மர்ம ஹெலிகாப்டர்... இலங்கையில் பதற்றம்!

விடுதலைப் புலிகள் வலுவாக இருந்த காலத்தில் வான் புலிகள் படையை ஏற்படுத்தி, சிறிய ரக விமானங்கள் கொண்டு தாக்குதல் நடத்தி இலங்கையை நடுங்க வைத்தனர்.
கொழும்பு உள்ளிட்ட நகரங்களின் வான்வெளியில் இந்த விமானங்கள் அவ்வப்போது தாழ்வாகப் பறந்து வந்தன. விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் தீவிரமாக இருந்த நேரத்திலும் சிறிய ரக விமானம் ஒன்று முக்கியக் கட்டடங்கள் மீது குண்டுகளை வீசிச் சென்றது.
தற்போது விடுதலைப்புலிகளின் போர் நடவடிக்கைகள் முடக்கப்பட்டிருக்கும் நிலையில், கொழும்பு நகரிலிருந்து மேற்கே 52 கி.மீ. தொலைவில் உள்ள அவிசாவளைப் பகுதியில் மர்ம ஹெலிகாப்டர் ஒன்று பறந்ததை அப்பகுதி மக்கள் பார்த்ததாக இணையதளங்களில் செய்தி வெளியாகியிருக்கிறது.
தரையிறங்குவதுபோல் மிகவும் தாழ்வாகப் பறந்த அந்த ஹெலிகாப்டர் பின்னர் உயரப் பறந்து சென்றுவிட்டதாகவும் அந்தச் செய்திகளில் கூறப்பட்டிருக்கிறது.
அந்த ஹெலிகாப்டர் தங்களுக்குச் சொந்தமானது இல்லை என இலங்கை விமானப் படையினர் மறுத்துள்ளனர். இதனால், மர்ம ஹெலிகாப்டர் பற்றி பதற்றம் ஏற்பட்டுள்ளது.
ஆனால், போர்க்குற்றவாளிகளாக சர்வதேச கூண்டில் நிற்க வேண்டிய நெருக்கடியில் உள்ள ராஜபக்சேவும் அவரது கூட்டாளிகளும் வேண்டுமென்றே இந்த பரப்புரையில் ஈடுபட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications