதும் பற்றில்லை என்று தலித் விடுதலை இயக்க மாநில அமைப்பாளர் தலித் பாண்டியன் குற்றம் சாட்டியுள்ளார்.
இது குறித்து தலித் விடுதலை இயக்க மாநில அமைப்பாளர் தலித் பாண்டியன் கரூரில் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டை நடத்திய முதல்வர் கருணாநிதிக்கு பல திசைகளில் இருந்தும் பாராட்டு மழை பொழிகின்றது. அது மட்டுமல்ல விரைவில் அவருக்கு பாராட்டு விழாவும் நடக்கப் போகிறது.
செம்மொழி மாநாட்டிற்கு முன்பு முத்தமிழ் வித்தகர் என்று மட்டும் பாராட்டப்பட்ட கருணாநிதி மாநாட்டிற்குப் பின்னர் அய்ந்தமிழ் அறிஞர் என்றும் பாராட்டப்படுகிறார்.
இந்நிலையில் கருணாநிதி குடும்பத்தில் செம்மொழிக்கு அல்ல தமிழ்மொழிக்கே இடமில்லை என்ற உண்மை வெளி உலகத்திற்கு நிரூபணமாகியுள்ளது.
கருணாநிதியின் பேரன் உதயநிதி ஸ்டாலின் உருவாக்கி இருக்கும் படத் தயாரிப்பு நிறுவனத்தின் பெயர் ரெட் ஜெயின்ட் மூவிஸ் (Red Giant Movies) என்பதாகும்.
இன்னொரு பேரன் தயாநிதி அழகிரியின் படத் தயாரிப்பு நிறுவனத்தின் பெயர் கிளவுட் நைன் பிக்சர்ஸ் (Cloud Nine Pictures).
கலாநிதி- தயாநிதி மாறன் சகோதரர்களின் தொலைக்காட்சிக்கு சன் டிவி என ஆங்கிலத்தில் பெயர் வைத்திருப்பது தெரிந்ததே.
ஆனால், அதே தொலைக்காட்சி கன்னடத்தில் உதயா என்ற பெயரிலும், மலையாளத்தில் சூர்யா என்ற பெயரிலும், தெலுங்கில் ஜெமினி என்ற பெயரிலும் செயல்பட்டு வருகிறது.
தமிழக முதல்வாரக உள்ள கருணாநிதியின் பேரன்களுக்கு தமிழ் மீது பற்று இல்லை என்று எண்ணத் தோன்றுகின்றது. இதற்கு கருணாநிதி சாக்கு போக்கு கூறாமல் முறையான பதில் அளிப்பாரா? என்று அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications