பாலாறு, தாமிரபரணி ஆறுகளில் 'பொக்லைன்' மூலம் மணல் அள்ள அதிகாரிகளுக்குத் தடை
சென்னை: தாமிரபரணி மற்றும் பாலாறு ஆகிய ஆறுகளில் பொக்லைன் எந்திரங்களை வைத்து மணல் அள்ள முழுமையாக தடை விதித்து முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
பொதுப் பணித் துறையின் நீர்வள ஆதாரம் மற்றும் கட்டடப் பிரிவுகள் மூலம் தமிழகம் முழுவதிலும் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்டப் பணிகளின் முன்னேற்ற நிலைகள் குறித்து முதல்வர் கருணாநிதி, அதிகாரிகள் முன்னிலையில் விரிவாக ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின்போது, தலைமைச்செயலாளர் எஸ்.மாலதி, பொதுப் பணித்துறை முதன்மைச் செயலாளர் எஸ்.ராமசுந்தரம், முதலமைச்சரின் முதன்மைச் செயலாளர் (கண்காணிப்பு) கே.அலாவுதீன், நிதித் துறைச் செயலாளர் மற்றும் தலைமைப் பொறியாளர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
நீர்வள ஆதாரம் பிரிவு மூலம் மேற்கொள்ளப்படும் வெள்ளத் தடுப்புத் திட்டங்கள், மாநிலத்திற்குள் பாயும் நதிகளை இணைக்கும் திட்டங்கள், தடுப்பணை கட்டுவதன் மூலம் நிலத்தடிநீர் மட்டத்தை உயர்த்தும் திட்டங்கள் உள்பட முக்கிய திட்டங்கள் குறித்து ஆய்வுகள் செய்யப்பட்டன.
காவிரி ஆற்றின் குறுக்கே கட்டளைப் பகுதி மாயனூரில் கதவணை கட்டுவதற்கு ரூ.165 கோடி மதிப்பீட்டில் ஒப்புதல் அளிக்கப்பட்ட திட்டத்தின் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்து குறித்த காலத்தில் அந்த திட்டத்தை முடிப்பதற்குத் தக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு முதல்வர் கருணாநிதி அறிவுறுத்தினார்.
தாமிரபரணி - கருமேனி ஆறு - நம்பியாறு இணைப்புத் திட்டம் ரூ.369 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முதல்கட்ட மற்றும் 2-ம் கட்டப் பணிகளின் முன்னேற்றம் பற்றி ஆய்வு செய்த முதல்வர் கருணாநிதி, இந்தியாவின் முன்னோடித் திட்டமாகிய இந்த திட்டப் பணிகளை விரைந்து நிறைவேற்றிப் பயனுக்குக் கொண்டு வரவேண்டுமென அதிகாரிகளுக்கு ஆணையிட்டார்.
பாலாறு மற்றும் தாமிரபரணி ஆற்றுப் பகுதிகளில் தொடர்ந்து மணல் எடுத்து வருவதால் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. இந்த ஆற்றுப் பகுதிகளில் இனி வரும்காலத்தில், எந்திரங்களைப் பயன்படுத்தி மணல் அள்ளுவதை முழுமையாக தடைசெய்வதற்கும், கொள்ளிடம் ஆற்றுப் பகுதியில் அதிக அளவில் மணல் படிந்திருப்பதால் அங்கிருந்து மணல் எடுப்பதை அனுமதிப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அவர் அறிவுறுத்தினார்.
சென்னை மாநகரில் ஜவஹர்லால் நேரு நகர்ப்புற புனரமைப்புத் திட்டத்தின்கீழ் ரூ.633 கோடி மதிப்பீட்டில் மழைநீர் தேங்குவதைத் தவிர்ப்பதற்காக நடைபெற்று வரும் வடிகால் அமைக்கும் பணிகளின் முன்னேற்ற நிலைகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்து, வடகிழக்குப் பருவமழை தொடங்க இருப்பதால், மழைக் காலங்களில் மக்களுக்கு ஏற்படும் சிரமங்களை முற்றிலும் அகற்றுவதற்காக இப்பணிகளை விரைவுபடுத்துமாறும் அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.
தடுப்பணைகள் கட்டுவதன் மூலம் நிலத்தடி நீரை உயர்த்தும் திட்டப் பணிகள் நடைபெறும் பகுதிகளிலுள்ள மக்களுக்கு இந்த திட்டத்தின் பயனை விளக்கி அதன்மூலம் அவர்களின் முழு ஒத்துழைப்போடு பணிகள் நிறைவேற்றப்படுகின்றனவா என்றும், திட்டத்திற்கான வழிகாட்டு நெறிமுறைகளின்படி பணிகள் நடைபெறுகின்றனவா என்றும் கேட்டறிந்தார்.
மேலும், மண்டலம் வாரியாக திட்ட செலவினங்கள், திட்ட பணிகள் முன்னேற்றம் பற்றியும் ஆய்வு செய்தார். பரம்பிக்குளம் - ஆழியாறு திட்டத்தின் காண்டூர்க் கால்வாய்ச் சீரமைப்புப் பணிகளை மாநில அரசு நிதியிலிருந்து உடனடியாக மேற்கொள்ளுமாறும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
மிகப்பெரிய கட்டடப் பணிகளான புதிய சட்டப் பேரவை மற்றும் தலைமைச் செயலக வளாகக் கட்டடப் பணி, பெரம்பலூர், சிவகங்கை, தருமபுரி (கட்டம்-2) ஆகிய மாவட்டங்களில் நடைபெற்று வரும் புதிய மருத்துவக் கல்லூரிகளுக்கான கட்டடப் பணிகள், சென்னை எழும்பூர் அரசு மகப்பேறு குழந்தைநல மருத்துவமனை வளாக அடுக்கு மாடி கட்டடப் பணி, நர்சுகள் தங்கும் விடுதிகள், நீதி மன்றங்களுக்கான கட்டடங்கள், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மூலம் கட்டப்படும் பள்ளி, கல்லூரி விடுதிகள், நபார்டு திட்டம் மூலம் மேற்கொள்ளப்பட்டுவரும் பள்ளிகளுக்கான கட்டடப் பணிகள் உள்பட பல்வேறு பணிகள் குறித்தும் விரிவாக ஆய்வு செய்து பணிகளை விரைந்து முடிக்குமாறு அதிகாரிகளுக்கு அவர் ஆணையிட்டார்.
சென்னை அரசினர் தோட்டத்தில் கலைவாணர் அரங்கம் கட்டுவதற்கான பணிகளை உடனடியாகத் தொடங்கி, விரைவாக முடித்திடுமாறும் முதல்வர் கருணாநிதி, அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.
வெளிச்சந்தையில் சிமெண்டு விலை அதிகரித்துள்ளதால் வேறு மாநிலங்களிலிருந்து அல்லது மாற்று ஏற்பாடுகள் செய்து நியாயமான விலையில் சிமெண்டு கொள்முதல் செய்வதற்கு உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்வது எனவும் முடிவெடுக்கப்பட்டது.
ஆய்வு முடிவில், பொதுப் பணித்துறைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிதி முழுவதையும் செலவிட்டு, திட்டங்களின் பணிகளைத் தரமாகவும், உரிய காலத்திற்குள்ளும் நிறைவேற்றி முடித்திட மாவட்டங்களிலுள்ள அதிகாரிகளுக்குத் தக்க அறிவுரைகள் வழங்கி விழிப்புடன் செயல்படுமாறு அதிகாரிகளுக்கு முதல்வர் அறிவுறுத்தினார்.
முன்னதாக, பொதுப்பணித் துறையில் பணியாற்றி, பணிக்காலத்தில் மறைந்த 85 பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு 2007-ம் ஆண்டில் கருணை அடிப்படையில் பணிநியமனம் வழங்கப்பட்டதை நினைவுகூர்ந்து, மேலும் 147 பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் பணிநியமன ஆணைகளையும் முதல்வர் கருணாநிதி வழங்கினார் எனக் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications