திமுக கூட்டணியைக் கெடுக்கும் வகையில் நடக்கிறார் திருமாவளவன்-தங்கபாலு

Subscribe to Oneindia Tamil

Thangabalu
சென்னை: காங்கிரஸ்-தி.மு.க. உள்ளிட்ட கட்சிகளின் வலுவான கூட்டணி உள்ள இன்றைய நிலையில் அக்கூட்டணி மூலம் பதவியைப் பலனாக பெற்ற திருமாவளவன் கூட்டணியை கெடுக்கிற வகையிலும், குழப்பத்தை ஏற்படுத்தும் முறையிலும் பேசுவது, நடந்துகொள்வது நாகரீகமாகாது என்று கூறியுள்ளார் தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு.

காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் இடையிலான மோதல் அரசியல் அரங்கில் பல கேள்விகளை எழுப்பத் தொடங்கியுள்ளன. நேற்று திருமாவளவன், சென்னை ராஜீவ் காந்தி சிலை அவமதிப்பு தொடர்பாக விளக்கம் அளித்திருந்தார். அதில் காங்கிரஸை சாடியிருந்தார். திமுக கூட்டணியைக் குலைக்கப் பார்க்கிறது காங்கிரஸ் என்று கூறியிருந்தார். தன்னை கூட்டணியை விட்டு விரட்ட சதி நடப்பதாகவும் அவர் குற்றம் சாட்டியிருந்தார்.

இதற்குப் பதிலளித்துள்ளார் தங்கபாலு. இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை:

அண்மையில் திருமாவளவன் ஒரு நிகழ்ச்சியிலும், ஒரு பத்திரிகைப் பேட்டியிலும் காங்கிரஸ் பேரியக்கம் மற்றும் அதன் தலைவர்களுக்கு எதிராக பல்வேறு செய்திகளை தெரிவித்திருக்கிறார்.

நாட்டில் யார் வேண்டுமானாலும், எதை வேண்டுமானாலும் பேசலாம், எழுதலாம் என்ற பேச்சுரிமை, எழுத்துரிமை, வாழ்வுரிமையை பெற்றுத்தந்தது காங்கிரஸ். திருமாவளவன் அவ்வுரிமையைப் பயன்படுத்தி அத்துமீறிய அரசியல் விமர்சனங்களை அள்ளித்தெளித்திருக்கிறார்.

அவருக்கு இருக்கும் பேச்சுரிமை மற்றவருக்கும் உண்டு என்ற குறைந்தபட்ச நியாயத்தையும், சட்டம் வகுத்தளித்த அவ்வுரிமைகளுக்கு ஒரு எல்லை, வரம்பு உண்டு என்பதையும் ஒரு கட்சித்தலைவர் என்ற முறையில் அவர் தெளிவாகப் புரிந்துகொள்ளவேண்டும்.

அவரது பாட்டன் முப்பாட்டன் வளர்த்த கட்சி காங்கிரஸ் என்றும், அக்கட்சி பற்றி பேச தனக்கு உரிமை உள்ளது எனறும் கூறியுள்ள திருமாவளவன் காங்கிரஸ் உடனான கூட்டணி குறித்து முதல்வர் கருணாநிதிக்கே அறிவுரை வழங்கியிருக்கிறார்.

70 ஆண்டுகால அரசியல் அனுபவமும், இந்திய அரசியலில் மூத்த தலைவர்களுள் ஒருவருமான கலைஞருக்கு அறிவுரை கூறியிருப்பது மிகப்பெரிய கேலிக்கூத்தாகும்.

காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரை அரசியல் தோழமையை-கூட்டணியை போற்றி மதிக்கிற பேரியக்கம். தான் ஆதரிக்கிற கட்சி ஆட்சியில் வலுவாக இருப்பதற்கு எள்ளளவும் குறையாத, குன்றாத அர்ப்பணிப்பு உணர்வோடு உறுதுணைபுரியும் கட்சி காங்கிரஸ். இதை நாடறியும்-மக்கள் அறிவர்.

அப்பெருமைக்குரிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தியை தியாகத்தின் திருவிளக்கு என்று முதல்வர் கருணாநிதி பலமுறை போற்றியுள்ளார். இந்நிலையில் திருமாவளவனின் தரமிழந்த பேச்சால் சோனியா காந்தி, தலைவர் ராகுல்காந்தி ஆகிய தலைவர்களுக்கும், காங்கிரசுக்கும் கிஞ்சித்தும் களங்கம் கற்பித்துவிடமுடியாது.

சிறப்பாக சட்ட மாமேதை அம்பேத்காரை நாட்டிற்கு முன்னிலைப்படுத்தி அவர் மூலம் இந்திய அரசியல் சாசனம் உருவாக வழிவகுத்ததும், அவரை முதல் இந்திய சட்ட அமைச்சராக நியமித்ததும், மரியாதைக்குரிய கே.ஆர்.நாராயணனை இந்திய குடியரசு துணைத்தலைவர், குடியரசு தலைவர் என்று அமர்த்தி அழகு பார்த்ததும் காங்கிரஸ் கட்சி. காங்கிரஸ் வரலாறு இவ்வாறு சிறப்பு பெற்றிருக்க, நேற்று அரசியலுக்கு வந்த திருமாவளவன் காங்கிரசை விமர்சிக்கலாமா? அவருக்கு ஏது உரிமை?

தமிழ்நாடு காங்கிரஸ் யார் தோளிலாவது சவாரி செய்யும் கட்சி என்று புலம்பியிருக்கிறார். காங்கிரஸ் கட்சி வெற்றி-தோல்விகளை கண்டு துவண்டு போனதில்லை. 1967-ம் ஆண்டுக்கு பிறகு தமிழகத்தில் பெரும்பாலான ஆட்சி சக்கரத்தின் அச்சாணியாக இருந்து தொடர்ந்து இன்றுவரை தொய்வில்லாமல் மக்கள் தொண்டாற்றிவருவது காங்கிரஸ்.

தமிழகத்தின் குக்கிராமம் உள்பட அனைத்து பகுதியிலிருக்கும் வாக்குச்சாவடிகள் வாரியாக உறுப்பினர்கள் அனைவரின் புகைப்பட அடையாளங்கள், முகவரிகளை கணினி மூலம் பதிவாக்கி பட்டியலை வெளியிட்ட இயக்கம் காங்கிரஸ். இந்நிலையில் தலைவர் மூப்பனாரால் அறிமுகப்படுத்தப்பட்டு அரவணைக்கப்பட்ட திருமாவளவன் காங்கிரஸ் கட்சிக்கு எதிராகவும், கூட்டணி தர்மத்துக்கு விரோதமாகவும், எகத்தாளமாக பேசுவது நடந்து கொள்வது நல்ல மரபல்ல, பண்பல்ல.

அடிப்படையில் காங்கிரஸ் முழு வரலாறை படித்தறியாமல் பேசும் அவர் என்றைக்கும் கக்கனுக்கு உண்மையான பேரனாக இருக்கமுடியாது. அவரது நடவடிக்கை காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணிக்கு இழைக்கிற துரோகம்.

சோனியா காந்தியின் வழிகாட்டுதலில் பிரதமர் மன்மோகன்சிங் தலைமையிலான மத்திய அரசு இந்திய அளவிலும், முதல்வர் கருணாநிதியின் இணக்கமான ஒத்துழைப்போடு தமிழகத்திலும் மிகச்சிறப்பான மக்கள் நலத்திட்டங்களை குறிப்பாக தலித் மக்களின் அற்புத மேம்பாட்டிற்கான செயல்பாடுகளை நடைமுறைப்படுத்தி வருகிறது.

அரசியலில் காங்கிரஸ்-தி.மு.க. உள்ளிட்ட கட்சிகளின் வலுவான கூட்டணியும் உள்ள இன்றைய நிலையில் அக்கூட்டணி மூலம் பதவியைப் பலனாக பெற்ற திருமாவளவன் கூட்டணியை கெடுக்கிற வகையிலும், குழப்பத்தை ஏற்படுத்தும் முறையிலும் பேசுவது, நடந்துகொள்வது நாகரீகமாகாது. அவசர கோலத்தில் அள்ளித்தெளிக்கும் வகையில் உண்மைக்குப் புறம்பாகப் பேசி, செயல்படும் அவரது இந்த நடவடிக்கையை இனி நிறுத்திக் கொள்ளவேண்டும் என்று கூறியுள்ளார் தங்கபாலு.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+