அதி தீவிர 'ஜல்' புயல் பலவீனமடைந்தது-இன்றிரவு சென்னையில் கரையைக் கடக்கிறது

இதுதொடர்பாக இன்று பிற்பகல் இரண்டரை மணியளவில் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள சிறப்பு செய்தி அறிக்கை:
அதி தீவிர புயல் சின்னமான ஜல் புயல் தற்போது வலுவிழந்து புயல் சின்னமாக மாறி தொடர்ந்து வட மேற்கு திசையில் உள்ளது. இன்று பிற்பகல் வாக்கில் அது வங்கக் கடலில் தென் மேற்கு திசையில், சென்னைக்கு 250 கிலோமீட்டர் தொலைவில் மையம் கொண்டிருந்தது.
இது தொடர்ந்து மேற்கு வட மேற்கு திசதையில் மேலும் வலுவிழந்த நிலையில் நகரும். வடக்கு தமிழகம், தெற்கு ஆந்திரப் பிரதேசப் பகுதியில் சென்னைக்கும், நெல்லூருக்கும் இடையே ஒரு புயலாக இன்று இரவு வாக்கில் அது கரையைக் கடக்கும். சென்னையை ஒட்டி புயல் கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் தாக்கம் காரணமாக, அடுத்த 24 மணி நேரத்தில் வடக்கு தமிழகம், புதுச்சேரி மாநிலங்களில் பெரும்பாலான இடங்களில் கன மற்றும் மிக கனத்த மழை பெய்யும். சில இடங்களில் கன மழை பெய்யும்.
வடக்கு தமிழகத்திலும், புதுச்சேரி, தெற்கு ஆந்திரப் பிரதேச பகுதிகளில் அடுத்த 12 மணி நேரத்தில் மணிக்கு 80 முதல் 90 கிலோமீட்டர் வேகத்தில், பலத்த சூறைக் காற்று வீசும். இது புயல் நெருங்கும் சமயத்தில் 100 கிலோமீட்டர் வேகமாக அதிகரிக்கும்.
கடல் மிகவும் கொந்தளிப்பாக காணப்படும். கடல் காற்றும் பலமாக வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்குள் போகக் கூடாது என எச்சரிக்கப்படுகின்றனர்.
புயல் கரையைக் கடக்கும்போது கடலில் 1 மீட்டர் உயரத்திற்கு அலைகள் வீசும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
புயல் வலுவிழந்தபோதிலும், சென்னையை நெருங்கி வருவதன் காரணமாக சென்னை நகரிலும், வடக்குக் கடலோரப் பகுதிகளிலும் பேய் மழை பெய்யத் தொடங்கியுள்ளது.
வட தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளிலும் மிக பலத்த மழை பெய்து வருகிறது. புதுச்சேரியில் பலத்த மழை விளாசி வருகிறது.
சென்னை, எண்ணூர் துறைமுகங்களில் 10ம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. புதுச்சேரியில் 3ம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
இதேபோல தூத்துக்குடி, குளச்சல், பாம்பன் உள்ளிட்ட அனைத்துத் துறைமுகங்களிலும் 3 எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
கடலூரில் நேற்று மாலை, திடீரென 200 மீட்டர் தூரம் கடல் நீர் தரைப் பகுதிக்கு வந்தது. கடலூர் தேவனாம்பட்டினம் சில்வர் பீச் முழுவதும் கடல் நீரில் மூழ்கி விட்டது.
கடற்கரையில் இருந்து 250 மீட்டர் தொலைவில் இருக்கும் சில்வர் பீச் போலீஸ் புறக்காவல் நிலையம் வரை, இரவு 7 மணிக்கு கடல்நீர் புகுந்து விட்டது.
சோனங்குப்பம், சிங்காரத்தோப்பு, பெரியக்குப்பம், தம்பணாம்பேட்டை, ரெட்டியார் பேட்டை உள்ளிட்ட மீனவர் கிராமங்களில் கடல்நீர் வீடுகள் வரை வந்து விட்டது.
இதனால் பல மீன்பிடிப் படகுகள் கடலுக்குள் அடித்துச் செல்லப்பட்டன. தகவலறிந்ததும் மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன், எஸ்.பி. அஸ்வின் கோட்னீஸ் ஆகியோர் அங்கு வந்து கடலோரப் பகுதியில் குடியிருக்கும் மீனவர்களை உடனடியாக அங்கிருந்து வெளியேற்றினர்.
அதே போல சென்னை பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம், திருவொற்றியூர், எண்ணூர் உள்ளிட்ட பகுதிகளில் குடியிருப்புப் பகுதிக்குள் நேற்றிரவு கடல் நீர் புகுந்தது.
புயல் காரணமாக கடலோரப் பகுதிகள் மட்டுமின்றி மருங்காபுரி, மதுரை, விருதுநகர், திருமங்கலம், தாளவாடி, மணப்பாறை, அருப்புக்கோட்டை, கமுதி, ஆத்தூர், மேட்டூர் அணை, கோவை, தாராபுரம், கரூர், பரமத்தி, மேலூர், பேராவூரணி, திருவையாறு, தஞ்சாவூர், முதுகுளத்தூர், செங்கோட்டை, பவானி சாகர், சத்தியமங்கலம், காங்கேயம், லால்குடி, உசிலம்பட்டி, வாடிப்பட்டி, கூடலூர், சிவகங்கை ஆகிய இடங்களிலும் கன மழை பெய்து வருகிறது.
நீரில் மிதக்கும் சென்னை
புயல் நெருங்கி வருவதால் சென்னை நகரில் மழை வேகமாக வலுத்து வருகிறது. அடுத்த 24 மணி நேரத்திற்கு சென்னை மற்றும் வடக்கு கடலோரப் பகுதிகளில் பலத்த அல்லது மிக பலத்த மழை பெய்யும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
சென்னை முழுவதும் வெள்ளக்காடாகியுள்ளதால் முக்கியச் சாலைகளில் போக்குவரத்து பெருமளவில் ஸ்தம்பித்துள்ளது. மக்கள் நடமாட்டம் அறவே இல்லாத நிலை காணப்படுகிறது. வெளியில் போக முடியாத அளவுக்கு மழை கொட்டிக் கொண்டிருக்கிறது.
அண்ணா நகர், சாந்தோம் பகுதிகளில் மரங்கள் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சென்னை மெரீனா, பெசண்ட் நகர் எலியட்ஸ் கடற்கரையில் அலைகள் அதிக உயரத்தில் எழும்பியதாலும் கடல் கொந்தளிப்பாகக் காணப்பட்டதால், கடலுக்குள் குளிக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. எச்சரிக்கையை மீறி கடலில் குளித்த இளைஞர்களை போலீஸார் விரட்டியடித்தனர்.
கடலரோத் தமிழகம் மட்டுமல்லாமல் தமிழகத்தின் தென் மாவட்டங்கள், காவிரி டெல்டா மாவட்டங்கள் உள்ள கிட்டத்தட்ட ஒட்டுமொத்த தமிழகமும் ஜல் புயல் காரணமாக கடும் மழையில் சிக்கி ஸ்தம்பித்துள்ளது.
மயிலாப்பூரில் ஒருவர் பலி
இயல்பு வாழ்க்கை தலைநகர் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளது. மயிலாப்பூரில் மரம் விழுந்ததில் ஒருவர் சிக்கி பலியானார். பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதால் இயல்பு வாழ்க்கை பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது.
இன்று இரவு புயல் கரையைக் கடக்கவுள்ளதால் மக்களிடையே சற்று அச்ச நிலைமை காணப்படுகிறது.
குறிப்பாக வட சென்னை மக்கள்தான் அச்சத்தில் உள்ளனர். காரணம், வட சென்னையில்தான் காற்று பலமாக வீசும், கடல் கொந்தளிப்புடன் இருக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
நேற்றே திருவொற்றியூர், எண்ணூர், பட்டினப்பாக்கம் பகுதிகளில் கடல் நீர் வீடுகளுக்குள் புகுந்ததால் பல ஆயிரக்கணக்கானோர் பத்திரமான பகுதிகளுக்கு அகற்றப்பட்டனர்.
அவசர உதவிக்கு
வெள்ள பாதிப்பு குறித்து அவசர உதவிகளுக்கு 044-25386386 மற்றும் 2561 9336 ஆகிய தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications