மத்திய அரசு ஊழியர்களுக்கு 10% அகவிலைப்படி உயர்வு
டெல்லி: மத்திய அரசு ஊழியர்களுக்கும் ஓய்வூதியதாரர்களுக்கும் 10 சதவீத அகவிலைப்படி (Dearness Allowance-DA) உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜூலை 1ம் தேதி முதல் முன்தேதியிட்டு இந்த உயர்வு அளிக்கப்படும். தசரா மற்றும் தீபாவளிப் பண்டிகையையொட்டி இந்த அகவிலைப்படி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.
பணவீக்கம் உயர்ந்ததையடுத்து அதை ஈடுகட்ட இந்த அகவிலைப்படியும் உயர்த்தப்பட்டுள்ளது. டெல்லியில் பிரதமர் மன்மோகன் சி்ங் தலையில் நேற்று நடந்த மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
இதன் மூலம் 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும் 38 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயனடைவர். இதனால் அரசுக்கு ஆண்டுக்கு ரூ. 9,303 கோடி கூடுதல் செலவாகும்.
முன்தேதியிட்டு வழங்குவதால் இந்த நிதியாண்டியில் மட்டும் ரூ. 6,202 கோடி கூடுதல் செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
6வது ஊதியக்குழு பரிந்துரைகளின்படி இந்த ஊதிய உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.
ஹஜ் யாத்ரீகர்கள்:
அதே போல இந்த ஆண்டு ஹஜ் பயணத்துக்கான நடைமுறைகள் மற்றும் ஏற்பாடுகளுக்கும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த ஆண்டு 21 நகரங்களிலிருந்து ஹஜ் பயணிகள் புனித யாத்திரை செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டு 1.7 லட்சம் பயணிகள் ஹஜ் பயணம் செல்கின்றனர். இதில் 1 லட்சத்து 25 ஆயிரம் பேர் ஹஜ் கமிட்டி மூலம் செல்கின்றனர்.
ஹஜ் கமிட்டி மூலம் செல்லும் பயணி ஒவ்வொருவரும் ரூ.16,000 செலுத்த வேண்டும். எஞ்சிய தொகை மத்திய அரசு அளிக்கும். இந்த ஆண்டு புதிதாக போபால் மற்றும் கோவாவிலிருந்து பயணிகள் புறப்பட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications