ஸ்ரீபதி நியமனத்திற்கு எதிராக போராட்டம்-ஆர்டிஐ சேவகர்கள் கைது
சென்னை: தமிழக தலைமை தகவல் ஆணையர் நியமனம் வெளிப்படையாக செய்யப்படாதது உள்ளிட்டவற்றை வலியுறுத்தி சென்னை ஆளுநர் மாளிகை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மூன்று ஆர்டிஐ சேவகர்கள் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர்.
நேற்று தலைமை தகவல் ஆணையராக கே.எஸ்.ஸ்ரீபதி பொறுப்பேற்றுக் கொண்டார். அவரது பதவியேற்பு நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தபோது,விழா நடந்த ஆளுநர் மாளிகை முன்பு ஆர்டிஐ சேவகர்கள் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் குதித்தனர்.
ஸ்ரீபதி நியமனம் வெளிப்படையாக இல்லை, அதையும் அரசியலாக்கி விட்டனர். ஸ்ரீபதியின் பதவியேற்பு சட்டவிரோதமானது, ஆர்டிஐக்கு ஆபத்து என்று கோஷமிட்டபடி ஆர்ப்பாட்டம் செய்தனர்.
இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் சக்திக் கட்சியின் சிவ இளங்கோ, இந்திய வளர்ச்சிக் கழகத்தின் மாதவ் விஷ்ணுபட்டா, கோபாலகிருஷ்ணன் ஆகியோரை போலீஸார் கைது செய்து அப்புறப்படுத்தினர்.
போலீஸ் வேனில் ஏற்றப்பட்டபோது, ஸ்ரீபதி குறித்து மாதவ் கூறுகையில்,ஸ்ரீபதி வெளிப்படையாக செயல்படக்கூடியவர் அல்ல. அதை விட முக்கியமாக ஆர்டிஐக்கு எதிரானவர். முன்பு ஒருமுறை சொத்துக்கள் குறித்த விவரங்களை தாக்கல் செய்துள்ள ஐஏஎஸ் அதிகாரிகள், தாக்கல் செய்யாதவர்கள் குறித்த விவரத்தை தெரிவிக்குமாறு கோரி ஆர்டிஐ மூலம் மனு செய்யப்பட்டது. இதை ஏற்று தெரிவிக்க தமிழ்நாடு தகவல் ஆணையம் முடிவு செய்தது. ஆனால் அதைத் தெரிவிக்கக் கூடாது என்று கூறி அப்பீல் செய்தவர் ஸ்ரீபதி.
மேலும் அவர் தலைமை கண்காணிப்பு ஆணையராக இருந்தபோது, ஆர்டிஐ சட்டத்திலிருந்து ஊழல் மற்றும் கண்காணிப்பு இயக்குநரகத்திற்கு விதிவிலக்கு அளித்தவர்.
இப்படிப்பட்டவர் எப்படி ஒளிவுமறைவின்றி செயல்படுவார், ஆர்டிஐ சட்டத்தைக் காப்பாற்றுவார் என நம்புவது. தமிழகத்தில் இனி ஆர்டிஐ சட்டம் சுதந்திரமாக செயல்படுவது இனி இயலாத காரியம் என்றார்.
பின்னர் மூன்று பேரும் கிண்டி காவல் நிலையத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர்.
எனது நியமனம் குறித்து ஆர்டிஐ மூலம் அறியலாம்
முன்னதாக பதவியேற்புக்குப் பின்னர் ஸ்ரீபதி செய்தியாளர்களிடம் பேசுகையில்,
சமன் செய்து சீர்தூக்கும் கோல் போல் அமைந்தது பால் சான்றோன் அணி என்னும் திருக்குறளுக்கு ஏற்ப நான் பணியாற்றுவேன். எது நீதியோ அதைத்தான் செய்வேன். நான் தலைமைச் செயலாளராக இருந்தபோது, சிலவற்றில் வெளிப்படைத்தன்மை இல்லை என்று சொல்லப்படுவதற்கு, நான் பொறுப்பாக முடியாது. ஏனெனில் அதில் உண்மையில்லை. நான் ஒரு துடிப்பான தலைமை தகவல் ஆணையராக செயல்படுவேன்.
இந்த பதவிக்கு நான் விண்ணப்பித்தேனா அல்லது பரிந்துரைக்கப்பட்டேனா என்பது பற்றியெல்லாம் தெரிந்து கொள்ள விரும்பினால், தகவல் அறியும் சட்டத்தின் கீழ் தெரிந்து கொள்ளலாம் என்றார்.












Click it and Unblock the Notifications