ஸ்டாலின் மருமகன் அவதூறு வழக்கு: ஜெ கோர்ட்டில் ஆஜராவதில் இருந்து விலக்கு
சென்னை: துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் மருமகன் சபரீசன் தொடர்ந்த அவதூறு வழக்கில் சென்னை எழும்பூர் தலைமை பெருநகர நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவதில் இருந்து அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு உயர் நீதிமன்றம் விலக்கு அளித்துள்ளது.
காலாவதி மருந்து தொடர்பாக அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கையில், துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் மருமகன் சபரீசனுக்கு காலாவதி மருந்து கும்பல் கார் வாங்கி கொடுத்ததாகக் கூறியிருந்தார்.
இதையடுத்து சென்னை எழும்பூர் தலைமை பெருநகர நீதிமன்றத்தில் ஜெயலலிதா மீது சபரீசன் அவதூறு வழக்கு தொடர்ந்தார். இதை விசாரித்த நீதிபதி வரும் 15ம் தேதி ஜெயலலிதா நீதிமன்றத்தில் ஆஜராக சம்மன் அனுப்பினார்.
இதை எதிர்த்து ஜெயலலிதா சார்பில் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. நீதிபதி மாலா முன் இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது.
ஜெயலலிதா சார்பில் ஆஜரான நவநீதகிருஷ்ணன் வாதாடுகையில், ஜெயலலிதா பொதுமக்கள் நலன் கருதி, எந்த உள்நோக்கமும் இல்லாமல் தனது கருத்தை கூறியிருந்தார். ஆனால் இது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் நீதிபதி எந்திரகதியில் செயல்பட்டு ஜெயலலிதாவுக்கு சம்மன் அனுப்பியுள்ளார். ஜெயலலிதாவை நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிட்டதற்கு தடை விதிக்க வேண்டும் என்றார்.
இதையடுத்து நீதிபதி மாலா இந்த வழக்கில் ஜெயலலிதா நேரில் நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளித்தார். மேலும் இந்த வழக்கு விசாரணையை வரும் 15ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.












Click it and Unblock the Notifications