Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

டான்சி ஊழலில் கண்டிக்கப்பட்ட ஜெ. அறிக்கை விடுவதில் என்ன நியாயம் உள்ளது?-கருணாநிதி

Subscribe to Oneindia Tamil

Karunanidhi
சென்னை: டான்சி நில ஊழலில், உச்சநீதிமன்றத்தால் கடுமையாக தண்டிக்கப்பட்டு தீர்ப்பு கூறப்பட்ட பிறகும் ஜெயலலிதா என்ன செய்தார் என்பதை மறந்து விட்டு, ஸ்பெக்ட்ரம் பிரச்சினை தொடர்பாக ஜெயா தற்போது அறிக்கை விடுவதில் என்ன நியாயம் இருக்கிறது என்பதை நாட்டு மக்கள்தான் சிந்திக்க வேண்டும் என்று கூறியுள்ளார் முதல்வர் கருணாநிதி.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள கேள்வி பதில் பாணி அறிக்கை:

கேள்வி: அமைச்சர் ராசாவை மத்திய அரசு பதவி நீக்கினால் நிபந்தனையற்ற ஆதரவை மத்திய அரசுக்கு தெரிவிப்போம் என்று தானாகவே முன்வந்து அழையா விருந்தாளியாக ஜெயலலிதா கூறியது மக்கள் நலனைப் பாதுகாக்க உதவாது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி கண்டனத் தீர்மானம் நிறைவேற்றியிருப்பது பற்றி?

பதில்: அந்தத் தீர்மானம் எதிர்பார்க்கப்பட்ட ஒன்றுதான் என்ற போதிலும், அம்மையாரின் மனம் நோகக்கூடாது என்பதைப் போல, அந்த தீர்மானத்தில் மத்திய அரசையும், அதற்கு ஆதரவாக உள்ள தி.மு.க. அரசையும் பலவிதங்களிலும் தேவையில்லாமல் குறை கூறியிருக்கிறார்கள். அவர்களது நோக்கம், அ.தி.மு.க. தலைவியை குறை கூற வேண்டும் என்பதை விட, மத்திய மாநில அரசுகளையும் தாக்கிட வேண்டு மென்பதாகத்தான் உள்ளது.

மார்க்சிஸ்ட் தீர்மானம் மனதுக்கு ஆறுதல்:

காங்கிரஸ் கட்சியோடு அணி சேர வேண்டுமென்பதற்காக அம்மையார் எப்படியெல்லாம் தானாக முன்வந்து அறிக்கை விடுகிறார் என்ற உண்மையை புரிந்து கொள்ளாமல், ஏதோ அதைக் கண்டிக்கிறோம் என்ற அளவிற்காவது அறிக்கை விட முன் வந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தீர்மானம் ஓரளவிற்கு மனதுக்கு ஆறுதலாகவே உள்ளது; ஆனால் மார்க்சிஸ்டுகளின் மனச்சாட்சிக்கு நிறைவானதாக இருக்குமா என்பது சந்தேகம்தான். நல்ல முடிவு தான்; ஆனால் நழுவுகிறதே எங்கேயோ! ஏனெனில் இன்றைய தி.மு.க. ஆட்சியின் மீது அவர்கள் சொல்கிற குறைகள்; கடந்தகால ஜெயலலிதா ஆட்சியில் நடைபெற்ற குறைபாடுகள், முறைகேடுகள் இவற்றோடு ஒப்பிடும்போது; முறையே, அது கடுகளவு - இது மலையளவு என்றுதான் கூறமுடியும்.

கேள்வி: இந்திய நாடாளுமன்ற ஜனநாயகத்தைப் பாதுகாக்க வேண்டுமென்ற பொறுப்புணர்வோடு மத்திய அமைச்சர் ராசாவை பதவி விலகுமாறு தாங்கள் செய்த பிறகும் ஜெயலலிதா அவரை கைது செய்ய வேண்டும், வழக்கு தொடர வேண்டும் என்றெல்லாம் சொல்லியிருக்கிறாரே?

பதில்: எதிர்க்கட்சி என்றால் மேலும்மேலும் எதையாவது சொல்லிக் கொண்டிருக்க வேண்டும். ஒரு விரலை எதிரி முன்னால் காட்டும்போது மற்ற விரல்கள் அவர்களை நோக்கித்தான் இருக்கின்றன என்பதை மறந்துவிடக் கூடாது. அ.தி.மு.க. தலைவி மீது பல ஊழல் குற்றச்சாட்டுகள் நீதிமன்றத்தால் நிரூபிக்கப்பட்டு தீர்ப்பு கூறப்பட்ட பின்னரும் நான்கு இடங்களில் தேர்தலில் போட்டியிட்டு, அவைகள் செல்லாது என்று கூறப்பட்ட பின்னரும் - ஆளுநரை வலியுறுத்தி பதவிப் பிரமாணம் செய்துகொண்டு, அதுவும் நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்ட வரலாற்றையெல்லாம் மக்கள் மறந்திருப்பார்கள் என்று அவர் எண்ணுகிறார் போலும்!

கட்சிக் கட்டுப்பாட்டினையேற்று பதவி விலகிய ராசா தன்மீது எந்தத் தவறும் இல்லை என்றும், எல்லாமே சட்டப்படி தான் நடந்துள்ளது என்பதை உரிய முறையில் நிரூபிப்பேன் என்றும் கூறியிருப்பதையும் மறந்துவிடக் கூடாது.

இன்னும் சொல்லவேண்டுமேயானால், அரசுக்குச் சொந்தமான டான்சி நிலத்தை முதல்-அமைச்சராக பதவிப் பொறுப்பில் ஜெயலலிதா இருந்த போது குறைந்த விலைக்கு வாங்கியது பற்றிய வழக்கு உச்சநீதிமன்றம் வரை நடந்து அதிலே நீதிபதிகள் கூறும் போது, பொதுத் துறைக்குச் சொந்தமான நிலங்கள் ஜெயலலிதா பங்குதாரராக உள்ள கம்பெனிகளுக்கு, அவர் முதலமைச்சராக பதவியிலே இருந்த காலத்தில் விற்கப்பட்டுள்ளது என்பது தெளிவாகத் தெரிகிறது.

டான்சி விவகாரம்:

டான்சி நிறுவனத்தின் விதிமுறைகளின்படி அதை விற்பனை செய்வதற்கு முன்பு அரசிடமிருந்து ஒப்புதல் பெற்றாக வேண்டும். அதுவரை விற்பனை முழுமை அடைந்ததாகாது. விற்பனை தொடர்புடைய ஆவணங்களில் ஜெயலலிதா தன்னைச் சம்பந்தப்படுத்திக் கொள்ளாவிட்டாலும், அந்த அனுமதியினை அரசு இயந்திரம் உடனடியாக வழங்கியுள்ளது.

நீதிமன்ற நடவடிக்கை காரணமாக ஏலத்திற்கு வருகின்ற சொத்துக்களை ஏலம் போடுகின்ற ஒரு சாதாரண அதிகாரியோ, கால்நடைகளை அடைத்து வைத்து அதனைப் பாதுகாக்கும் அதிகாரியோ, ரெயில்வே சொத்துக்களைப் பராமரிக்கும் அதிகாரியோ அவர்களுடைய அதிகாரத்திலே உள்ள சொத்துக்களை விலைக்கு வாங்க முடியாது.

வழக்கு சம்பந்தப்பட்ட சொத்துக்களின் மதிப்பு குறித்து எங்களின் முடிவு எதுவாக இருந்த போதிலும், அதிலே ஜெயலலிதாவிற்கு லாபம் இருந்ததா இல்லையா என்பதை விட, முதல்-அமைச்சரே அரசின் சொத்துக்களை வாங்க எத்தனித்து விட்ட நிலையில், அதிகாரவர்க்கம் அளவுக்கு மீறி அதிலே ஆர்வம்காட்டி இந்த விற்பனையை சுமுகமாக முதலமைச்சர் ஜெயா விரும்பும் விலைக்கே முடித்திருக்கிறார்கள் என்பதை எங்களால் தெரிந்துகொள்ள முடிகிறது. எந்த நிலையிலும், ஜெயலலிதாவின் இந்தச் செயல்கள் நடத்தைவிதிகளின் உட்பொருளுக்கு விரோதமானதாகும்.

நியாயமாக பேசவேண்டுமென்றால், அரசின் சாதாரண அதிகாரிகளுக்காக ஒரு சட்டமும், முதல்-அமைச்சருக்காக ஒரு சட்டமும் இருக்க முடியுமா? இது போன்ற நிலைகளில், நன்னடத்தை விதி என்பது அருங்காட்சியகத்திலே வைக்கப்பட வேண்டிய வெறும் ஆடம்பர பொருள் மட்டும்தானா? அது கடைப்பிடிக்கப்பட வேண்டிய ஒன்று அல்லவா? இவைகள்தான் எங்களுடைய மனச்சாட்சியைத் துன்புறுத்துகிறது. முதல் குற்றவாளியான ஜெயலலிதா தான் இந்த வழக்கிலிருந்து தப்பித்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக டான்சி நில பத்திரத்திலே உள்ள, அவருடைய ஆடிட்டரும் அரசு அதிகாரிகளும் ஏற்றுக்கொண்ட அவருடைய கையெழுத்தையே இல்லை என்று மறுக்கக்கூடிய அளவிற்குச் சென்றிருக்கிறார்.

இந்த அளவிற்கு உச்சநீதிமன்றம் தீர்ப்பு கூறப்பட்ட பிறகும் ஜெயலலிதா என்ன செய்தார் என்பதை மறந்து விட்டு, ஜெயா தற்போது அறிக்கை விடுவதில் என்ன நியாயம் இருக்கிறது என்பதை நாட்டு மக்கள்தான் சிந்திக்க வேண்டும்.

ஜேபிசி விசாரணை தேவையில்லை:

கேள்வி: அமைச்சர் ராசா தனது பதவியை ராஜினாமா செய்த பிறகும், நாடாளுமன்றக் கூட்டுக்குழு (ஜே.பி.சி.) வேண்டுமென்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியதால் நேற்று நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளதே?

பதில்: ஸ்பெக்ட்ரம் விவகாரம் உச்சநீதிமன்றத்தின் விசாரணையில் இருப்பதால் வேறுயாரும் இறுதி முடிவெடுத்து விட முடியாது. மத்திய கணக்கு தணிக்கை தலைமை அதிகாரியின் அறிக்கையை பொது கணக்குக் குழு பரிசீலனை செய்யவுள்ளது. அதன் பிறகு அந்தக் குழு தனது அறிக்கையை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து அதன் மீது விரிவான விவாதம் நடைபெறலாம்.

பொது கணக்குக் குழுவின் தலைவராக தற்போது பிரதான எதிர்க்கட்சியான பா.ஜ.க.வைச் சேர்ந்தவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான முரளி மனோகர் ஜோஷிதான் இருந்து வருகிறார். நாடாளுமன்றக் கூட்டுக்குழு விசாரணை வேண்டுமென்று கோருவதின் மூலம் எதிர்க்கட்சியினருக்கு முரளி மனோகர் ஜோஷி மீது நம்பிக்கை இல்லையா? அல்லது நாடாளுமன்றத்தை நடத்தவிடாமல் செய்ய வேண்டும் என்பதற்காகவே கையாளுகின்ற யுக்தியா?

பொது கணக்குக் குழு என்பது நாடாளுமன்றக் கூட்டுக்குழுவை விட அதிகாரம் மிக்கதாகும். நாடாளுமன்றக் கூட்டுக்குழுவின் தலைவராக ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர் தான் இருப்பார். இந்த விவரங்களைத்தான் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பவன்குமார் பன்சாலும், உள்துறை அமைச்சர் ப.சிதம்பரமும் விளக்கியிருக்கிறார்கள்.

சேப்பாக்கத்தில்தான் மீண்டும் போட்டியிடுவேன்:

கேள்வி: 2011, தமிழகச் சட்டப்பேரவை பொதுத் தேர்தலில் தாங்கள் சென்னை-கொளத்தூர் தொகுதியில் போட்டியிடப்போவதாக நேற்றைய தமிழ் நாளேடு ஒன்றில் செய்திக் கட்டுரை வெளியிட்டிருக்கிறார்களே?

பதில்: தமிழகச் சட்டப்பேரவைக்கான கடந்த மூன்று பொதுத் தேர்தல்களில் தொடர்ந்து சென்னை-சேப்பாக்கம் தொகுதியில் நின்று வென்றவன் நான். 2011 சட்டப்பேரவை பொதுத் தேர்தலில், எந்தத் தொகுதியில் நான் போட்டியிடப் போகிறேன் என்று பல்வேறு வகையான யூகங்களை பத்திரிகைகள் வெளியிடுகின்றன. அந்த யூகங்கள் அனைத்தும் உள்நோக்கம் கொண்டவை - கற்பனையானவை - எவ்வித அடிப்படையும் இல்லாதவை. பத்திரிகைச் சுதந்திரத்தைப் பயன்படுத்திக் கொண்டு, அவரவர் யூகங்களை செய்திகளாக்குவதில் தீவிரம் காட்டுவது, ஜனநாயக வளர்ச்சிக்கு உகந்ததல்ல.

'மோகனாஸ்த்திரம்':

கேள்வி: காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு தருவதாக; தன்னிச்சையாக, வலிய முன் வந்து ஜெயலலிதா அறிவித்தது; ராஜதந்திரம்'' என்றும், அந்த அறிவிப்பு பிரம்மாஸ்திரம்'' போன்றதென்றும் ஒரு தமிழ் நாளேட்டில் செய்திக் கட்டுரை வெளியிடப்பட்டிருந்ததே?

பதில்: காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு தருவதாக ஜெயலலிதா வலிய வந்து அறிவித்ததை; ஏற்க முடியாதென்றும்; ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் இடமில்லையென்றும்; அம்மையார் அறிவித்த 24 மணி நேரத்திற்குள்; காங்கிரஸ் கட்சி பதிலளித்து கதவை மூடிவிட்டது.

ஜெயலலிதா பேசுவதற்கும், அறிவிப்பதற்கும் பின்னணிப் பொருள் தேடி அலைவதற்கும்; அவற்றில், ஏதோ பெரிய பின்னணி இருப்பதைப் போன்ற, மிகைப்படுத்தப்பட்ட பிரமையை பொதுமக்கள் மனதில் ஏற்படுத்துவதற்கும், தமிழகத்தில் சில பேர் இருக்கிறார்கள்.

ஜெயலலிதாவின் தற்போதைய அறிவிப்பு, எந்தவித முகாந்திரமும் இன்றி; தமிழக அரசியலிலும், தேசிய அரசியலிலும், குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும்; என்ற தீயநோக்கத்துடன் வலியவந்து செய்யப்பட்ட அறிவிப்பாகும். அந்த அறிவிப்புக்கு பொருளுமில்லை, பொருத்தமுமில்லை. எனினும், அந்த அம்மையாரை தலையில் வைத்து ஆடிக் கொண்டிருப்போர், அது "ராஜதந்திர அறிவிப்பெ''ன்றும்; "பிரம்மாஸ்திரம்'' என்றும் "மோகனாஸ்திரத்தால்'' மயக்கி, அதைப் படிப்பவர்களை ஏமாற்றப் பார்க்கிறார்கள். நிச்சயம்; இதற்குப் பிறகும் அ.தி.மு.க. தொண்டர்கள் கூட ஏமாறமாட்டார்கள்.

1999-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில், கூட்டணி அமைத்து, போட்டியிட்டு, அறிவிப்புக்கு மேல் அறிவிப்பு என பல அறிவிப்புகளை வெளியிட்டார். அந்த ராஜதந்திரமும் வெற்றி பெறவில்லை. அப்போது தமிழகத்தில் கழகக் கூட்டணியே வெற்றி பெற்றது.

2006-ம் ஆண்டு தமிழகச் சட்டப் பேரவைக்கான பொதுத் தேர்தலிலும், ஜெயலலிதா என்னென்னவோ சொல்லிப் பிரசாரம் செய்தார். தமிழக வாக்காளர்கள் மத்தியில் அவர் ராஜதந்திரம் என்று நினைத்துக் கொண்டு சொன்ன எதுவும் எடுபடவில்லை. கழகத்தின் தலைமையிலான கூட்டணியே வெற்றி பெற்றது.

2007-ம் ஆண்டு தேசிய அளவில் மூன்றாவது அணி ஒன்றை அமைத்து, அதற்கு, தான் தலைவியாக வேண்டும் என்ற எண்ணத்தில், சந்திரபாபு நாயுடுவுடன் சேர்ந்து கொண்டு, பல்வேறு சாகசங்களை யெல்லாம் செய்து பார்த்தார். எதுவும் கைகூடவில்லை; எல்லாம் தோல்வியிலேயே முடிந்தது.

அப்போதெல்லாம் வெற்றி பெறாத அவரது ராஜதந்திரமும், பிரம்மாஸ்திரமும்; வலியவந்து இப்போது அவர் செய்திருக்கும் அறிவிப்பாலா வெற்றிபெறப் போகின்றன? பொய் நெல்லைக் குத்தியே, பொங்க நினைத்தவன், கை நெல்லை விட்டானம்மா'' என்ற முடிவுதான், அவரது ராஜதந்திரத்திற்கும், பிரம்மாஸ்திரத்திற்கும் ஏற்படப் போகிறதென்பதை; அவரையே துதிபாடிக்கொண்டிருக்கும் ஒரு சிலர் இப்போதாவது உணர்ந்து, திருத்திக்கொள்ள மாட்டார்களா; என்ன என்று அவர் கூறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+