ஆயுத ஊழல் வழக்கு: பொன்சேகாவுக்கு 3 ஆண்டு சிறை

இலங்கையில் கடந்த ஆண்டு விடுதலைப் புலிகளுடன் நடந்த இறுதிக் கட்ட போருக்கு தலைமை தாங்கிய சரத் பொன்சேகா, போரில் புலிகள் முடக்கப்பட்ட பி்ன், அதிபர் ராஜபக்சேவால் ஒதுக்கப்பட்டார்.
இதையடுத்து நடந்த தேர்தலில் ராஜபட்சவுக்கு எதிராக போட்டியிட்டுத் தோற்றார். சிறையிலிருந்தவாறே தேர்தலில் போட்டியிட்டு பொன்சேகா எம்.பியானார்.
ஆனால், மீண்டும் அதிபரான ராஜபக்சே முதல் வேலையாக பொன்சேகாவை கைது செய்தார். அவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் அடுக்கப்பட்டன.
ராணுவ பதவியிலிருக்கும்போதே அரசியலில் ஈடுபட்டது, ஆயுதங்கள் வாங்கியதில் ஊழல செய்தது உள்பட பல குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. அவர் மீது தேசத்துரோக வழக்கும் தொடரப்பட்டது.
இந்த குற்றச்சாட்டுகளை ராணுவ நீதிமன்றம் விசாரித்து வந்தது. அரசு பதவியிலிருக்கும்போதே அரசியலில் பொன்சேகா ஈடுபட்டது தொடர்பான குற்றச்சாட்டை முதலாவது ராணுவ நீதிமன்றம் விசாரித்தது. இந்த வழக்கில் பொன்சேகா மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு அவருக்கு தண்டனை வழங்கப்பட்டது.
ராணுவ நீதிமன்றத்தின் இந்த தீர்ப்புக்கு அதிபர் ராஜபக்சே ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து பொன்சேகாவின் ராணுவ ஜெனரல் அந்தஸ்தும், பதக்கங்களும், ஓய்வூதிய பலன்களும் பறிக்கப்பட்டன.
இந்த நிலையில் பொன்சேகாவின் ஆயுத பேர ஊழல் குறித்த விசாரணை நடத்தப்பட்டது. ராணுவத் தளபதியாக இருந்தபோது தனது மருமகனுடன் இணைந்து ஆயுத பேர ஊழலில் பொன்சேகா ஈடுபட்டதாக குற்றச்சாட்டு கூறப்பட்டிருந்தது.
இந்த ஊழலில் பொன்சேகா ஈடுபட்டது உண்மை என்று அறிவித்துள்ள நீதிமன்றம் அவருக்கு 3 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்க ராஜபக்சேவுக்கு நேற்று பரிந்துரை செய்தது.
அதிபர் கையெழுத்திட்ட பின் பொன்சேகாவுக்கான தண்டனை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.
இப்போது ஐ.நா. மாநாட்டில் பங்கேற்ற அமெரிக்காவில் உள்ள ராஜபக்சே அடுத்த வாரம் நாடு திரும்பியதும் பொன்சேகா மீதான தீர்ப்புக்கு அதிபர் ஒப்புதல் வழங்குவார் என்று தெரிகிறது.
ஆனால், இது பழிவாங்கும் நடவடிக்கை என்றும் அவர் மீது அரசு பொய்யான குற்றச்சாட்டுகளை கூறி வருவதாகவும், அதிபர் தேர்தலில் தன்னை எதிர்த்து போட்டியிட்டதற்காக பொன்சேகாவை ராஜபக்சே பழிவாங்கி வருவதாகவும் பரவலாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந் நிலையில் சிறையில் இருப்பதால் பொன்சேகா, தொடர்ந்து 3 முறை நாடாளுமன்றக் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. அவருக்கு இப்போது 3 ஆண்டு சிறை தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளதால் அவரது எம்.பி. பதவியும் பறிபோகும் நிலையும் ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications