சில்லரை வணிகத்தில் அந்நிய முதலீட்டை அனுமதிக்கக் கூடாது - பிரதமருக்கு வணிகர் சங்கம் போராட்டம்
வேலூர்: சில்லரை வணிகத்தில் அந்நிய முதலீட்டை அனுமதிக்கக் கூடாது என்று கோரி தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு 2 லட்சம் தந்திகள் அனுப்பும் நூதன போராட்டம் நடைபெறுகிறது.
தமிழகத்தில் பல்லாயிரம் வணிகர்கள் சில்லரை வணிகத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் சில்லரை வணிகத்தில் பண பலம் மிக்க பெரிய அந்நிய நிறுவனங்கள் முதலீடு செய்ய உள்ளதாகத் தகவல் வெளியானது. இதற்கு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு கடும் கண்டனம் தெரிவி்த்துள்ளது.
இதனையடுத்து சில்லரை வணிகத்தில் அந்நிய முதலீட்டை அனுமதிக்கக் கூடாது என்று கோரி தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை சார்பில் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு 2 லட்சம் தந்திகள் அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதன் தொடக்க நிகழ்ச்சி வேலூரில் நடைபெற்றது. வேலூர் தலைமை தபால் நிலையத்தில் இருந்து முதல்கட்டமாக 1000 தந்திகள் பிரதமருக்கு அனுப்பபட்டது. இதை தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்புத் தலைவர் விக்கிரமராஜா தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் மாநில பொதுச் செயலாளர் மோகன், வேலூர் மாவட்டத் தலைவர் ஆம்பூர் கிருஷ்ணன், மாவட்டச் செயலாளர் ஞானவேல், மாவட்டத் துணை தலைவர் பாலு உள்பட பல நிர்வாகிகள் பங்கேற்றனர்.












Click it and Unblock the Notifications