ஏலகிரியில் பொழுதை கழிப்பதா?: கருணாநிதிக்கு 'கொடநாடு' கேள்வி!

Subscribe to Oneindia Tamil

Karunanidhi and Jayalalitha
சென்னை: மருத்துவப் படிப்புக்கான பொது நுழைவுத் தேர்வையும், பெட்ரோல் விலை உயர்வையும் மத்திய அரசு உடனடியாகக் கைவிட வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மருத்துவப் படிப்பிற்கு பொது நுழைவுத் தேர்வு, பெட்ரோல் விலை உயர்வு என ஒன்றன் பின் ஒன்றாக பிரச்சனைகள் வந்து கொண்டிருக்கின்ற சூழ்நிலையில், ஏலகிரியில் பொழுதை கழித்திருக்கிறார் முதல்வர் கருணாநிதி.

மருத்துவப் படிப்புக்கான பொது நுழைவுத் தேர்வு குறித்த வழக்கில், பொது நுழைவுத் தேர்வு நடத்த இந்திய மருத்துவக் குழுமத்திற்கு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்ததோடு மட்டுமல்லாமல், இந்தத் தேர்வு நடத்துவதற்கான விதிமுறைகளை வகுப்பதற்கு உச்ச நீதிமன்றத்தின் அனுமதி தேவையில்லை என்றும் இரண்டு நாட்களுக்கு முன் தெரிவித்துள்ளது.

இதன் விளைவாக 2011-12ம் ஆண்டு முதலே மருத்துவப் படிப்பை படிக்க விரும்பும் மாணவ-மாணவியர் அகில இந்திய பொது நுழைவுத் தேர்வை சந்திக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாக்கப்பட்டு உள்ளனர். இந்திய மருத்துவக் குழுமத்தின் இந்த முடிவு ஏழை, எளிய கிராமப்புற மக்களை பாதிக்கும் செயல் மட்டுமல்லாமல் மாநில சுயாட்சிக்கும் எதிரான செயல். மத்திய அரசின் இந்த முடிவின் காரணமாக 69 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு ஆபத்து ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

கடந்த ஆகஸ்டு மாதம் இது குறித்த பிரச்சனை எழுந்தபோதே, முதல்வர் கருணாநிதி, காங்கிரஸ் கட்சித் தலைவரையும், பிரதமரையும் நேரில் சந்தித்து அகில இந்திய பொது நுழைவுத் தேர்வினால் தமிழகத்தில் உள்ள ஏழை, எளிய, அடித்தளத்து மாணவ-மாணவியருக்கு ஏற்படும் பாதிப்புகளை விரிவாக எடுத்துரைத்து, பொது நுழைவுத் தேர்வை கைவிட வற்புறுத்த வேண்டும் என்று நான் வலியுறுத்தி இருந்தேன்.

ஆனால், கருணாநிதி அதைச் செய்யவில்லை. மாறாக, தன்னுடைய மனக் கொதிப்பை வெளியிட்டு பிரதமருக்கு கடிதம் எழுதியதாகவும், அந்தக் கடிதத்தை எழுதியதன் காரணமாகத் தான் மருத்துவப் படிப்பிற்கான நுழைவுத் தேர்வு- நிறுத்தி வைப்பு என மத்திய அரசு அப்போது அறிவித்ததாகவும் பத்திரிகைகளில் செய்தி வந்திருக்கிறது என்று தெரிவித்தார்.

மேலும், மத்திய அரசை குறை கூற வேண்டும் என்பதற்காக சிறுசிறு பிரச்சனைகளையெல்லாம் பூதாகரமாகப் பெரிதுபடுத்தும் கட்சிகளைப் பற்றி தனக்குக் கவலையில்லை என்றும் அப்போது தெரிவித்தார். அதாவது, மருத்துவப் படிப்பிற்கான பொது நுழைவுத் தேர்வு என்பது கருணாநிதிக்கு சிறு பிரச்சனை!.

மீண்டும் இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் மருத்துவ பட்ட மேற்படிப்பிற்கான சேர்க்கை பொது நுழைவுத் தேர்வின் அடிப்படையில் அமைவது குறித்த அறிவிக்கை விரைவில் வெளியிடப்படும் என்று மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்து இருந்ததை சுட்டிக்காட்டி, இந்தப் பொது நுழைவுத் தேர்வு முறையை உடனடியாகக் கைவிட வேண்டும் என்று நான் வலியுறுத்தி இருந்தேன்.

உடனே எனது அறிக்கைக்கு பதில் அளிக்கும் விதமாக, இந்த வழக்கை தமிழக அரசு உன்னிப்பாக கவனித்து வருவதாகவும், தமிழக அரசின் நடவடிக்கைகளை மறைத்தும், திரித்தும் சிலர் வெளியிடும் அறிக்கை உள்நோக்கம் கொண்டது என்றும் கூறினார்.

தற்போது 2011-12ம் கல்வி ஆண்டு முதல் மருத்துவப் படிப்புகளுக்கு அகில இந்திய அளவில் நுழைவுத் தேர்வை நடத்த இந்திய மருத்துவக் குழுமம் முடிவு செய்து இருக்கிறது என்ற அளவில் செய்தி வந்துள்ளது. இதற்கு உச்ச நீதிமன்றத்தின் அனுமதியும் பெற்றாகிவிட்டது.

அடுத்த முக்கியமான பிரச்சனை பெட்ரோல், டீசல் விலை உயர்வு. சர்வதேச சந்தை விலைக்கு ஏற்றாற்போல் பெட்ரோல் விலையை அந்தந்த எண்ணெய் நிறுவனங்களே உயர்த்திக் கொள்ளலாம் என்ற மத்திய அரசின் முடிவுக்கு திமுக அரசு முழு ஒத்துழைப்பு கொடுத்ததன் காரணமாக, மத்திய அரசின் எண்ணெய் நிறுவனங்கள் தங்கள் விருப்பம் போல் பெட்ரோல் விலையை உயர்த்துகின்றன. அந்த வகையில் தற்போது பெட்ரோலின் விலை 3 ரூபாய் அளவுக்கு உயர்த்தப்பட்டு இருக்கிறது.

நடப்பாண்டில் மட்டும் இதுவரை 8 முறை பெட்ரோலின் விலை உயர்த்தப்பட்டு இருக்கிறது. அதாவது, ஒரே ஆண்டில் 11 ரூபாய் 86 காசு அளவிற்கு பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டு இருக்கிறது. இந்த விலை உயர்வு அறிவிப்பு, விலைவாசி உயர்வுக்கு வழி வகுப்பதோடு, ஏழை, எளிய, நடுத்தர மக்களை கடுமையாக பாதிப்படைய வைத்துள்ளது.

இந்தச் சூழ்நிலையில், டீசல் விலையை உயர்த்துவது குறித்து தற்போது மத்திய அரசு ஆலோசித்து வருவதாகவும் செய்திகள் வருகின்றன.

2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் ரூ. 1 லட்சத்து 80 ஆயிரம் கோடி அரசு கருவூலத்திற்குச் சென்று இருந்தால், பெட்ரோல் விலை உயர்வு ஏற்பட்டு இருக்காது.

மருத்துவ படிப்பிற்கு பொது நுழைவுத் தேர்வு, பெட்ரோல் விலை உயர்வு ஆகியவற்றுக்கு காரணமான மத்திய அரசுக்கும், மத்திய அரசின் முடிவுகளுக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்துக் கொண்டிருக்கும் முதல்வர் கருணாநிதிக்கும் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்வதோடு, மருத்துவ படிப்புக்கான பொது நுழைவுத் தேர்வினையும், பெட்ரோல் விலை உயர்வினையும் மத்திய அரசு உடனடியாகக் கைவிட வேண்டும் என்று வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன்.

கருணாநிதி, மத்திய அரசில் தனக்குள்ள செல்வாக்கைப் பயன்படுத்தி மருத்துவப் படிப்பிற்கான பொது நுழைவுத் தேர்வை கைவிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியள்ளார் ஜெயலலிதா.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+