காமன்வெல்த் ஊழல்: கல்மாடிக்கு நெருக்கமானவர்களின் 11 இடங்களில் சி.பி.ஐ. ரெய்ட்

டெல்லியில் நடந்த காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் காண்ட்ராக்ட் வழங்குவதில் ரூ. 8,000 கோடிக்கு அவுக்கு ஊழல் நடந்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி ஒருங்கிணைப்பு குழு தலைவரும் காங்கிரஸ் எம்.பி.யும் இந்திய ஒலிம்பிக் சங்க தலைவருமான சுரேஷ் கல்மாடி மீது ஏராளமான ஊழல் குற்றச்சாட்டுக்கள் கூறப்பட்டுள்ளது.
முதல் கட்ட விசாரணயில், காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிக்கான கருவிகளை வாங்கியதில், விளையாட்டு அரங்கம் கட்டுமான பணிகளில் பெரிய அளவில் ஊழல் நடந்திருப்பது தெரிய வந்தது. இதையடுத்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.
சி.பி.ஐ. விசாரணை நடத்தி சுரேஷ் கல்மாடிக்கு நெருக்கமான டி.எஸ்.தர்பாரி, சஞ்சய் மகிந்திர் ஆகியோரை கைது செய்தது.
போட்டியின் ஜோதி ஓட்டம் மற்றும் ஒளிபரப்பு உரிமைகளில் தர்பாரியும், சஞ்சயும் ஏராளமான ஊழல் செய்துள்ளது உறுதியானது.
மேலும் காமன்வெல்த் போட்டி ஒருங்கிணைப்புக்குழு அலுவலகத்திலும் சிபிஐ சோதனை நடத்தி முக்கிய ஆவணங்களை கைப்பற்றியது.
இந் நிலையில் இன்று காலை டெல்லியில் 11 இடங்களில் சி.பி.ஐ. அதிரடி சோதனைகளில் ஈடுபட்டது. காலை 7 மணிக்கு ஒரே நேரத்தில் இந்த இடங்களில் சோதனைகள் தொடங்கின.
சுரேஷ் கல்மாடியின் நெருங்கிய கூட்டாளிகளும் ஒருங்கிணைப்புக் குழுவில் முக்கிய இடம் பிடித்தவர்களுமான லலித் பானோட், வி.கே.வர்மா ஆகியோரது வீடு, அலுவலகங்களிலும் சோதனை நடத்தப்பட்டது.
லலித் பானோட் காமன்வெல்த் போட்டி ஒருங்கிணைப்புக் குழுவின் செயலாளராக இருந்தவர். வி.கே.வர்மா ஒருங்கிணைப்பு குழு டைரக்டர் ஜெனரலாக பணியாற்றினார்.
பல கோடிக்கணக்கான டெண்டர்களை முடிவு செய்வதில் இவர்கள் முக்கிய பங்கு வகித்தது குறிப்பிடத்தக்கது.
லலித் பானோட், வி.கே.வர்மா ஆகியோர் மீது ஏற்கனவே மின்னணு ஸ்கோர் போர்டுகள், நேரம் காட்டும் கருவிகள் வாங்கியதில் ஊழல் செய்ததாக சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளதும் குறி்ப்பிடத்தக்கது.
இவர்கள் ரூ. 110 கோடி வரை சுருட்டியுள்ளதாகத் தெரிகிறது.
இந் நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய சுரேஷ் கல்மாடி விரும்புகிறார். இதற்காக அவர் நேற்று சபாநாயகர் மீரா குமாரை சந்தித்துப் பேசினார்.
இந் நிலையில் தான் சி.பி.ஐ. அதிரடி சோதனையை நடத்தியுள்ளது. மேலும் விரைவிலேயே கல்மாடியிடமும் சிபிஐ விசாரணை நடத்தும் என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications