Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திமுக, காங்கிரஸ் கூட்டணியை முறிக்கவே ராஜாவுக்கு குறி வைக்கப்பட்டுள்ளது-வீரமணி

Subscribe to Oneindia Tamil

சென்னை: திமுக காங்கிரஸ் கூட்டணியை முறிக்க வேண்டும் என்ற ஒரே எண்ணத்தில்தான் அமைச்சர் ராஜாவைக் குறி வைத்து செயல்படுகின்றனர் என்று தி.க. தலைவர் கி.வீரமணி குற்றம் சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக வீரமணி வெளியிட்டுள்ள நீண்ட அறிக்கை:

மத்திய தகவல் தொடர்புத்துறை அமைச்சர் ஆ.ராசாவை பதவி விலக வைத்து, அதன்மூலம் தி.மு.க.விற்குப் பழியை களங்கத்தை ஏற்படுத்த வேண்டுமென்பது, வெறும் வாயை மெல்லும் எதிர்க்கட்சியினருக்கு அவலாவது கிடைக்காதா என்ற ஏக்கத்துடன் திட்டமிட்டு நடத்தப்படுவதாகும். இதில் உள்ள முக்கிய காரணம் உயர் ஜாதி ஆதிக்கவாதிகளான அரசியல் கட்சிகள், ஊடகங்கள், தொலைக்காட்சியினருக்கு மத்திய அமைச்சர் ஆ.ராசா ஒரு தாழ்த்தப்பட்ட சமூகத்தவர் என்பதேயாகும்.

இரண்டாவது, தி.மு.க.வை காங்கிரஸ் கூட்டணியிலிருந்து எப்படியாவது வெளியேற்றிவிட இதுவரை செய்த முயற்சிகள் காங்கிரஸ் தலைமை, தி.மு.க.வின் நம்பகத்தன்மை, நாணயம் மிக்க நட்புறவு இவற்றை மதித்து பலிக்க இடந்தராமல், தொடர்ந்து ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் தி.மு.க.வும், காங்கிரசும் நல்ல நட்புறவுடன் இருக்கும் என்று புரிய வைத்துவிட்டதால், காங்கிரஸ் கட்சியுடன் தமிழ்நாட்டில் கூட்டுச் சேர தனது பல்லவி, அனுபல்லவி எல்லாம் முடிந்து சரணம் பாடியும் அ.தி.மு.க.விற்கு அழைப்பு வராது போலுள்ளதே என்று கருதிய ஜெயலலிதா, இப்படி இதை சாக்காக பிடித்துக்கொண்டு, ஊழலை ஒழிக்க திடீரென 'பரசுராம அவதாரியாக" ஆர்ப்பரிக்கிறார்!

மற்ற அரசியல் கட்சிகளும் காங்கிரஸ் தலைமையில் உள்ள கூட்டணியில் ஒரு களங்கத்தை ஏற்படுத்த இதுதான் சமயம் என்று கருதி, குழிப் பிணத்தைத் தோண்டி எடுத்து மீண்டும் மீண்டும் ஒப்பாரி வைத்து அழுது நாடகம் ஆடுகின்றனர்.

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் என்று நாடாளுமன்றத் தேர்தலில் ஏற்கெனவே முன்வைத்துப் பிரச்சாரமும் செய்து தோல்வி கண்ட ஓராண்டுக்குப் பிறகு, ஏன் திடீரென இராசாவின் பதவி ரத்தம் குடிக்க இந்த நரியார்கள் நாரியர்கள் துடிக்கிறார்கள்? மத்திய அமைச்சர் ராசா இதில் தனியே சொந்தமாக முடிவு எடுத்தாரா? எடுக்கத்தான் இயலுமா?

'டிராய்" என்ற தொலைத்தொடர்பு அமைப்புதானே இதனை முடிவு செய்தது பிரதமர் ஒப்புதலுடன்தானே இத்தகைய நடவடிக்கைகள் நடந்துள்ளன? இவற்றை நாடாளுமன்ற மக்களவையிலே அமைச்சர் ராசா மிகத் தெளிவாக, ஆணித்தரமாக விளக்கினாரே, அதை மறுக்க முடியுமா?

மராத்தியத்தில் ஆதர்ஷ் வீடு கட்டும் திட்டத்தில் ஊழல், காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் ஊழல் என்றால், அது மத்திய நிதி அமைச்சர் சொன்னதைப்போல இரு மாநிலங்கள் பிரச்சினை (மகாராஷ்டிரா, டில்லி) அதனைக் காங்கிரஸ் கட்சி ஆதாரபூர்வமாகத் தெரிந்து அந்த முடிவை எடுத்தது அவர்களது உரிமை. கமிட்டி சொன்னதை வைத்து நடவடிக்கை. ஆனால், இங்கே அமைச்சர் ராசா 'செய்யாத குற்றத்திற்காக ஜென்ம தண்டனை" என்பதுபோல இப்போது ஏன் பதவி விலகவேண்டும் அவர் வேறு இலாகாவிற்கு ஏன் செல்ல வேண்டும்?

சி.பி.ஐ. வழக்கு உள்ளது. உச்சநீதிமன்றத்தில் உள்ள வழக்கில் இவர் குற்றவாளியாக்கப்பட்டுள்ளரா? குற்றம் சாற்றி நிரூபிக்கப்பட்டு, தீர்ப்பு வந்துள்ளதா? ஆடிட்டர் ஜெனரல் அறிக்கைகூட அதிகாரபூர்வமாக இன்னமும் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவில்லையே? குடியரசுத் தலைவரிடம் சமர்ப்பிக்கப்பட்டது என்பதிலிருந்து காகிதப் புலிகளின் ரத்தவேட்டைதானே இப்படி ஆவேசங்காட்டச் செய்கிறது?

இதே ராசா 3ஜி ஸ்பெக்ட்ரம் ஏலத்தில் பல கோடி ரூபாய்கள் அதிகம் விட்டு, மத்திய அரசின் கருவூலத்திற்கு 66,980 ஆயிரம் கோடி ரூபாய் பெரு வருவாய் தந்தாரே அதற்கு சிறு பாராட்டினை இவர்கள் யாரும் தெரிவித்தார்களா? மத்திய அமைச்சரவை என்பது பிரதமரின் தலைமையில் கூட்டுப் பொறுப்பு உள்ள ஒன்று அல்லவா? இதில் தனியாக ஒருவரை பலிகடாவாக்க முயற்சிப்பது எந்த வகையில் ஜனநாயகம் அமைச்சரவையின் அறம் ஆகும்?

ஜெயலலிதாவின் வழக்குகள் ஊழல்கள் பலவும் மக்கள் மன்றம் அறிந்ததே! வெளிநாட்டிலிருந்து யாரோ அனுப்பிய நன்கொடையை தன் கணக்கில் வரவு வைத்தாரே அளவுக்கு அதிகமான சொத்து சேர்ப்பு, டான்சி வழக்கில் நிலத்தை திருப்பித் தந்து வெளியே வந்தது எல்லாம் மக்களுக்கு மறந்துவிடுமா? ராசாவை பதவி விலகல் கூச்சலில் பல உள்நோக்கங்கள் பலருக்கு!

இது “பந்தலிலே பாவக்காய்"" என்ற ஒப்பாரி வைத்து அழுத பெண்கள் கதைபோல... ஒவ்வொரு கட்சிக்கும் ஒவ்வொரு உள்நோக்கம்! இதில் மற்றொரு முக்கிய பின்னணி முன்பு ஏகபோகமாக அனுபவித்த கொள்ளையைத் தடுத்து, லாபக் குபேரர்களின் ஏகபோகமில்லாது பலருக்கும் பிரித்தளிக்க பிரதமர் ஒப்புதல் முதற்கொண்டு பெற்று, அரசு கருவூலத்திற்கு ஏராள வருவாய் வரும்படி செய்த ராசாவின்மீது ரவுத்திரம் கோபாக்கினி ஊடகங்களை ஏவிவிடுகின்றனர்!

தமிழ்நாட்டில் மீண்டும் 1971 தேர்தல் முடிவுகள் அபரிமிதமாக தி.மு.க.வுக்குக் கிடைத்ததே அதுபோல 'ராசா" பற்றி 'ஓங்காரக் கூச்சல்" நிச்சயம் வெற்றிப் பாதைக்கு தி.மு.க.வை அழைத்துச் செல்லும் என்பது 2011இல் புரிய வேண்டியவர்களுக்குப் புரியும். புரியாவிட்டால் புரிய வைப்போம் என்று கூறியுள்ளார் வீரமணி.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+