விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்க தமிழக அரசு கடும் எதிர்ப்பு!!

சட்ட விரோதநடவடிக்கைகள் தடைச் சட்டத்தின் கீழ் புலிகள் மீதான தடை மே 14 ஆம் தேதி மேலும் இரு ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டது.
இந்தத் தடைக்கு பொதுமக்களின் மத்தியில் ஆட்சேபணை உள்ளதா என்பதை ஆராய்வதற்காக தனி நீதிபதியைக் கொண்ட ட்ரிபியூனல் ஒன்றை மத்திய அரசு அமைத்திருந்தது. நீதிபதி விக்ரம்ஜித் சென் இந்த நீதிமன்றத்தின் தலைவராக உள்ளார்.
புலிகள் அமைப்பு என்ற ஒன்றே இல்லையென்று மத்திய அரசும், இலங்கை அரசும் தொடர்ந்து கூறி வருகின்றன. அப்படியிருக்கையில் அந்த அமைப்புக்கு தடை விதிப்பது அர்த்தமற்றது என்றும், விடுதலைப் புலிகள் மீதான தடை, தமிழ் ஈழ மக்களின் சுதந்திரபோராட்ட உணர்வை பின்னடைய வைக்கிறது என்றும் கூறி மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் வைகோ மனுச் செய்திருந்தார்.
இதற்கு மத்திய அரசின் வழக்கறிஞர் எதிர்ப்பு தெரிவித்திருந்தார். எனவே வைகோவின் வாதத்தை நீதிமன்றம் ஏற்கவில்லை. புலிகள் அமைப்பின் அதிகாரப்பூர்வ பிரதிநிதியொருவர் ஆஜராகவேண்டும் என்று நீதிபதி கூறியிருந்தார்.
இதற்கு பதிலளித்த வைகோ, "விடுதலைப்புலிகளுக்கு ஆதரவளிக்கும் அரசியல் கட்சிகளில் ம.தி.மு.க.வும் ஒன்று. எல்டிடிஇ அமைப்பு இந்தியாவில் தடை செய்யப்படுவதற்கு இதுவும் ஒரு காரணம் என்று கூறப்பட்டுள்ளது. எனவேதான் தமிழர்களின் சார்பாக அந்த அமைப்புக்கு பிரதிநிதியாக நான் வாதிட வந்துள்ளேன்.
இந்தத் தடையை அமுல்படுத்துவதற்கான முகாந்திரம் எதுவும் இல்லாத நிலையில் தடை விதிப்பது எதற்காக?
மத்திய அரசின் இந்தத் தடை காரணமாக இலங்கையிலிருந்து வருகை தரும் அப்பாவி தமிழர்கள் அனைவருமே புலிகளின் ஆதரவாளர்களென வகைப்படுத்தப்பட்டு விடும் அபாயம் உள்ளது. அரசு அச்சப்படும் அளவுக்கு புலிகளாலோ அவர்களது ஆதரவாளர்களாலோ எந்த தீவிரவாதச்செயலும் இடம்பெறவில்லை. மேலும் புலிகள் அமைப்பு முற்றாக அழிக்கப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், அதன் பிரதிநிதி எப்படி இந்த விசாரணைக்கு வரமுடியும்?" என்று வைகோ வாதாடினார்.
இந்நிலையில், தமிழக அரசின் சார்பில் எஸ் தனஞ்செயன் இந்த விசாரணையில் ஆஜராகி வாதாடினார்.
அவர் தனது வாதத்தில், "விடுதலைப் புலிகள் அமைப்பு மத்திய, மாநில அரசுகளுக்கும் தலைவர்களுக்கும் எதிரானது. காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி, அவரின் மகன் ராகுல் காந்தி, மகள் பிரியங்கா காந்தி, பிரதமர் மன்மோகன் சிங், தமிழக முதல்வர் கருணாநிதி, தேசிய பாதுகாப்பு ஆலோசகர், வெளிவிவகார செயலாளர் ஆகியோருக்கு எதிரானது.
தமிழ் நாட்டில் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான நடவடிக்கைகள் இப்போதும் தொடர்கின்றன. அவர்களது அனுதாபிகள் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் இப்போதும் உயிருடன் இருப்பதாக நம்புகிறார்கள். ஐந்தாவது ஈழப் போருக்கு அவர் தலைமை தாங்குவார் என அவர்கள் நம்புகின்றனர். தனித் தமிழீழத்தை வென்றெடுக்க ஐந்தாவது ஈழப்போர் இடம்பெறுமென அவர்கள் நம்புகின்றனர். இது நாட்டின் ஐக்கியத்தையும் இறைமையையும் பாதிக்கும்.
தமிழ் உணர்வாளர்கள் என்ற பெயரில் புலிகளுக்குச் சார்பாக பொதுக் கூட்டங்கள், ஊர்வலங்கள் போன்றவற்றை நடத்துவதன் மூலம் அவர்களது நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்கும் செயல்கள் தொடர்கின்றன.
இது இறைமையான்மைக்கும் பாதுகாப்புக்கும் எதிரானவையாகும். அத்துடன், இந்திய மக்களின் பல்வேறு தரப்பினர் மத்தியில் அமைதியின்மைக்கு இது காரணமாகிவிடும்.
இப்போது தடை விலக்கப்பட்டால், எந்த நோக்கத்துக்காக 1992 இலிருந்து இரு வருடங்களுக்கு ஒருமுறை இந்தத் தடை நீடிக்கப்பட்டதோ அது அர்த்தமற்றதாகிவிடும்", என்று தமிழக அரசு கூறியுள்ளது.












Click it and Unblock the Notifications