பேச்சுவார்த்தையில் உடன்பாடு-என்எல்சி தொழிலாளர்கள் ஸ்டிரைக் வாபஸ்

உடன்பாட்டின்படி, ஊழியர்களின் தினசரி சம்பளம் ரூ. 288 (தற்போது ரூ.228 ஆக உள்ளது) ஆக உயர்த்தப்படுகிறது. போனஸாக 8.33 சதவீதமும், கருணைத் தொகையாக ரூ.1000மும் அளிக்கப்படும். சலவைப்படி ரூ. 25ம், மழைக் கோட் வாங்க ரூ.300ம் தரப்படும் என உடன்பாடாகியுள்ளது.
என்.எல்.சி. நிறுவனத்தில் ஒப்பந்த தொழிலாளர்கள் 13 ஆயிரம்பேர் வேலைபார்க்கிறார்கள். அவர்கள் சம்பள உயர்வு உள்ளிட்ட பல அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த போராட்டம் கடந்த மாதம் 19-ந்தேதி தொடங்கப்பட்டது. நேற்று 40-வது நாளாக போராட்டம் நடந்தது.
போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர முதல்வர் தலையிட வேண்டும் என பல்வேறு கட்சிகளும் கோரிக்கை விடுத்தன. மத்திய அரசு தலையிட வேண்டும் என ஜெயலலிதா கோரியிருந்தார். இந்த நிலையில் தொழிற்சங்கத்தினர் முதல்வரை சந்தித்துக் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து முதல்வர் இதில் தலையிட்டார்.
இது தொடர்பாக மத்திய அரசுடன் பேசி நல்ல முடிவு எடுக்க இருப்பதாகவும் அதற்கு ஏற்ப நல்ல சூழ்நிலையை உருவாக்கும் வகையில் போராட்டத்தை விலக்கி கொள்ளவேண்டும் என்றும் தொழிற்சங்கத்தினரை முதல்வர் கேட்டுக் கொண்டார்.
இருப்பினும் உடனடியாக போராட்டத்தை விலக்கிக் கொள்ள தொழிற்சங்கத்தினர் முன்வரவில்லை.
இதையடுத்து நேற்று சென்னையில் உள்ள என்.எல்.சி. விருந்தினர் மாளிகையில் என்.எல்.சி. நிர்வாகம், தொழிற்சங்க நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியது.
என்.எல்.சி. தரப்பில் என்.எல்.சி. இயக்குனர் (நிதி) சேகர், பொது மேலாளர் ராயப்பா கலந்து கொண்டனர். தொ.மு.ச. தலைவர் செ.குப்புசாமி, பொதுச்செயலாளர் சண்முகம், ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட செயலாளர் எம்.சேகர், ஜீவா ஒப்பந்த தொழிலாளர்கள் சங்க பொதுச்செயலாளர் கே.வெங்கடேசன், அ.தி.மு.க. சார்பில் எம்.எல்.ஏ. சின்னச்சாமி, பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் வேல்முருகன் எம்.எல்.ஏ., பாட்டாளி தொழிற்சங்க பொதுச்செயலாளர் திலகர், ஐ.என்.டி.யு.சி.செயலாளர் ராஜேந்திரன், சி.ஐ.டி.யு. செயலாளர் எத்திராஜ், ம.தி.மு.க. (எம்.எல்.எப்) எம்.பிச்சை, முருகப்பன், விடுதலை சிறுத்தைகள் சார்பில் கே.பி.குமார், தே.மு.தி.க. சார்பில் பேராசிரியர் வி.சி.சண்முகம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
காலையில் நடந்த பேச்சுவார்த்தைக்குப் பின்னர் மாலையில் 2வது கட்டப் பேச்சுவார்த்தை நடந்தது.இரவு பத்து மணியளவில் உடன்பாடு ஏற்பட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திடப்பட்டது.












Click it and Unblock the Notifications