கொசு ஒழிப்பை தீவிரப்படுத்த அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவு
துறை வாரியான ஆய்வுக் கூட்டங்களை முதல்வர் கருணாநிதி நடத்தி வருகிறார். நேற்று சுகாதாரத் துறை அதிகாரிகளுடன் ஆய்வுக் கூட்டத்தை நடத்தினார் முதல்வர்.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு...
வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ் நடைபெற்றுவரும் மருத்துவ முகாம்கள் குறித்து ஆய்வு செய்த முதல்வர் கருணாநிதி, மருத்துவ முகாம்களை அதிக அளவில் நடத்தி, கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தில் பலரும் பயனடைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும், இந்த திட்டம் பற்றிய விழிப்புணர்வை மக்களிடையே மேலும் வளர்த்திட வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.
மேலும், டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவித் திட்டத்தின்கீழ் கர்ப்பிணிப் பெண்களுக்கு வழங்கப்படும் நிதி உதவி உரிய காலத்தில் பயனாளிகளுக்குக் கிடைக்க களப்பணியாளர்கள் அறிவுறுத்தப்பட வேண்டும் என்றும்; போலி மற்றும் காலாவதி மருந்துகளின் விற்பனை அறவே ஒழிக்கப்பட, இத்தகைய செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் அறிவுரை வழங்கினார்.
இதேபோல் உணவுக் கலப்படத்தையும் தடுக்க உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதுடன், கலப்பட உணவுகளைக் கண்டுபிடித்து அவற்றை அழித்து மக்கள் பாதிக்கப்படாத வகையில் காத்திட விழிப்புடன் செயல்பட வேண்டுமென்றும்; அரசு மருத்துவமனைகளில் தேவைப்படும் மருந்துகள் போதிய அளவில் இருப்பில் உள்ளனவா என்பதை அடிக்கடிக் கண்காணித்து, மருந்து இல்லை என்ற நிலை ஏற்படாத வகையில், இருப்பினை உறுதி செய்திட வேண்டுமென்றும் ஆலோசனை கூறினார்.
அது மட்டுமல்லாமல், மருத்துவமனைகளுக்கு அரசு அனுமதித்த புதிய மருத்துவச் சாதனங்களை உடனடியாகக் கொள்முதல் செய்து அவற்றினை மக்களின் பயன்பாட்டிற்கு விரைந்து கொண்டு வரவேண்டுமென்றும்; அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஏற்படும் மருத்துவர் மற்றும் மருத்துவம் சார்ந்த பணியிடங்கள் அனைத்தையும் உடனுக்குடன் நிரப்பி, தரமான மருத்துவ சிகிச்சை மக்களுக்குக் கிடைப்பதை உறுதி செய்திட வேண்டுமென்றும் அதிகாரிகளை அவர் கேட்டுக்கொண்டார்.
நகராட்சிப் பகுதிகளில் சுகாதார வசதிகள் போதிய அளவில் கிடைப்பதை உறுதி செய்திட நகர சுகாதார மையங்களைத் தாமதமின்றி உடனடியாக ஏற்படுத்தி, சுகாதார வசதிகள் நகரத்தில் உள்ள குடிசைப் பகுதிவாழ் மக்களுக்கும் கிடைக்கச் செய்திட வேண்டுமென்றும், இதில் எவ்விதத்திலும் சுணக்கம் ஏற்படக் கூடாது என்றும் அறிவுறுத்தினார்.
அவசர கால மருத்துவ ஊர்தி 108 சேவைத் திட்டத்தினை, தேவைப்படும் இடங்களுக்கு விரிவுபடுத்திடும் வகையில் கூடுதலாக 200 ஊர்திகளை விரைந்து கொள்முதல் செய்து, இத்திட்டப் பணிகள் மேலும் செம்மையாக நடைபெற ஆவன செய்திட வேண்டுமென்றும்; பன்றிக் காய்ச்சல் காரணமாக உயிரிழப்புகள் ஏற்படுவதை முற்றிலும் தடுத்திட உரிய தடுப்பு நடவடிக்கைகளை மாநிலம் முழுவதிலும் விரைந்து மேற்கொள்ளுமாறும் ஆலோசனை வழங்கினார்.
பள்ளிச் சிறார் கண்ணொளி காப்போம் திட்டம் கடந்த ஆண்டு செயல்படுத்தப்பட்டதைப் போன்று இந்த ஆண்டிலும் செம்மையாகச் செயல்படுத்தி, தேவைப்படும் மாணவ மாணவியர்க்குக் கண் கண்ணாடிகளை உடனடியாக வழங்கிட வேண்டுமென்றும், மருத்துவமனைகளிலுள்ள அனைத்து மருத்துவக் கருவிகளும் நன்றாக இயங்குவதற்காகவும், பழுதடையும் கருவிகளை உடனடியாகச் சீரமைப்பதற்கும் சிறப்புக் கவனம் செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென்று அறிவுறுத்தினார்.
மேலும், மாநில அளவில் சிறப்பு ஆய்வுக் குழு ஒன்றை அமைத்து, அனைத்து மருத்துவமனைகளையும் அவ்வப்போது ஆய்வுகள் செய்து, சேவைகள் சிறப்பாக நடைபெறுவதை உறுதி செய்திட துறை உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென்றும் முதல்வர் கருணாநிதி ஆணையிட்டார்.
மலேரியா, டெங்கு போன்ற காய்ச்சலைக் கட்டுப்படுத்தவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாகச் சிகிச்சைகள் அளிக்கவும், துறை போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் எடுப்பதுடன், கொசு ஒழிப்புக்குச் சிறப்பு நடவடிக்கை எடுக்குமாறும் அறிவுறுத்தினார். இந்த ஆண்டிற்கானத் திட்ட நிதி ஒதுக்கீட்டில் இதுவரை 40 விழுக்காட்டிற்கும் அதிகமாக பயன்படுத்தப்பட்டு திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த ஆய்வின்போது, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், தலைமைச் செயலாளர் எஸ்.மாலதி, மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை முதன்மைச் செயலாளர் வி.கே.சுப்புராஜ், நிதித்துறை முதன்மைச் செயலாளர் கே. சண்முகம், முதலமைச்சரின் செயலாளர் (கண்காணிப்புப் பிரிவு) கே.அலாவுதீன், மாநில நலவாழ்வுச் சங்க இயக்குநர் கிரிஜா வைத்தியநாதன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



Click it and Unblock the Notifications
