பெட்ரோல் விலை லிட்டருக்கு 27 காசு உயர்வு!
டெல்லி: பெட்ரோல் விலையை லிட்டருக்கு 27 காசுகள் அதிகரித்தது இந்தியன் ஆயில் நிறுவனம். நாடு முழுவதும் உள்ள இந்நிறுவனத்தின் பெட்ரோல் பங்க்குகளில் நேற்று நள்ளிரவு முதல் இந்த விலை உயர்வு நடைமுறைக்கு வந்துவிட்டது.
சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருவதால் எண்ணெய் நிறுவனங்கள் இழப்பை சந்தித்து வருவதாக தொடர்ந்து கூறிவந்தன எண்ணெய் நிறுவனங்கள்.
இதையடுத்து கடந்த ஜூன் மாதம் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் கியாஸ், மண்ணெண்ணெய் ஆகியவற்றின் விலையை மத்திய அரசு உயர்த்தியது. மேலும், சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயித்து கொள்ளலாம் என்றும் அனுமதித்தது.
இப்போது ஆசிய சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளதைக் காட்டி இந்தியன் ஆயில் எண்ணெய் நிறுவனம் பெட்ரோல் விலையை உயர்த்தி உள்ளது.
அதன்படி, பெட்ரோல் விலை லிட்டருக்கு 27 காசு அதிகரிக்கப்பட்டது. இந்த விலை உயர்வு நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது. இதனால், நாடு முழுவதும் உள்ள இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்குகளில் பெட்ரோல் விலை உயர்ந்தது.
எண்ணெய் நிறுவனங்களே விலையை நிர்ணயித்துக் கொள்ள அனுமதித்த பிறகு, முதன் முறையாக அறிவிக்கப்பட்டுள்ள விலை உயர்வு இது.
இந்த விலை உயர்வைத் தொடர்ந்து, டெல்லியில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.51.83 ஆக அதிகரித்தது. இதுபோல சென்னையில் ரூ.56.31 ஆகவும், கொல்கத்தாவில் ரூ.55.69 ஆகவும், மும்பையில் ரூ.56.25 ஆகவும் அதிகரித்துள்ளது. இது இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்குகளின் நிலவரம்.
இந்தியன் ஆயில் நிறுவனத்தைத் தொடர்ந்து மற்ற பொதுத்துறை நிறுவனங்களான இந்துஸ்தான் பெட்ரோலியம் மற்றும் பாரத் பெட்ரோலியம் ஆகியவையும் பெட்ரோல் விலையை உயர்த்த முடிவு செய்துள்ளன.
கச்சா எண்ணெய் விலை லேசாக அதிகரித்தாலும் விலையை உயர்த்தும் எண்ணெய் நிறுவனங்கள், கச்சா விலை குறையும் போது அது பற்றி கண்டுகொள்வதே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications