பஸ்களை சேதப்படுத்திய ரவுடிக் கும்பலிடமிருந்து இழப்பீடு பெற வேண்டும்-ஜெ

Subscribe to Oneindia Tamil

Jayalalitha
சென்னை: கன்னியாகுமரியிலும் சென்னையிலும் பஸ் டிரைவர்கள், கண்டக்டர் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

4.10.2010 அன்று கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட, மருங்கூர் பேரூராட்சி, ஆத்தியடி காலனியில் வசித்து வருபவரும், தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவரும், அரசு போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநராக பணிபுரிபவருமான செல்வம் ரவுடிகளால் கொடூரமாகத் தாக்கப்பட்டு இருக்கிறார்.

நாகர்கோயில்-பெருவள்ளிகடவு செல்லும் பேருந்து எண் 318ல் 4.10.2010 அன்று அவர் ஓட்டுநராக பணிபுரிந்து கொண்டிருந்த போது, நாகர்கோயிலில் இருந்து திரும்பி வரும் வழியில் சுருளோடு என்ற இடத்தில் பயங்கர ஆயுதங்களுடன் மூன்று ரவுடிகள் பேருந்தில் ஏறி, மதியழகனுக்கு எதிராக எப்படி வழக்கு தொடுத்தாய்? என்று கேட்டுக் கொண்டே ஓட்டுநர் செல்வத்தை, பயணிகள் முன்பே சரமாரியாக வெட்டியுள்ளனர்.

ரத்த வெள்ளத்தில் கிடந்த செல்வத்திற்கு பூதப்பாண்டி அரசு பொது மருத்துவமனையில் முதலில் முதலுதவி அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு முறையாக சிகிச்சை அளிக்காததன் காரணமாக தற்போது நாகர்கோயிலில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்தக் கொடூரத் தாக்குதலுக்கு காரணம், கன்னியாகுமரி மாவட்ட திமுக வழக்கறிஞர் பிரிவு துணைச் செயலாளரும், மாவட்ட அரசு கூடுதல் குற்றவியல் வழக்கறிஞருமான மதியழகன், கன்னியாகுமரி மாவட்ட திமுக துணைச் செயலாளர் அருள்ராஜ், திமுக வழக்கறிஞரும், அருள்ராஜின் மகனுமான சுதா அமர்சிங் ஆகியோர் கன்னியாகுமரி மாவட்டம், மருங்கூர் கிராமம், ஆத்தியடி காலனியில் கட்டப்பஞ்சாயத்து செய்து தண்டனை விதிப்பதையும், அபராதம் விதிப்பதையும் மேற்படி நபர்களால் தங்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்றும் தெரிவித்து, தங்களுக்கு பாதுகாப்பு வழங்கவேண்டும் என்று கோரி செல்வம் உட்பட தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த ஏழு பேர் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்திருப்பதுதான்.

இதே போன்றதொரு தாக்குதல் சம்பவம் 3.10.2010 அன்று இரவு சென்னையில் நடைபெற்றிருக்கிறது. தியாகராயநகரில் இருந்து அம்பத்தூர் செல்லும் பேருந்தின் ஓட்டுநர், சாலை குறுகலாக இருந்ததன் காரணமாக தனக்கு பின்னே வந்த வாகனத்திற்கு வழி கொடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அந்த வாகனத்தின் ஓட்டுநர் மற்றும் அதில் பயணம் செய்த அம்பத்தூர் நகராட்சி திமுக கவுன்சிலரின் மகன் செந்தில்குமார் ஆகியோர் பேருந்தின் முன் வாகனத்தை நிறுத்தி ஓட்டுநரிடமும், நடத்துனரிடமும் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கின்றனர். பின்னர், அங்கு வந்த 10 பேர் கொண்ட ரவுடி கும்பல் ஓட்டுநர்களையும், நடத்துனர்களையும் கடுமையாக தாக்கியுள்ளது.

ஐந்திற்கும் மேற்பட்ட அரசு பேருந்துகள் அடித்து நொறுக்கப்பட்டுள்ளன. பயணிகள் அனைவரும் அலறியடித்துக் கொண்டு ஓடியிருக்கின்றனர். ஆனால், தாக்கியவர்கள் மீது காவல் துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

பின்னர், 4.10.2010 அன்று போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதையடுத்து தாக்குதலுக்குக் காரணமானவர்களை காவல் துறை கைது செய்தது. இந்த அராஜகச் செயல் காரணமாக பேருந்துகள் இன்றி பொது மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். சென்னையில் நடைபெற்ற இந்தக் கொடூரத் தாக்குதலுக்கும் எனது கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மேற்படி தாக்குதல்களில் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு உயர்தர சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெற்ற தாக்குதலுக்குக் காரணமானவர்கள் உடனடியாக கைது செய்யப்பட்டு அவர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட வேண்டும் என்றும், கன்னியாகுமரி மாவட்ட அரசு கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் மதியழகனை உடனடியாக அப்பதவியில் இருந்து நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்,

சென்னையில் நடைபெற்ற சம்பவத்தில் பேருந்துகளை சேதப்படுத்தியதற்கான இழப்பீட்டை தாக்குதல் நடத்திய ரவுடிக் கும்பலிடமிருந்து பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் முதல்வர் கருணாநிதியை கேட்டுக் கொள்கிறேன்.

இது போன்ற காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்களில் படுகாயமடைந்த கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த அரசு போக்குவரத்துக் கழக ஓட்டுநர் செல்வம், மாநகர போக்குவரத்துக் கழகத்தைச் சேர்ந்த ஓட்டுநர்கள் குமாரவேலு, தினகரன், நடத்துநர் குமார் ஆகியோர் விரைவில் பூரண குணமடைந்து தங்கள் இல்லங்களுக்கு திரும்ப வேண்டும் என்ற என்னுடைய விருப்பத்தினை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+