நற்பண்புகளை உணர்த்தும் நாள் தான் பக்ரீத் திருநாள்-ஜெ

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிறருக்காக தம்மை அர்ப்பணித்தல், ஏழை- எளியோருக்கு தர்மம் செய்தல், நம்மை படைத்த இறைவனுக்கு நன்றி தெரிவித்துதல் ஆகிய நற்பண்புகளை உணர்த்தும் நாள் தான் பக்ரீத் திருநாள் என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா வாழ்த்துச் செய்தி வெளியிட்டுள்ளார்.

அவர் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில்,

“எல்லாப் புகழும் இறைவனுக்கே" என்ற உன்னத தத்துவத்தை உணர்த்தும் “பக்ரீத்" திருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் எனது அன்பான பக்ரீத் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.

தன்னைப் படைத்த இறைவனின் கட்டளையை செயல்படுத்துவதே வாழ்க்கை என்ற உன்னத குறிக்கோளுடன் வாழ்ந்த இறைத் தூதர் இப்ராகிம் அவர்களின் ஈடு இணையற்ற தியாகத்தை நினைவூட்டும் நாள் பக்ரீத் திருநாள். பிறருக்காக தம்மை அர்ப்பணித்தல், ஏழை- எளியோருக்கு தர்மம் செய்தல், நம்மை படைத்த இறைவனுக்கு நன்றி தெரிவித்துதல் ஆகிய நற்பண்புகளை உணர்த்தும் நாள் பக்ரீத் திருநாள்.

இந்த தியாகத் திருநாளில், அன்பு, பாசம், பரிவு, சகோதரத்துவம் ஓங்கட்டும்!. அமைதி, சமாதானம், மனிதநேயம் தழைக்கட்டும்! இல்லாமை இல்லை என்கிற நிலை உருவாகட்டும்! தன்னலமற்ற சமுதாயம் உருவாகட்டும்! என்று எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திருப்பதோடு, இஸ்லாமிய பெருமக்கள் அனைவருக்கும் எனது உளமார்ந்த பக்ரீத் திருநாள் நல்வாழ்த்துக்களை மீண்டும் ஒருமுறை உரித்தாக்கிக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

திருமாவளவன்:

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில்,

உலகம் தழுவிய அளவில் இசுலாமியப் பெருங்குடி மக்களால் போற்றப்படும் பெருநாளான ஈகைத் திருநாளாம் பக்ரீத் நாளில் இசுலாமியர் அனைவருக்கும் விடுதலைச் சிறுத்தைகளின் நெஞ்சார்ந்த வாழ்த்துகள்.

மானுடத்தை மேம்படுத்த அன்பையும், அமைதியையும், சமாதானத்தையும், சமத்துவத்தையும் உலகுக்குப் போதித்த புனிதப் பெருமான் முகமது நபி அவர்களின் வருகைக்கு முன்பே போற்றப்பட்ட பெருநாள்தான் பக்ரீத் பெருநாளாகும்.

தன் வாழ்வில் நேர்ந்த சோதனைகளை எல்லாம் நெஞ்சுரத்தோடு எதிர்கொண்ட இப்ராஹிம் நபி, ஏற்றுக்கொண்ட கொள்கைகளுக்காக தன் மகன் இஸ்மாயில் நபியை பலியிடத் துணிந்தபோது ஆண்டவன் அதனைத் தடுத்தாட்கொண்டு மகனுக்குப் பதிலாக ஆட்டுக்கடாவைப் பலியிட ஆணையிட்டதாகவும், அதுவே குர்பானி என்னும் பெயரில் இன்றும் இந்த பக்ரீத் நாளில் ஆட்டுக்கடாவைப் பலியிடும் பழக்கத்தை இஸ்லாமியர்கள் கடைப்பிடிப்பதாகவும் நம்பப்படுகிறது.

அல்லாவின் சோதனைகளைத் தாங்கும் நெஞ்சிறுதியும் தன் மகனையே தியாகம் செய்ய முன்வந்த தியாக உணர்வும் இப்ராகிம் நபி மேலோங்கியிருந்ததை முகமது நபி உட்பட இஸ்லாமிய பேரினம் நினைவு கூர்ந்து போற்றி வருகிறது என்பது பக்ரீத் நாளின் மகிமையும் பெருமையும் ஆகும்.

அத்தகைய போற்றுதலுக்குரிய தியாகத் திருநாளில் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றான ஹஜ் என்னும் புனித மெக்கா பயணத்தை மேற்கொள்ளும் ஹாஜிகள் உள்ளிட்ட இஸ்லாமியர் யாவருக்கும் எமது ஈகைத் திருநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்வதுடன் அனைவரும் தியாகத்தைப் போற்றவும், கொள்கைக்காக தியாகத்தைச் செய்யவும் பக்குவம் பெற உறுதியேற்போம் என, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.கவர்னர் சுர்ஜித்சிங் பர்னாலா பக்ரீத் வாழ்த்து தெரிவித்து உள்ளார். அதில் கூறி இருப்பதாவது:-

பக்ரீத் விழாவை கொண்டாடும் அனைத்து முஸ்லிம் சகோதர, சகோதரிகளுக்கும் எனது இதயப்பூர்வமான நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

தியாகத்தையும், அன்பையும் வெளிப்படுத்தும் இந்த திருநாளில் மக்களிடம் ஒற்றுமையும், அன்பும், சகோத ரத்துவமும் ஓங்க வாழ்த்துகிறேன்.

வைகோ:

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில்,

ஐம்பெரும் கடமைகளில் இறுதிக் கடமையான “புனித ஹஜ்" பயணத்தை நிறைவு செய்யும் இப்புனித நன்னாளில் மனிதகுலம் தழைக்க சமய நல்லிணக்கம் பேணவும் சமூக ஒற்றுமை செழிக்கவும் உறுதி பூணுவோம் என்று சூளுரைப்போம்.

பக்ரீத் விழா காணும் வேளையில் விருந்தோம் பலையும் காலங்காலமாகக் கடைப்பிடித்து வரும் இஸ்லாமிய பெருமக்களுக்கு மதிமுக சார்பில் என் இதய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.

தமுமுக வாழ்த்து:

தமுமுக தலைவர் ஜவாஹிருல்லாஹ் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில்,

இறையன்புக்காக எதையும் தியாகம் செய்யும் மனப்பான்மை எல்லோரும் பெறவேண்டும் என்பதுதான் தியாகத் திருநாளின் நோக்கமாகும்.

தியாகத் திருநாளில் சுமார் 25 லட்சம் இஸ்லாமியர்கள் பல நாடுகளில் இருந்து வந்து மக்காவில் கூடுகின்றனர். இன, மொழி, நிற வெறிகளை அகற்றிவிட்டு சகோதரத்துவத்தை அங்கே பறை சாற்றுகின்றனர். வசதியானவர்கள் குர்பானி இறைச்சியை ஏழை எளியோருக்கு பங்கிட்டு அளித்து இன்புறுகின்றனர்.

கூடி மகிழ்வதும், கொடுத்து மகிழ்வதும், படைத்த இறைவனை வணங்கி மகிழ்வதும் இந்த நன்னாளின் சிறப்புகளாகும். தனி வாழ்விலும், பொது வாழ்விலும், ஊழல் மனப்பான்மை ஒழிந்து தியாக மனப்பான்மை பெருகவும், சகோதரத்துவம் வளரவும் இந்த தியாகத் திருநாளில் உறுதி கொள்வோம்.

இத்திருநாளக் கொண்டாடும் அனைவருக்கும் தமுமுக சார்பாக இதயங்கனிந்த நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+