மஸ்கட்டில் தீ விபத்து-4 தமிழர்கள் உள்பட 5 பேர் உடல் கருகி பலி

நெல்லை மாவட்டம் புளியங்குடி பாலவினாயகர் கோவில் தெற்கு தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணன் மகன் மணிகண்டன். பெயிண்டர். இவருக்கு கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் தங்கம் என்ற பெண்ணுடன் திருமணம் நடந்தது.
தங்கம் 7 மாத கர்ப்பிணியாக இருந்தபோது மணிகண்டன் அவரது உறவினர்கள் உதவியுடன் மஸ்கட்டிற்கு வேலைக்கு சென்றார். அங்கு தனியார் கம்பெனியில் மணிகண்டன் பெயிண்டராக வேலை பார்த்து வந்தார்.
அவருடன் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த சுப்பிரமணியன், பாலசந்திரன், ஜானி ஆகியோரும் கேரளாவை சேர்ந்த அனிஷ் என்பவரும் ஓரே அறையில் தங்கியிருந்து வேலை பார்த்து வந்தனர். இதில் அனிஷ் மட்டும் என்ஜினியர் ஆவார்.
அவருக்கு கடந்த 9 மாதங்களுக்கு முன்தான் திருமணம் நடந்தது. இவர்கள் அனைவரும் பைசியா நகரில் அறை எடுத்து தங்கியிருந்தனர். நேற்று முன்தினம் அதிகாலை 2 மணி அளவில் திடீரென இவர்கள் தங்கியிருந்த அறையில் தீப்பற்றி எரிந்தது.
இதனையறிந்த 5 பேரும் அறையில் இருந்து தப்பிக்க முயன்றனர். ஆனால் புகை மூட்டத்தில் சிக்கி அவர்கள் உடல் கருகி இறந்தனர். ஓமன் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீயில் கருகியவர்களின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு வேலை பார்த்து வந்த மணிகண்டனின் உறவினர்கள் மருத்துவமனைக்கு வந்து மணிகண்டன் இறந்ததை உறுதி செய்தனர். புளியங்குடியில் உள்ள மணிகண்டன் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மணிகண்டனுக்கு சக்தி மாரி என்ற 2 வயது மகள் உள்ளார். அவருடைய தந்தை விவசாய கூலி வேலை செய்து வருகிறார். மணிகண்டன் தம்பி ஒருவர் மனவளர்ச்சி இல்லாத நிலையில் உள்ளார். மணிகண்டன் வெளிநாடு சென்றதில் இருந்துதான் கொஞ்சம் குடும்ப கஷ்டம் தீர்ந்தது.
மனைவி கர்ப்பிணியாக இருந்தபோது சென்ற மணிகண்டன் மகள் பிறந்து 2 வயதாகியும் இன்னும் பார்க்கவில்லை. அடுத்த மாதம் மகளை பார்க்க ஊருக்கு வருவதாக இருந்த நிலையில் அவர் இறந்தது அவரது உறவினர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. மேலும் அவரது மனைவி மற்றும் உறவினர்கள் கதறி அழுதது பரிதாபத்தை ஏற்படுத்தியது.












Click it and Unblock the Notifications