காஷ்மீரில் தொடர் வன்முறை-நேற்றும் இன்றும் 17 பேர் பலி

Subscribe to Oneindia Tamil

Protesors burn Obama's effigy in Srinagar
ஸ்ரீநகர்: அமெரி்ககாவில் திருக்குரான் அவமதிக்கப்பட்டதாக பரவிய செய்தியால் காஷ்மீரில் வெடித்த பெரும் கலவரத்திற்குப் பலியானோரின் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது.

நேற்று ஒரே நாளில் 16 பேர் பலியான நிலையில் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

பாரமுல்லா மாவட்டம் தங்மார்க் பகுதியில் 6 பேரும், பத்காமில் ஒரு 7 வயதுக் குழந்தை [உள்பட 7 பேரும், பாம்பூர், பந்திப்புராவில் தலா ஒருவரும் உயிரிழந்தனர். தங்மார்க் நகரில் ஒரு கிறிஸ்தவ மிஷனரி பள்ளி தீவைத்துக் கொளுத்தப்பட்டது.

இன்று உயிரிழந்தவர்களையும் சேர்த்து ஜூன் 11ம் தேதி தொடங்கிய கலவரத்திற்கு இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 87 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 3 மாதங்களுக்கும் மேலாக கலவரத்தால் எரிந்து கொண்டிருக்கும் காஷ்மீரில் நேற்று, அமெரிக்காவில் திருக்குரான் நூலின் பக்கங்களை கிழித்து எரித்ததாக ஈரானைச் சேர்ந்த பிரஸ் டிவி ஒரு செய்தியை ஒளிபரப்பியது. இதையடுத்து காஷ்மீர் பள்ளத்தாக்கு முழுவதும் கலவரம் வெடித்தது.

அனந்த்நாக் நகரில் பெருமளவில் திரண்ட இளைஞர்கள் கலவரத்தில் ஈடுபட முயன்றனர். அவர்களை பாதுகாப்புப் படையினர் தடியடி நடத்தியும், வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டும் கலைக்க முயன்றனர். அப்போது மரூப் அகமது நாத் என்ற இளைஞர் தப்பி ஓடினார். அவரைப் பிடிக்க பாதுகாப்புப் படையினர் முயன்றபோது அவர் ஜீலம் நதியில் குதித்து விட்டார். ஆற்றின் வேகத்தில் அடித்துச் செல்லப்பட்ட நாத் என்ன ஆனார் என்பது தெரியவில்லை. ஆனால் அவர் உயிரிழந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

நேற்று வெடித்த பெரும் கலவரத்தைத் தொடர்ந்து டெல்லி சென்றிருந்த முதல்வர் உமர் அப்துல்லா உடனடியாக ஸ்ரீநகர் திரும்பினார். பின்னர் அமைச்சரவைக் கூட்டத்தைக் கூட்டி ஆலோசனை நடத்தினார்.

ஒபாமா கொடும்பாவி எரிப்பு:

தங்மார்க் பகுதியில்தான்கலவரம் பெரிதாக இருந்தது. அங்கு கிறிஸ்தவ மிஷனரி பள்ளியை போராட்டக்காரர்கள் தீவைத்து எரித்தனர். அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் கொடும்பாவியும் தீவைத்துக் கொளுத்தப்பட்டது. போலீஸ் வாகனத்தையும், அரசு அலுவலகம்ஒன்றையும் அவர்கள் தீவைத்து எரித்தனர்.

அதேபோல ஸ்ரீநகரிலும் ஒபாமாவின் கொடும்பாவி தீவைத்து எரிக்கப்பட்டது. போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த முடியாமல் பாதுகாப்புப் படையினர் திணறினர்.

கலவரம் பெரிதாக இருப்பதால் ஸ்ரீநகர் உள்பட காஷ்மீர் பள்ளத்தாக்கின் அனைத்துப் பகுதிகளிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அனைத்து முக்கிய நகரங்களும் ஊரடங்கின் கீழ் வைக்கப்பட்டுள்ளன.

ஸ்ரீநகரில் நூற்றுக்கணக்கானோர் கூடி குரானை எதிர்த்தவர்களுக்கு எதிராக குரல் எழுப்பி போராட்டம் நடத்தினர். அமெரிக்காவுக்கு எதிராக போராட்டக்காரர்கள் குரல் எழுப்பினர்.

இன்றைய கலவரத்தில் 6 பேர் காயம்:

இன்றும் கலவரம் ஓயவில்லை. பாரமுல்லா மாவட்டத்தில் இன்று அதிகாலை முதலே மக்கள் ஊரடங்கு உத்தரவை மீறி தெருக்களில் திரண்டனர். இந்தியாவே வெளியேறு என்று கோஷமிட்டனர். இதையடுத்து அவர்களை கலைந்து செல்லுமாறு மத்திய போலீஸ் படையினர் கேட்டுக் கொண்டனர்.

அரசையும், போலீசையும் கடுமையாக விமர்சித்து கோஷமிட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் திடீரென்று போலீஸ்காரர்கள் மீது சரமாரியாக கற்களை வீசி எரிந்தனர். இதனால் போலீசாரும் பதிலடி தாக்குதலில் ஈடுபட்டனர். பிரிவினைவாதிகளின் கல்வீச்சு அதிகரித்ததால் போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினார்கள்.

அதற்கும் கூட்டம் கலையாததால் தடியடி நடத்தப்பட்டது. அதன் பிறகும் பிரிவினைவாதிகள் கலைந்து செல்லவில்லை. இதையடுத்து கலவரக்காரர்களை எச்சரிக்க செய்ய வானத்தை நோக்கி போலீசார் சுட்டனர். என்றாலும் கலவரக்காரர்கள் கல்வீச்சை கைவிடவில்லை.

போலீசாரின் பதிலடியில் சிக்கி ஜாவிக், தாரிக் அகமது உள்பட 6 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களில் தாரிக் அகமது என்பவரது நிலை மிக மோசமாக உள்ளது. இதனால் அவர் ஸ்ரீநகர் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

இந்த மோதல் சம்பவம் பற்றி மற்ற நகரங்களுக்கும் தகவல் பரவியது. இதனால் பாரமுல்லா மாவட்டத்தில் கடும் பதற்றம் நிலவுகிறது.

தொடர்ந்து கலவரம் பரவி வருவதைத் தொடர்ந்து பட்சம் டவுன், சுன், மிர்குந்த், ஓம்போர், ஒர்கரா, ஷேக்போர், கம்கமா, ஐ.ஜி.ரோடு, குல்வான்பூர், நதீர்குந்த், சத்துரா, வதுரா ஆகிய நகரங்களுக்கு இன்று ஊரடங்கு விரிவுபடுத்தப்பட்டது.

குரான் எரிக்கப்பட்டதாக வெளியான செய்தியால் ஏற்கனவே பெரும் போர்க்களமாக காணப்படும் காஷ்மீரில், நிலைமை மேலும் மோசமாகியுள்ளதால் மத்திய அரசும், மாநில அரசும் செய்வதறியாமல் திகைத்துப் போய் நிற்கின்றன.

வதந்திக்கு அமெரிக்க தூதர் கண்டனம்:

அமெரிக்காவில் திருக்குரான் எரிக்கப்பட்டதாக காஷ்மீர் மற்றும் பஞ்சாபில் பரவிய வதந்திகளுக்கு இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தூதர் திமோதி ஜே ரோமர் கூறுகையில்,

எந்தவொரு புனித நூலையும் சேதப்படுத்துவதாக கூறுவது, அருவருக்கத்தக்க செயல் ஆகும். செப்டம்பர் 11-ந் தேதி அன்று திருக்குரானை, அமெரிக்காவை சேர்ந்த தவறான வழிகாட்டப்பட்ட ஒரு நபர், அவமரியாதை செய்ததாக தகவல்கள் வெளியாகின.

இந்த தகவல் காரணமாக, காஷ்மீர் மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் பள்ளிக்கூடம், தேவாலயம் போன்றவை வன்முறையாளர்களால் தாக்கப்பட்டு சூறையாடப்பட்டது குறித்து நாங்கள் அதிர்ச்சி அடைந்துள்ளோம். இது கண்டிக்கத்தக்கது.

வன்முறையை முடிவுக்கு கொண்டு வரவும், அமைதியை நிலைநாட்டவும் உள்ளூர் நிர்வாகத்துக்கு நாங்கள் முழு ஆதரவு அளிக்கிறோம்.

உலக நாடுகளில் உள்ள அனைத்து தீவிரவாதிகளும், அமைதியான ஒத்துழைப்புக்கு பதிலாக இதுபோன்ற வெறுப்புணர்ச்சிகளையே வேண்டுகின்றனர் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

அமெரிக்காவில் இருந்து இஸ்லாம் விலக்கி வைக்கப்படவில்லை என அதிபர் ஒபாமா குறிப்பிட்டு இருக்கிறார். இதுபோன்ற வதந்திகளுக்கு பதிலாக நீதிக்கான கொள்கைகள், வளர்ச்சி, சகிப்புத் தன்மை, அனைத்து மனிதர்களுக்கும் மரியாதை போன்றவற்றை பகிர்ந்து கொள்ளலாம்.

மற்ற அனைத்து மதங்களைப் போலவே, இஸ்லாம் மதத்துக்கும் அமெரிக்காவில் சரி நிகர் இடம் உண்டு. அதற்கான உரிமையும் இஸ்லாம் மதத்துக்கு உண்டு என்றார் ரோமர்.

நாளை அனைத்துக் கட்சிக் கூட்டம்:

இந்த நிலையில், காஷ்மீர் கலவரம் தொடர்பாக நாளை அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

நேற்று காஷ்மீரில் பெரும் கலவரம் வெடித்ததைத் தொடர்ந்து பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழு கூட்டம் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நடைபெற்றது.

ரம்ஜான் பண்டிகைக்குப் பிறகு காஷ்மீரில் நடைபெற்று வரும் கலவரங்கள் தொடர்பாக ஆலோசனை நடத்த இந்தக் கூட்டம் கூட்டப்பட்டது.

கூட்டத்தின் முடிவில் புதன்கிழமை அனைத்துக் கட்சிக் கூட்டத்தை நடத்த மத்திய அரசு முடிவ செய்துள்ளது. காஷ்மீரில் நடந்து வரும் கலவரத்தை அடக்குவதற்கு பேச்சுவார்த்தை ஒன்றே வழி என அந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. காஷ்மீரில் அமைதி திரும்ப அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு எடுக்கும் என கூட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+