மழை, வெள்ள பாதிப்பை ஆய்வு செய்ய மத்திய குழு தமிழகம் வருகிறது
டெல்லி: தமிழகத்தில் மழையால் ஏற்பட்ட வெள்ள பாதிப்பு மற்றும் சேதத்தை மதிப்பீடு செய்ய மத்திய குழு ஓரிரு நாளில் வரவுள்ளதாக பிரதமர் உள்ளிட்டோர் திமுகவிடம் உறுதியளித்துள்ளனர்.
தமிழகத்தில் மழையால் ஏற்பட்ட கடும் தாக்கத்தால் லட்சக்கணக்கான ஏக்கர் பயிர் நிலங்கள் பாழாகியுள்ளன. உயிரிழப்பும் 203 ஆக உயர்ந்துள்ளது. இதையடுத்து மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள ரூ. 1600 கோடி நிதி வழங்கிட வேண்டும் என்று கோரி தமிழக அரசு, மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்பியுள்ளது.
இந்த நிலையில் நேற்று திமுக நாடாளுமன்றக் கட்சித் தலைவரும், எம்.பியுமான டி.ஆர்.பாலு, நேற்று பிரதமர் மன்மோகன் சிங், அமைச்சர்கள் பிரணாப் முகர்ஜி, ப.சிதம்பரம், சரத் பவார் ஆகியோரை நேரில் சந்தித்து இந்தக் கோரிக்கையை வலியுறுத்தினார்.
இதையடுத்து ஓரிரு நாட்களில் மத்திய நிபுணர் குழு தமிழகத்திற்கு அனுப்பி வைக்கப்படும் என தலைவர்கள் உறுதியளித்தனர்.
முன்னதாக பிரதமர் உள்ளிட்டோரிடம் பேசிய டி.ஆர்.பாலு, மழையால் இதுவரை தமிழகத்தில் 203 பேர் உயிரிழந்துள்ளனர். பயிர்களுக்கு பெருமளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தின் பல மாவட்டங்கள் கன மழையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
மேலும் முதல்வர் கருணாநிதி அளித்த அறிக்கை ஒன்றையும் பிரதமர் உள்ளிட்டோரிடம் வழங்கினார் பாலு.












Click it and Unblock the Notifications