Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கர்நாடகம்: நாளை மீண்டும் வாக்கெடுப்பு-5 சுயேச்சைகள் வாக்களிக்க உயர் நீதிமன்றம் தடை

Subscribe to Oneindia Tamil

Yeddiyurappa
பெங்களூர்: கர்நாடக மாநில சட்டசபையில் நாளை நடைபெறவுள்ள 2வது நம்பிக்கை வாக்கெடுப்பில் தாங்கள் கலந்து கொண்டு வாக்களிக்க அனுமதிக்க வேண்டும் என்று கோரிய ஐந்து சுயேச்சை எம்.எல்.ஏக்களின் கோரிக்கையை கர்நாடக உயர்நீதிமன்றம் நிராகரித்து விட்டது. அவர்கள் வாக்களிக்க முடியாது என்று அது உத்தரவிட்டுள்ளது.

அதேபோல நாளை நடைபெறவுள்ள வாக்கெடுப்புக்கும் இடைக்காலத் தடை விதிக்க கோர்ட் மறுத்து விட்டது. இதனால் மயிரிழையில் முதல்வர் எதியூரப்பா தலைமையிலான பாஜக அரசு தப்பும் வாய்ப்பு உருவாகியுள்ளது.

கர்நாடக சட்டசபை சபாநாயகர் போபய்யா 11 பாஜக அதிருப்தி எம்.எல்.ஏக்கள் மற்றும் ஐந்து சுயேச்சை எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டார். அதன் பின்னர் நடந்த வாக்கெடுப்பில் குரல் வாக்கு மூலம் எதியூரப்பா அரசு பெரும்பான்மை பலத்தை நிரூபித்ததாக சபாநாயகர் போபய்யா அறிவித்தார்.

இதையடுத்து நீக்கப்பட்ட 16 பேரும் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், வழக்கை அக்டோபர் 18ம் தேதிக்கு ஒத்திவைத்தது.

இதனால் பெரும் குழப்பம் ஏறப்ட்டது. இந்த நிலையில் இன்றுகாலை உயர்நீதிமன்றப் பதிவாளர் கிருஷ்ணா பட்டை சந்தித்த ஐந்து சுயேச்சை எம்.எல்.ஏக்களின் வக்கீல் ராகவன், நாளை வாக்கெடுப்பு நடைபெறவுள்ளதால், ஐந்து பேரையும் வாக்களிக்க அனுமதிக்கும் மனு மீதான விசாரணையே இன்று மேற்கொள்ளுமாறு கோரி மனு அளித்தார்.

தற்போது உயர்நீதிமன்றத்திற்கு விடுமுறை என்பதால் தலைமை நீதிபதி கேஹரை அவரது இல்லத்தில் சந்தித்து இந்த கோரிக்கை மனுவை அளித்தார் பதிவாளர் கிருஷ்ணா பட்.

பின்னர் தலைமை நீதிபதி தலைமையிலான பெஞ்ச் ஐந்து சுயேச்சைகளின் மனுவைப் பரிசீலித்தது. பின்னர் அவர்களது கோரிக்கையை தள்ளுபடி செய்வதாக பெஞ்ச் அறிவித்தது.

அதன்படி ஐந்து பேரும் நாளை நடைபெறும் வாக்களிப்பில் கலந்து கொள்ள முடியாது. சட்டசபைக் கூட்டத்திலும் கலந்து கொள்ள முடியாது.

இந்த வழக்கின் விசாரணை அக்டோபர் 18ம் தேதிக்கே தள்ளிவைக்கப்படுவதாக பெஞ்ச் உத்தரவிட்டது.

இந்தப் புதிய உத்தரவால் எதியூரப்பா அரசு தப்புவதற்கான வாய்ப்புகள் பிரகாசமாகியுள்ளன.

105 வாக்குகள் கிடைத்தால் வெற்றி:

16 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்யப்பட்டுவிட்ட நிலையில் 224 எம்எல்ஏக்களைக் கொண்ட சட்டசபையில் இப்போதைய எண்ணிக்கை 208 ஆகக் குறைந்துவிட்டது.

இதனால் பெரும்பான்மையை நிரூபிக்க அரசுக்கு 105 எம்எல்ஏக்களின் உறுப்பினர்களின் ஆதரவு இருந்தால் போதும். சட்டப்பேரவையில் தங்களுக்கு 106 எம்எல்ஏக்களின் ஆதரவு இருப்பதாக பாஜக கூறுகிறது.

காங்கிரஸ் கட்சி்க்கு 73 எம்எல்ஏக்களும், மதச்சார்பற்ற ஜனதாதளம் 28 எம்எல்ஏக்களும் 1 சுயேச்சை எம்எல்ஏவும் உள்ளனர். இவர்களது மொத்த பலம் 102.

இதனால் வாக்கெடுப்பில் வென்றுவிடலாம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும் 5 சுயேச்சைகளில் ஒருவரான வரத்தூர் பிரகாஷ் மீண்டும் பாஜகவுக்கு ஆதரவளிக்கத் தயாராக இருப்பதாக அறிவித்துள்ளார். இதனால் பாஜக அரசு தப்புவதற்கான வாய்ப்புகள் மேலும் அதிகரி்த்துள்ளன.

கொறடா உத்தரவு பிறப்பிப்பு

இதற்கிடையே, நாளைய வாக்கெடுப்பில் அனைத்து எம்.எல்.ஏக்களும் கலந்து கொள்ள வேண்டும் என்று பாஜக கொறடா உத்தரவு பிறப்பித்துள்ளது. இதேபோல காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதாதளம் ஆகியவையும் கொறடா உத்தரவு பிறப்பித்துள்ளன.

ஆளுநர் பேட்டி

முன்னதாக நேற்று நிருபர்களிடம் பேசிய பரத்வாஜ், எதியூரப்பா தலைமையிலான பாஜக அரசுக்கு அளித்து வந்த ஆதரவை விலக்கிக் கொண்டதாக அக்டோபர் 6ம் தேதி என்னிடம் கடிதம் கொடுத்தனர். இதனால் எதியூரப்பா அரசு பெரும்பான்மையை இழந்துவிட்டது. இதையடுத்து அவரை அக்டோபர் 12ம் தேதி மாலை 5 மணிக்குள் சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்குமாறு கேட்டுக் கொண்டேன்.

அக்டோபர் 11ம் தேதி காலை 10 மணிக்கே பெரும்பான்மையை நிரூபிப்பதாக எதியூரப்பா கூறினார்.

இந் நிலையில், அரசுக்கு ஆதரவை விலக்கிக் கொண்ட 16 எம்எல்ஏக்களை பதவி நீக்கம் செய்ய சபாநாயகர் போப்பையாவிடம் பாஜக சார்பில் மனு அளிக்கப்பட்டது. இது தொடர்பாக காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதாதள கட்சித் தலைவர்கள் என்னிடம் புகார் தெரிவித்தனர்.

அதன் அடிப்படையில் சபாநாயகருக்கு நான் கடிதம் எழுதினேன். ஆனாலும் வாக்கெடுப்பு நடக்கும் முன் 16 எம்எல்ஏக்கள் பதவி நீக்கம் செய்தார் போபய்யா. இப்போது அதை எதிர்த்து எம்எல்ஏக்கள் தொடர்ந்துள்ள வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது.

ஆனால், சட்டசபையில் வாக்கெடுப்பு நடந்தபோது மேலவை உறுப்பினர்கள் சிலரும் கலந்து கொண்டுள்ளனர். வாக்கெடுப்பு குறித்த அறிவிப்பை சபாநாயகர் அறிவித்தபோது, அவையில் இருந்த மேலவை உறுப்பினர்களும் அதற்கு ஆதரவு தெரிவித்து குரல் எழுப்பியுள்ளனர்.

இந்த வாக்கெடுப்பு நிகழ்ச்சி பதிவும் செய்யப்படவில்லை. இதனால் அந்த வாக்கெடுப்பு சட்ட விரோதமானது. பெரும்பான்மையை நிரூபிப்பதில் எதியூரப்பா தோல்வி அடைந்துவிட்டார் என்பதே உண்மை.

எதியூரப்பா அரசு பெரும்பான்மையை நிரூபிக்கத் தவறிவிட்டதால் அடுத்து ஆட்சி அமைக்க வருமாறு காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதாதள தலைவர்களுக்கு அழைப்புவிடுத்தேன். ஆனால், அவர்கள் அதற்கு தயாராக இல்லை என்று கூறிவிட்டனர்.

இதனால் என்னை சந்திக்க வருமாறு எதியூரப்பாவுக்கு அழைப்பு விடுத்தேன். 4 முறை அழைப்பு விடுத்தும் அவர் வரவில்லை.

எதிர்க்கட்சிகளும் ஆட்சி அமைக்க முன்வரவில்லை. ஆனால், அவர்கள் 120 எம்எல்ஏக்கள் ஆதரவு பட்டியலை கொடுத்தனர். இதனால், கர்நாடகம் பெரும் அரசியல் சட்டச் சிக்கலை எதிர்கொண்டுள்ள நிலையில் வேறு வழியின்றி ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்துமாறு மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தேன்.

நான் எந்த கட்சிக்கும் சாதகமாக செயல்படவில்லை. அரசுக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்தே வந்திருக்கிறேன். ஆனால், எனக்கு எதிராக வீண் புரளியை கிளப்பிவிட்டு வருகின்றனர். இதனால், பெரும்பான்மையை நிரூபிக்க எதியூரப்பாவுக்கு மீண்டும் ஓர் வாய்ப்பு அளிக்க முடிவு செய்துள்ளேன். இது தொடர்பாக அவருக்கு கடிதம் அனுப்பியுள்ளேன்.

அக்டோபர் 14ம் தேதி காலை 11 மணிக்கு சட்டப்பேரவை கூட்டத்தைக் கூட்டி மீண்டும் பெரும்பான்மையை நிரூபிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளேன். இதற்கு அரசியல் சட்டத்தில் இடம் இல்லாவிட்டாலும், இந்த வாய்ப்பை கொடுத்துள்ளேன் என்றார் ஆளுநர் பரத்வாஜ்.

ஆளுநரின் இந்தக் கோரிக்கை ஆச்சரியம் அளிப்பதாக முதலில் கூறிய எதியூரப்பா, பி்ன்னர் நாளையே மீண்டும் சட்டசபையைக் கூட்டி நம்பிக்கை வாக்கு கோரப் போவதாக அறிவித்தார்.

முதலில் இதற்கு எதியூரப்பா தயாராக இல்லை. ஆனால், டெல்லியில் பாஜக தலைவர்கள் அத்வானி, நிதின் கட்கரி, அருண் ஜேட்லி, சுஷ்மா ஸ்வராஜ் ஆகியோருடன் ஆலோசனை நடத்திய பி்ன் ஆளுநர் பரத்வாஜின் கோரிக்கையை ஏற்பது என்று முடிவு செய்யப்பட்டது.

தகுதி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து இந்த ஐந்து சுயேச்சை எம்.எல்.ஏக்கள் உள்பட 16 எம்.எல்.ஏக்களும் தாக்கல் செய்துள்ள மனு மீதான இறுதி விசாரணை ஏற்கனவே உயர்நீதிமன்றம் அறிவித்தபடி அக்டோபர் 18ம் தேதி நடைபெறுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+