சுப்ரீம் கோர்ட்டின் நெருக்கடி-பிரதமரின் சட்டக்குழு மாற்றம்-அட்டர்னி ஜெனரல் ஆஜராகிறார்

சாமி தொடர்ந்த வழக்கின் கடந்த இரண்டு விசாரணைகளின்போதும் பிரதமரின் செயலற்ற போக்கை உச்சநீதிமன்றம் கடுமையாக கண்டித்தது. நேற்று நடந்த விசாரணையின்போது சிஏஜி அறிக்கை மிகவும் தீவிரமானது. அதை முதலில் ராஜாவின் வக்கீல், சிபிஐ வக்கீல் மற்றும் சொலிசிட்டர் ஜெனரல் ஆகியோர் தீவிரமாக படிக்குமாறு அறிவுறுத்தியது. மேலும், இந்த விவகாரத்தில் செயலற்ற நிலையில் ஏன் இருந்தீர்கள் என்பதை பிரதமர் அலுவலகம் நாளைக்குள் அபிடவிட்டாக தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டது.
இந்த நிலையில் பிரதமர் அலுவலகம் சார்பில் கோபால் சுப்பிரமணியத்திற்குப் பதில் நாளை அட்டர்னி ஜெனரல் வாகனாவதி ஆஜராவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனது தரப்பு வாதத்தை அழுத்தமாக வைப்பதற்கு அட்டர்னி ஜெனரலே ஆஜராக வேண்டும் என பிரதமரே கூறியதன் பேரில் இந்த மாற்றம்.
இதுகுறித்து கோபால் சுப்பிரமணியம் கருத்து தெரிவிக்கையில், இதை மாற்றம் என்று சொல்ல முடியாது. சிறந்த ஒருங்கிணைப்புக்கான ஏற்பாடுகள் என்று சொல்லலாம். மத்திய அரசு சார்பிலும், தொலைத் தொடர்புத்துறை சார்பிலும் நான் தொடர்ந்து ஆஜராவேன். பிரதமர் சார்பில் அட்டர்னி ஜெனரல் ஆஜராவார் என்றார்.
தொடர்ந்து அவர் கூறுகையில், நேற்றைய உச்சநீதிமன்ற உத்தரவில் பிரதமருக்குக் கண்டனமோ, கண்டிப்போ தெரிவிக்கப்படவில்லை. பிரதமரை உச்சநீதிமன்றம் கண்டிக்கவில்லை. மேலும், பிரதமர் கருத்தை வலியுறுத்தியதில் எந்தவிதக் குழப்பமும் நேற்று ஏற்படவில்லை என்றார்.
நாடாளுமன்றம் தொடர்ந்து ஸ்தம்பிப்பு:
இதற்கிடையே தொடர்ந்து நான்காவது நாளாக இன்றும் நாடாளுமன்றம் ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பாக பெரும் அமளியை சந்தித்தது. இரு அவைகளும் இன்று காலை கூடியபோது எதிர்க்கட்சிகள் அமளியில் இறங்கின. இதனால் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன.
அதிமுக நாடாளுமன்றத் தலைவர் மைத்ரேயன் கூறுகையில், பிரதமர் தனது நிலையை முதலில் தெளிவுபடுத்த வேண்டும். ஏன் அவர் மெளனமாக இருக்கிறார் என்பது புரியவில்லை. நாடாளுமன்றத்தை காலவரையின்றி ஒத்திவைத்தால் அதற்கு இந்த அரசுதான் பொறுப்பேற்க வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications