ஸ்பெக்ட்ரம் விவகாரம்: பிரதமருக்கு ராகுல் முழு ஆதரவு
டெல்லி: 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பான விவகாரத்தில் பிரதமர் மன்மோகன் சிங்கை குற்றம் சாட்ட வேண்டாம் என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.
இந்த விவகாரத்தில் பிரதமர் ஏன் ராசா மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்று உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ள நிலையில் ராகுல் காந்தியும், மத்திய மனித வளத்துறை அமைச்சரும் இப்போது தொலைத் தொடர்புத்துறையை தன் வசம் வைத்துள்ளவருமான கபில் சிபல் ஆகியோரும் பிரதமருக்கு முழு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
ராகுல் காந்தியிடம் நிருபர்கள், ராசா மீது நடவடிக்கை எடுக்க அனுமதி கோரி சுப்பிரமணிய சாமி தாக்கல் செய்த விண்ணப்பத்தின் மீது பதிலளிக்க 16 மாதங்கள் எடுத்துக் கொண்டது ஏன் என்று உச்ச நீதிமன்றம் எழுப்பியுள்ள கேள்வி பிரதமருக்கு மிகுந்த தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளதா என்று கேட்டனர்.
அதற்கு பதிலளித்த ராகுல், எனக்குத் தெரிந்தவரை இந்த விவகாரம் அவருக்கு பெரும் தர்மசங்கடத்தை ஏற்படுத்திவிட்டதாகத் தெரியவில்லை. இந்த விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி பிரதமருக்கு உறுதுணையாக உள்ளது. அவரை யாரும் குற்றம் சாட்ட வேண்டாம் என்றார்.
சாமியின் அரசியல் ஆதாய முயற்சி-கபில் சிபல்:
அதே போல டைம்ஸ் நவ் தொலைக்காட்சிக்கு கபில் சிபல் அளித்த பேட்டியில், இந்த விவகாரத்தில் பிரதமர் அலுவலகத்திலிருந்து அனுப்பப்பட்ட தகவல் பரிமாற்றத்தை அடிப்படையாகக் கொண்டு பார்த்தால் பிரதமர் குற்றமற்றவர் என்று உறுதியாக நம்புகிறேன்.
வெறுமனே பத்திரிகை செய்தி அடிப்படையில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார் சுப்பிரமணிய சாமி. செய்திகளின் அடிப்படையில் பிரதமர் அனுமதி அளிப்பதாக இருந்தால் அந்த நாள்தான் இந்தியாவுக்கு மிக மோசமான நாளாக இருக்கும்.
அரசியல் ஆதாயம் தேடுவதற்காக சாமி பிரதமருக்கு தொடர்ந்து கடிதங்களை எழுதியுள்ளார். ஒவ்வொரு கடிதத்திலும் கூடுதலாக செய்திகளை சேர்த்து அனுப்பினால் அதற்கு பிரதமர் அனுமதி அளிப்பார் என எதிர்பார்ப்பது எந்த வகையில் நியாயம்?. இது மிகவும் துரதிருஷ்டவசமானது.
எளிதில் உணர்ச்சிவசப்படக்கூடிய, நேர்மையான மனிதர் மன்மோகன் சிங். அவர் ஒவ்வொரு கடிதத்துக்கும் பதில் அளிப்பதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தொடர்ந்து விளக்கம் கோரியுள்ளார்.
ஊழல் குற்றச்சாட்டு வழக்கில் சிக்கிய தனது கட்சியினர் மீது பாஜக நடவடிக்கை எடுத்துள்ளதா? தெஹல்கா வழக்கில் சிக்கிய பாஜக முன்னாள் தலைவர் பங்காரு லட்சுமணன், இப்போது கர்நாடகத்தில் ஏற்பட்டுள்ள நில மோசடி வழக்குகள் ஆகியவற்றில் ஏதாவது நடவடிக்கையை பாஜக எடுத்துள்ளதா? தெஹல்கா வழக்கில் நாடாளுமன்ற கூட்டு விசாரணைக் குழு அமைக்கப்பட்டதா?.
ஆனால் காங்கிரஸ் ஆட்சியில்தான் குற்றச்சாட்டு கூறப்பட்டவுடன் சசி தரூர், அசோக் சவாண், ஆ. ராசா ஆகியோர் பதவி விலகியுள்ளனர். நாடாளுமன்றத்தில் ஆரோக்கியமான விவாதம் நடத்த எதிர்க்கட்சிகள் தயாராக இல்லை. அவை நடவடிக்கைகளை முடக்கி அரசியல் ஆதாயம் தேடுவது தான் அவர்களது எண்ணம் என்றார்.
எதிர்க்கட்சிகளுக்கு பிரணாப் முகர்ஜி வேண்டுகோள்:
இந் நிலையில் டெல்லியில் நடைபெற்ற விழா ஒன்றில் கலந்து கொண்ட நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி செய்தியாளர்களிடம் பேசுகையில்,
நாடாளுமன்ற முடக்கத்தை முடிவுக்கு கொண்டு வர அனைத்துக் கட்சியினரும் ஒத்துழைக்க வேண்டும். பிரச்சனைக்கு சுமுக தீர்வுக்கு முயற்சிக்க வேண்டும்.
நானோ அல்லது மத்திய அரசோ நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்த எதிர்ப்பு தெரிவிப்பதால், இந்த விவகாரம் குறித்து விசாரணையே நடத்தப்படாது என்று அர்த்தமல்ல.
ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு, மும்பை ஆதர்ஷ் குடியிருப்பு வீடுகள் வசதி ஒதுக்கீடு, காமன்வெல்த் விளையாட்டு போட்டி விவகாரங்கள் ஆகியவை குறித்து நாடாளுமன்ற பொது கணக்கு குழு விசாரணை நடத்தும்.
நிலையான பாராளுமன்ற கூட்டு குழு என்று கருதப்படும் பொது கணக்கு குழு, அரசியல் சட்டத்தைவிட பழமையான அமைப்பாகும். அதுவும் எதிர்க்கட்சி தலைவரான முரளிமனோகர் ஜோஷியின் தலைமையில் தான் அந்தக் குழுவே செயல்பட்டு வருகிறது.
எனவே நாடாளுமன்றத்தை முடக்குவதை எதிர்க்கட்சிகள் கைவிட வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications