தீவிரவாதத்திற்கு எதிரான போரை பாதிக்கிறது காங்கிரஸின் வாக்கு வங்கி அரசியல்-அத்வானி

மத்தியப் பிரதேச மாநிலம் பர்ஹான்பூரில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அத்வானி பேசுகையில், இந்தியாவில் தீவிரவாதத்திற்கு எதிரான போரை திறம்பட நடத்த முடியாத நிலை உள்ளது. தீவிரவாத ஒழிப்புக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில், காங்கிரஸ் கட்சியின் வாக்கு வங்கி அரசியல் உள்ளது.
காங்கிரஸ் கட்சியின் இந்த வாக்கு வங்கி அரசியலால் நாட்டின் நலன்கள், பாதுகாப்பு பாதிக்கப்படுகிறது. தீவிரவாத ஒழிப்பு என்பது கேள்விக்குறியதாக மாறியுள்ளது.
2001ம் ஆண்டு நாடாளுமன்றத்தைத் தாக்கிய தீவிரவாதிகள் உள்ளே நுழைய வாய்ப்பு கிடைத்திருந்தால், நியூயார்க்கில் நடந்த செப்டம்பர் 11 தாக்குதலை விட விளைவுகள் மிகப் பயங்கரமாக இருந்திருக்கும்.
நாடு முழுவதும் நக்சலைட்டுகள் வன்முறை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஆனால் மத்தியப் பிரதேசம் மற்றும் சட்டிஸ்கர் ஆகிய மாநிலங்களில் பாஜக அரசுகள், கல்வி, வளர்ச்சிக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து செயல்படுவதால் நக்சல்கள் மீதிருந்த மக்களின் பிடிப்பு குறையத் தொடங்கியுள்ளது. இதனால் நக்சலைட்கள் இங்கு பலவீனமடைந்து வருகின்றனர்.
இந்த இரு மாநிலங்களிலும் பாஜக அரசுகள் மேற்கொண்டு வரும் வளர்ச்சிப் பணிகளால் மக்கள் தங்களை விட்டு விலகி வருவதால், வளர்ச்சிப் பணிகளைத் தடுக்கும் முயற்சிகளில் நக்சலைட்டுகள் ஈடுபட்டு வருகின்றனர் என்றார் அத்வானி.
காங்கிரஸுக்கு பாஜக எச்சரிக்கை:
இதற்கிடையே, ஆர்.எஸ்.எஸ். முன்னாள் தலைவர் சுதர்சன், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி குறித்து பேசிய கருத்துக்களுக்காக ஆர்.எஸ்.எஸ். அலுவலகங்களை காங்கிரஸார் தாக்குவது தொடர்ந்தால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என பாஜக எச்சரித்துள்ளது.
இதுகுறித்து பாஜக செய்தித் தொடர்பாளர் தருண் விஜய் கூறுகையில், சுதர்சன் பேச்சு குறித்து பாஜகவும், ஆர்.எஸ்.எஸ். அமைப்பும் உரிய விளக்கங்களை அளித்து விட்டன. ஆனாலும் தொடர்ந்து ஆர்.எஸ்.எஸ். அலுவலகங்கள் மீது காங்கிரஸார் தாக்கி வருகின்றனர், போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.
சிமி இயக்கத்துடன் ஆர்.எஸ்.எஸ். அமைப்பை இணைத்து ராகுல் காந்தி பேசியபோது ஆர்.எஸ்.எஸ். அமைதி காத்ததை அவர்கள் மனதில் கொள்ள வேண்டும். தொடர்ந்து காங்கிரஸார் போராட்டங்களை நடத்திக் கொண்டிருந்தால் நாடு தழுவிய பெரும் போராட்டத்தில் பாஜக இறங்க நேரிடும்.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் ஊழல்கள், காமன்வெல்த் ஊழல், ஆதர்ஷ் சொசைட்டி ஊழல், ஸ்பெக்ட்ரம் ஊழல் ஆகியவற்றை மையப்படுத்தி பெரும் போராட்டத்தில் நாங்கள் குதிப்போம் என்று காங்கிரஸை எச்சரிக்கிறோம்.
தற்போது ஆர்.எஸ்.எஸ். மீது காங்கிரஸ் கட்டவிழ்த்திருக்கும் வன்முறை, 1984ம் ஆண்டு அது நடத்திய சீக்கியர்களுக்கு எதிரான வன்முறையை மீண்டும் நிகழ்த்த நினைத்திருப்பதாக கருத நேரிடுகிறது என்றார் அவர்.












Click it and Unblock the Notifications