16 எம்.எல்.ஏக்கள் சஸ்பெண்ட்: கர்நாடகத்தில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு!

கர்நாடக அரசியல் குழப்பத்தில் நேற்று அடுத்தடுத்து பல அதிரடித் திருப்பங்கள் ஏற்பட்டன. சென்னையில் முகாமிட்டிருந்த 11 அதிருப்தி பாஜக எம்.எல்.ஏக்களை நேரில் போய்ச் சந்தித்து அவர்களது ஆதரவை உறுதி செய்து கொண்டார் மதச்சார்பற்ற ஜனதாதள தலைவரும், முன்னாள் முதல்வருமான குமாரசாமி.
இதையடுத்து அதிருப்தி எம்.எல்.ஏக்கள் உள்பட யாரையும் தகுதி நீக்கம் செய்யக் கூடாது. அனைவரும் நம்பிக்கை வாக்கெடுப்பில் வாக்களிக்க அனுமதிக்கப்பட வேண்டும் என்று சபாநாயகர் போபய்யாவுக்கு உத்தரவிட்டு ஆளுநர் கடிதம் அனுப்பினார்.
இந்தநிலையில் ஆளுநரின் உத்தரவை சபாநாயகர் போபய்யா நிராகரித்து விட்டார். மேலும் அதிரடியாக 11 பாஜக அதிருப்தியாளர்கள் மற்றும் ஐந்து சுயேச்சைகளை அவர் தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டார். இதனால் அவர்களால் வாக்கெடுப்பில் கலந்து கொள்ள முடியாது.
முன்னதாக கிட்டத்தட்ட 25 எம்.எல்.ஏக்கள் தங்கள் பக்கம் இருப்பதாக அதிருப்தி பாஜகவினர் தெரிவித்திருந்தனர். இருப்பினும் 11 அதிருப்தி எம்.எல்.ஏக்கள் அதிருப்தி அணியில் இருப்பது உறுதியானது. இவர்கள் அனைவரும் தற்போது குமாரசாமியுடன் கை கோர்த்துள்ளனர்.
அனைவரும் கோவாவிலிருந்து பெங்களூர் வந்து சென்னை போய் விட்டனர். அவர்களுடன் கோவாவிலிருந்து பெங்களூர் திரும்பிய குமாரசாமி பின்னர் அவரும் சென்னை வந்தார்.
பாஜக அதிருப்தியாளர்களுடன் அவர் தீவிர ஆலோசனை நடத்தினார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் குமாரசாமி பேசுகையில், நாளை (இன்று) நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பில் எதியூரப்பா அரசு தோற்பது உறுதி. அதிருப்தி எம்.எல்.ஏக்கள் ஆட்சி கவிழ வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளனர். எனக்கு ஆதரவாக உள்ளனர்.
ஆட்சி கவிழ்ந்த பின்னர் நாளை (இன்று) மாலை அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். புதிய ஆட்சி அமைப்பது குறித்து நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. காங்கிரஸின் ஆதரவும் கோரப்படும். காங்கிரஸும் எங்களுக்கு ஆதரவு தரும் என்று நம்புகிறேன்.
அரசியலில் எதுவும் நடக்கலாம். அனைத்து விதமான வாய்ப்புகளும் அரசியலில் உண்டு என்றார் குமாரசாமி.
இந்த நிலையில்தான் கர்நாடக மாநில ஆளுநர் பரத்வாஜின் நேற்றைய உத்தரவு அமைந்தது.
நேற்று மாலை 5 மணிக்குள் அதிருப்தி பாஜக எம்.எல்.ஏக்கள் தங்களிடம் வந்து விட வேண்டும் என பாஜக கொறடா உத்தரவிட்டிருந்தார். மேலும் இந்த காலக்கெடுவுக்குள் வராதவர்களை தகுதி நீக்கம் செய்யுமாறு சபாநாயகர் போபய்யாவிடமும் பாஜக அரசு கோரிக்கை விடுத்திருந்தது.
இதையடுத்து ஆளுநர் பரத்வாஜ் அதிரடியாக ஒரு உத்தரவைப் பிறப்பித்தார். இதுதொடர்பான உத்தரவை அவர் சபாநாயகருக்கு அனுப்பி வைத்தார்.
இதுகுறித்து பரத்வாஜ் எழுதிய கடிதத்தில், நம்பிக்கை வாக்கெடுப்பு முடியும் வரை எந்த ஒரு எம்.எல்.ஏ.வையும் தகுதி நீக்கம் செய்யக் கூடாது. அனைவரையும் வாக்களிக்க அனுமதிக்க வேண்டும் என ஆளுநர் உத்தரவிட்டார்.
ஆளுநரின் இந்த உத்தரவுக்கு முன்னாள் சபாநாயகர் ஜெகதீஷ் ஷெட்டர் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். ஆளுநர் வரம்பு மீறி செயல்படுகிறார், சபாநாயகரின் உரிமையில் தலையிடுகிறார் என்று அவர் விமர்சித்தார். சபாநாயகர் போபய்யா, ஆளுநரின் உத்தரவை புறக்கணித்து விட்டார்.
16 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்திருப்பதன் மூலம் பாஜக அரசுக்கு லேசான நிம்மதிப் பெருமூச்சு ஏற்பட்டுள்ளது.
ரெட்டி சகோதரர்கள் சஸ்பெண்ட்?:
இந் நிலையில் அமைச்சர்களான ஜனார்தன ரெட்டி, கருணாகர ரெட்டி, ஸ்ரீராமுலு ஆகியோரை ஆளுநர் பரத்வாஜ் சஸ்பெண்ட் செய்துவிட்டதாக செய்தி பரவியுள்ளது.
இவர்கள் மீது சுரங்க ஊழல் வழக்கு நிலுவையில் உள்ளதால், இவர்களை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று எதிர்க் கட்சிகள் கோரி வந்தன.
இந் நிலையில் 16 எம்எல்ஏக்களை சஸ்பெண்ட் செய்து அரசைக் காக்க அரசு முயற்சிப்பதை முறியடிக்கும் வகையில் இந்த மூன்று அமைச்சர்களின் எம்எல்ஏ பதவியையும் சஸ்பெண்ட் செய்து ஆளுநர் உத்தரவிட்டுள்ளதாக செய்தி பரவியுள்ளது.
இதனால் என்ன நடக்கும் என்பது தெரியாததால், பாஜக அரசு தப்புமா என்பது இன்னும் கேள்விக்குறியாகவே உள்ளது.
இதற்கிடையே சட்டசபை அமைந்துள்ள விதானசெளதாவில் மிக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. விதானசெளதா ஊழியர்கள் காலையில் பணிக்கு வர வேண்டாம் என்று உத்தரவிடப்பட்டு, அரை நாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
பெங்களூரில் அசம்பாவிதம் ஏதும் நடக்காமல் தடுக்க 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மதுக்கடைகளை மூடவும் உத்தரவிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications