கலைஞர் வீடு... கவனம் அதிகம் தேவை - அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவு
சென்னை: கலைஞர் வீடு வழங்கும் திட்டப் பணிகளில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என்று அதிகாரிகளுக்கு முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டார்.
இது தொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்தி:
தமிழக முதல்வர் கருணாநிதி, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் ஆகிய துறைகளின் செயல்பாடுகளை நேற்று ஆய்வு செய்தார்.
முதலில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் பணிகளை ஆய்வு செய்த முதல்வர், 15.8.2010 சுதந்திர தினத்தன்று, நகராட்சி மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் 1,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சிறப்பு சாலைகள் திட்டம் செயல்படுத்தப்படும் என்று வெளியிடப்பட்ட அறிவிப்பின்மீது, அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளிலும் இத்திட்டத்துக்கான ஒப்பந்தப்புள்ளிகள் கோரியதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் அனைத்தையும் விரிவாக ஆய்வு செய்து பாராட்டு தெரிவித்ததுடன், இந்த சிறப்பு சாலைப்பணிகளைத் தரமான முறையில் நிறைவேற்றி, வேகமாக முடிக்க வேண்டுமென்றும் அறிவுரை வழங்கினார்.
சென்னை குடிநீர் திட்டங்கள்:
சென்னையின் குடிநீர் தேவை மற்றும் வழங்கல் குறித்து ஆய்வு செய்து, பருவமழை மற்றும் கிருஷ்ணா நதி நீர்வரத்து காரணமாக எதிர்வரும் 11 மாத காலத்துக்கு போதுமான அளவு குடிநீர் இருப்பிருப்பதைக் கருத்திற்கொண்டு, அதன்மீது தனிக்கவனம் செலுத்தி சிறப்பாக நிர்வகிக்குமாறும்; நெம்மேலியில் அமைக்கப்பட்டுவரும், தினமும் 10 கோடி லிட்டர் திறன்கொண்ட, கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தினை உரிய திட்ட காலத்துக்குள் நிறைவேற்றி முடித்திட வேண்டுமென்றும் அறிவுறுத்தினார்.
சென்னை மாநகராட்சி மற்றும் சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்று வாரியத்தில் பெறப்படும் மனுக்களில் மக்கள் கூறும் குறைகளின் மீது 24 மணி நேரத்துக்குள் தக்க நடவடிக்கை எடுத்து முடிக்குமாறு கண்டிப்புடன் அறிவுறுத்தினார்.
சென்னை மாநகராட்சி நடைமுறைப்படுத்தும் திடக்கழிவு மேலாண்மை மற்றும் சாலை சீரமைப்பு பணிகள் குறித்து எடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகளை விரைவுபடுத்துமாறும்; சென்னை மாநகராட்சி எல்லையை விரிவாக்கம் செய்யும் பணிகளை ஆய்வு செய்து, விரிவாக்கப்படும் பகுதிகளை எவ்வித சிரமமுமின்றி மாநகராட்சியுடன் இணைத்து செயல்படுத்துவதற்கு ஏற்ப ஆயத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறும்;
ஜவஹர்லால் நேரு தேசிய நகர்ப்புற புனரமைப்பு இயக்கத்தின்கீழ் நிறைவேற்றிட ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள 9 ஆயிரத்து 296 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான 310 திட்டங்களில் முடிவடைந்த 101 திட்டங்கள் நீங்கலாக, எஞ்சிய திட்டங்களை விரைந்து நிறைவேற்றிப் பயன்பாட்டுக்கு கொண்டு வருவதற்கு தேவைப்படும் மத்திய அரசின் நிதியுதவியை கோரி பெறுவதற்கு உரிய தொடர் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு ஆணை பிறப்பித்தார்.
ராமநாதபுரம் கூட்டுக்குடிநீர் திட்டத்தினுடைய பயன்கள் முழுமையாக அனைத்து குடியிருப்பு பகுதிகளுக்கும் கிடைக்கும் வகையில் உரிய தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறும்; ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டப்பணிகளின் முன்னேற்றத்தினை ஆய்வு செய்து, குறித்த காலத்துக்குள் திட்டத்தின் அனைத்து பணிகளையும் முடித்து மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டுமென்றும்; புதிதாக அனுமதிக்கப்பட்டுள்ள மேலூர், விருதுநகர், காங்கேயம், வேலூர் கூட்டுக்குடிநீர் திட்டங்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்;
பாதாள சாக்கடை பணி-திருப்தி இல்லை:
நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் தற்போது நடைமுறைப்படுத்தப்படும் பாதாளச் சாக்கடைத் திட்டப்பணிகளின் முன்னேற்றம் திருப்திகரமாக இல்லாததால், இனிவரும் காலங்களில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை வரும் நகரங்களில் மட்டும் இத்திட்டத்தினைச் செயலாக்கத்துக்கு எடுத்துக்கொள்ள வேண்டுமென்றும் அதிகாரிகளுக்கு அறிவுரைகள் வழங்கினார்.
தஞ்சைப் பெரிய கோவிலின் 1000-வது ஆண்டு விழாவினையொட்டி, தஞ்சாவூர் நகராட்சிப் பகுதிகள் மேம்பாட்டிற்காக அறிவிக்கப்பட்ட உள்கட்டமைப்பு பணிகளில் முடிக்கப்பட்ட பணிகள் நீங்கலாக, இதர கட்டமைப்பு பணிகளையும் குறித்த காலக்கெடுவிற்குள் முடிக்க வேண்டுமென அதிகாரிகளுக்கு ஆணையிட்டார்.
அனைத்து பேரூராட்சிகளிலும் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்திடும் அனைத்து பேரூராட்சி அண்ணா மறுமலர்ச்சி திட்டப்பணிகள் முன்னேற்றத்தில் இருப்பது குறித்து மகிழ்ச்சி தெரிவித்து, மேலும் இத்திட்டத்தினைச் சிறப்பாக செயல்படுத்திட அறிவுரைகள் வழங்கினார்.
அடையாறு பூங்கா:
முடிவடையும் நிலையிலுள்ள அடையாறு பூங்கா பணிகளை வரும் தமிழ்ப் புத்தாண்டு நாளன்று பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவரத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அறிவுறுத்தினார்.
தொடர்ந்து, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை குறித்த ஆய்வினை மேற்கொண்ட முதல்வர், தமிழக அரசின் புரட்சிகரமான கலைஞர் வீடு வழங்கும் திட்ட முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்தார்.
இத்திட்டப்பணிகளில் ஒவ்வொரு அதிகாரியும் சிறப்பு கவனம் செலுத்தி வீடுகள் தரமானதாகவும், விரைவாகவும் கட்டப்படுவதை உறுதி செய்து, பயனாளிகள் வசம் அவை ஒப்படைக்கப்பட வேண்டுமென உத்தரவிட்டார்.
மேலும், கட்டுமானப் பொருள்களின் விலை உயர்வைக் கட்டுப்படுத்தி பயனாளிகளுக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்குமாறும் அறிவுறுத்தினார். பயனாளிகளுக்கான பட்டியல் தொகை வீடுகளின் முன்னேற்றத்துக்கேற்றவாறு உடனுக்குடன் வழங்கப்பட வேண்டுமெனவும், அதிகாரிகள் இதனைத் தொடர்ந்து கண்காணித்து வருவது அவசியம் என்றும் அறிவுறுத்தினார்.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் தொழிலாளர்கள் அனைவருக்கும் ஊதியம் குறித்த காலக்கெடுவான ஒரு வாரகாலத்துக்குள் விநியோகிக்கப்படுவதை உறுதி செய்வதோடு; பணிகள் தரமாக நிறைவேற்றப்படுவதை கண்காணிக்குமாறும் உத்தரவிட்டார். மேலும், விவசாயப் பணிகள் பாதிக்கப்படாத வகையில் திட்டத்தைச் செயல்படுத்துமாறும் அறிவுறுத்தினார்.
சமத்துவபுரங்கள்
அனைத்துக் கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டப்பணிகள் அனைத்தையும் ஜனவரி மாத இறுதிக்குள் முடித்திட வேண்டும் எனவும், ஏற்கனவே உருவாக்கப்பட்ட கட்டிடங்களை முறையாக பராமரித்து வரவேண்டும் எனவும், நூலகங்களைப் பொதுமக்கள் அனைவரும் பயன்படுத்திடும் வண்ணம் போதிய அளவில் நூலகர்களைப் பணியில் அமர்த்திட வேண்டும் எனவும் வலியுறுத்தினார். 2009-2010-ம் ஆண்டில் தொடங்கப்பட்டு முன்னேற்றத்திலுள்ள 15 சமத்துவபுரங்களுக்கான வீடுகளை நவம்பர் மாதத்துக்குள் கட்டி முடித்து உடனடியாக பயனாளிகள் வசம் ஒப்படைத்திட வேண்டும் எனவும், 2010-2011-ம் ஆண்டில் எடுக்கப்பட்டுள்ள 36 சமத்துவபுரங்களும் பிப்ரவரி மாதத்துக்குள் முழுமையாக முடிக்கப்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.
பாரதப் பிரதமர் சாலைகள் மேம்பாட்டு திட்டம், நபார்டு சாலைப்பணிகள் திட்டம் போன்ற திட்டங்களின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற சாலைப் பணிகளைத் தரமாக நிறைவேற்றி முடித்திட விரைவுபடுத்திட வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.
திட்ட காலத்துக்குள் முடிக்க...
சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டம், ஊரக உள்கட்டமைப்புகள் திட்டம், ஊராட்சி ஒன்றியப்பள்ளிகள் சீரமைப்பு திட்டம் போன்ற திட்டங்களின் மூலம் எடுக்கப்பட்ட அனைத்து உட்கட்டமைப்பு தொடர்பான பணிகளையும் முடித்து விரைவாகப் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் எனவும் முதல்வர் அறிவுறுத்தினார்.
ராஜீவ்காந்தி மறுவாழ்வு திட்டத்தின்கீழ் திட்டமிடப்பட்ட 21 ஆயிரத்து 386 வீடுகளில் கட்டி முடிக்கப்பட்ட 16 ஆயிரத்து 869 வீடுகளுடன், எஞ்சிய 4 ஆயிரத்து 517 வீடுகளையும் விரைவாக முடித்து பயனாளிகளிடம் ஒப்படைக்குமாறும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
உலக வங்கி நிதியுதவியுடன் செயல்படுத்தப்படும் அவசர கால மறுகட்டமைப்பு திட்டத்தின்கீழ் எடுக்கப்பட்டுள்ள 15 ஆயிரத்து 56 வீடுகளையும், திட்ட காலத்திற்கு முன்பாகவே முடித்து பயனாளிகளுக்கு ஒப்படைத்திடும் வகையில் பணிகளை முடுக்கிவிடுமாறும் உத்தரவிட்டார்.
சுழல் நிதி
மகளிர் மேம்பாட்டு திட்டம் மற்றும் வாழ்ந்து காட்டுவோம் திட்டங்களின் செயல்பாடுகளை ஆய்வு செய்த முதல்வர் கருணாநிதி, சுயஉதவி குழுவினருக்கு வழங்கப்பட வேண்டிய சுழல் நிதி மற்றும் பொருளாதாரக் கடனுதவிகளை டிசம்பர் மாதத்துக்குள்ளாகவே வழங்கிட விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் உத்தரவிட்டார். குறிப்பாக, மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு சுயஉதவி குழுக்களை அமைப்பதிலும், அவர்களுக்கான சுழல்நிதி மற்றும் பொருளாதாரக் கடன் ஆகியவற்றை விரைந்து பெற்றுத்தருவதோடு, அரசின் பிற நலத்திட்ட உதவிகள் அவர்களுக்கு கிடைப்பதற்கும் உடனடியாக நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டுமெனவும் முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டார்.
இந்த ஆய்வில் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், தலைமைச் செயலாளர் எஸ்.மாலதி, நிதித்துறை முதன்மைச் செயலாளர் க.சண்முகம், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை முதன்மைச் செயலாளர் கா.அலாவுதீன், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மைச் செயலாளர் க.அசோக்வர்தன் ஷெட்டி, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் இயக்குநர் உதயச்சந்திரன், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவன மேலாண்மை இயக்குநர் டாக்டர் கே.கோபால், சென்னை பெருநகர குடிநீர் வாரிய நிர்வாக இயக்குநர் ராஜேஷ் லக்கானி, தமிழ்நாடு நகர்ப்புற நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டுக் கழகத்தின் நிர்வாக இயக்குநர் ஹிதேஷ்குமார் மக்வானா, தமிழ்நாடு நகர்ப்புற உள்கட்டமைப்பு நிதி சேவை நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மற்றும் முதன்மைச் செயல் அலுவலர் க.பணீந்திர ரெட்டி, நகராட்சி நிர்வாக இயக்குநர் டாக்டர் செந்தில்குமார், பேரூராட்சிகள் இயக்குநர் டி.ராஜேந்திரன், சென்னை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
ரூ.1 கோடியே 86 லட்சம்
இந்த ஆய்வுக்கு முன்னதாக, டுபிட்கோ நிறுவனத்தின் சார்பில் அதன் நிகர லாபத்தில் ஆதாய பங்குத் தொகையாக ஒரு கோடியே 86 லட்சம் ரூபாய்க்கான காசோலையை, முதல்-அமைச்சரிடம் துணை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.
இவ்வாறு அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.
-
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
90, 60, 55, 25: தமிழகத்தின் அடுத்த முதல்வர் இவர்தான்? 2 துணை முதல்வர்கள் யார்? பலே பாஜக.. அப்ப விஜய் -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க -
பாஜக - தவெக கூட்டணி உருவாகிறதா? திமுகவை வீழ்த்த பம்பர் ஆஃபர் 60 சீட், மெகா பொறுப்பு? டெல்லி பலே மூவ் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
"இந்த" 2 பேருக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்.. டி20 உலக கோப்பை வெற்றிக்கு பின் கம்பீர் சொன்ன வார்த்தை -
கருணாஸ் பாஜகவுக்கு விட்ட சவால்.. "இந்து மதமே கிடையாது" அதிர்ச்சியில் உறைந்த இந்து முன்னணி! -
நாலாபக்கமும் நெருக்கடி.. பாஜக கூட்டணிக்கு வருகிறாரா விஜய்? நயினார் நாகேந்திரனே கொடுத்த பதில் -
பாஜக கூட்டணி வர்றீங்களா? இல்ல கடையை சாத்துறீங்களா? விஜய்க்கு டெல்லி டெட்லைன்.. சிபிஐ பிடியில் தவெக! -
விஜய்க்கு இரட்டை அதிர்ச்சி.. சினிமா, அரசியல் இரண்டிலும் ஒரே நாளில் விழுந்த பேரிடி












Click it and Unblock the Notifications