அதிமுக-காங் கூட்டணி வருமா?-தெரியாது என்கிறார் கருணாநிதி

Subscribe to Oneindia Tamil

Karunanidhi
சென்னை: சட்டசபை தேர்தலில் காங்கிரஸ்-அதிமுக உறவு ஏற்படும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் இளங்கோவன் கூறியிருக்கிறாரே? என்று கேட்டதற்கு, அதுபற்றி எனக்கு தெரியாது என்று முதல்வர் கருணாநிதி பதிலளித்தார்.

சட்டசபை தேர்தலை சந்திப்பது குறித்து நெல்லை மாவட்ட திமுக நிர்வாகிகளுடன் முதல்வர் கருணாநிதி கலந்துரையாடல் நடத்தினார். அதில் கருணாநிதி பேசியதாவது:

மாவட்டச் செயலாளர் கருப்பசாமி பாண்டியன் தனது மாவட்டத்தில் உள்ள சிலரைப் பற்றி சில குறைகளை இங்கே எடுத்துரைத்தார். அந்தக் கருத்துக்களை சிறிதளவுகூட மறுக்க முடியாமல் அத்துணை ஆதாரப்பூர்வமாக இங்கே எடுத்து வைத்த குற்றச்சாட்டுகளை உண்மை என்று நானும் நம்பி, குறிப்பிடப்பட்ட அந்தப் பெயர்களுக்குரியவர்கள் மீதெல்லாம் நடவடிக்கை எடுப்பேன் என்று யாரும் எண்ண வேண்டாம்.

சில பேருக்கு கட்சியிலே பிடிப்பு, சில பேருக்கு கட்சியிலே பற்று, சில பேருக்கு கட்சித் தலைவரிடத்திலே பாசம்- இது போல் இருப்பது வாடிக்கை. அந்த வகையிலே பற்று, பாசம் கொண்டு அதற்காக ஒரு காரியத்தைச் செய்ய வேண்டும் என்று எண்ணுகிறவர்கள் மாவட்டத்திலே உள்ள செயலாளரை தலைமைக் கழகத்திலே உள்ள தலைவர்களுக்கு அடுத்தபடியாக உள்ள தலைவராக எண்ண வேண்டும்.

சட்டமன்ற உறுப்பினர் அருமை நண்பர் அப்பாவு இதுவரையில் திமுகழகத்தைச் சேர்ந்தவர் அல்ல. இப்பொழுது அழுத்தந்திருத்தமாக திராவிட இயக்கக் கருத்துக்களை, திராவிட முன்னேற்றக் கழகக் கருத்துக்களை மேடைகளிலும், ஏன் சட்டமன்றத்திலும் எடுத்துச் சொல்லக்கூடிய ஆற்றல் பெற்றவராக விளங்குகிறார் என்பதை எல்லோரும் அறிவீர்கள்.

அவரைப் பற்றி கருப்பசாமி பாண்டியன் இங்கே சில குறைகளைத் தெரிவித்தார். அப்பாவு எந்த ஒரு கருத்தையும் அழுத்தந்திருத்தமாக புள்ளிவிவரங்களோடு, ஆதாரங்களோடு பேசுவதைக் கண்டு அவரைப் போன்றவர்கள் நம்முடைய இயக்கத்திற்கு இன்னும் பலர் வரவேண்டுமே என்று நான் எண்ணிக் கொள்வதுண்டு.

அவர் என்னிடம் கொண்டுள்ள அன்பின் காரணமாக, பற்றின் காரணமாக என்னுடைய பெற்றோருக்கு சிலை வைக்க ஆரம்பித்து அதன் காரணமாக ஆவேசப்பட நேர்ந்தாலும், அரசியலில் அவசரம், ஆத்திரம் இவைகள் எல்லாம் சில நேரங்களில் நமக்கு பகையாக ஆகிவிடும்.

இவ்வளவு பெரிய தமிழ்நாட்டில், திருநெல்வேலியில் என்னுடைய பெற்றோருக்கு சிலை வைக்காவிட்டால் என்ன குடியா முழுகி விடும்?.

என்னுடைய சிலை வைப்பதையே அண்ணா விரும்பி, அதற்கான முயற்சிகளையெல்லாம் பவளவண்ணன் என்ற இயக்கத் தோழர் சென்னையில் இன்றைய அண்ணா சாலையில் அன்றைக்கு குழியெல்லாம் தோண்டி, பீடமெல்லாம் அமைத்த பிறகு, நான் போய்த் தடுத்து, அந்தப் பீடத்தை அகற்றச் சொன்னவன்.

இந்த மாவட்டத்தின் அமைச்சர் பூங்கோதையைப் பொறுத்த வரையில், என்னுடைய ஆருயிர் நண்பராக இருந்த ஆலடி அருணாவின் புதல்வி. ஆலடி அருணா கொஞ்சம் அலைபாய்ந்து தேவையில்லாமல் என் மீது கோபித்துக் கொண்டு ஒரு புத்தக வெளியீட்டு விஷயத்தில் அவசரப்பட்டு, கட்சியை விட்டே விலகுகிறேன் என்ற ஒரு முடிவுக்கு வந்தபோது, என் வீட்டிற்கு வந்து, கேவி கேவி அழுதவர் பூங்கோதை என்பதை நான் மறந்துவிடவில்லை.

அமைச்சர் பொறுப்பை ஏற்ற உடனேயே ஒரு டேப் விவகாரம் பெரிதுபடுத்தப்பட்டு, சட்டசபையிலே எதிரொலித்த போது, அப்போது பூங்கோதை காப்பாற்றப்பட்டது உங்களுக்குத் தெரியும்.

இப்பொழுது கூட, தேவையில்லாமல் யாரோ டாடாவின் செயலாளரோடு பூங்கோதை பேசினார் என்றதும், அதற்குப் பூங்கோதை மறுப்பு கூட கொடுத்திருக்கிறார். பேசவில்லை என்று மறுப்பல்ல, என்ன பேசினேன் என்றுதான் மறுப்பு.

இதே டாடா என்னைப் பார்க்க வந்த போதே அவர் கொஞ்சம் தயக்கத்தோடுதான் என்னிடத்திலே பேசினார். டாடாவை விட பணத்தில் நான் பெரிய ஆள் அல்ல. இருந்தாலும், அவருக்கு என்னைப் பற்றித் தெரிந்த காரணத்தினால், ''நான் உங்களைப் பார்க்க வந்ததைத் தவறாக எடுத்துக் கொள்ளாதீர்கள், நான் பெரிய தொழிலதிபர் என்றாலும்கூட, என்னுடைய தொழிலுக்காக இன்ன சலுகைகளை நீங்கள் எனக்குச் செய்து கொடுக்க வேண்டும் என்று உங்களிடம் நான் கேட்பேன் என்றால், அது நியாயத்தின் காரணமாக கேட்கப்படுவதே தவிர, இதிலே பணப் பரிவர்த்தனை எதுவும் இருக்க முடியாது, நானும் கேள்விப்பட்டேன், நீங்களும் அப்படிப்பட்டவர் அல்ல'' என்று கூறித்தான் பேச்சை ஆரம்பித்தார்.

இனியாவது பூங்கோதை கட்சியை வளர்ப்பதற்கு எப்படிப்பட்ட காரியங்களில் ஈடுபட வேண்டும் என்பதை எண்ணிப் பார்த்து, அந்த வகையில் தன்னைப் பக்குவப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன்.

இது போன்ற ஒன்றிரண்டு கருத்துக்களைத் தான் கருப்பசாமி பாண்டியன், இங்கே சொன்னார்.

அவர் மாவட்டக் கழகச் செயலாளராகப் பொறுப்பேற்கும்போதே அந்தப் பொறுப்பு தனக்கு வேண்டாமென்று தான் சொன்னார். அவரிடம் நான் அமைச்சர் ஆகிறீர்களா, மாவட்டக் கழகச் செயலாளராக ஆகிறீர்களா என்று கேட்ட போது, இரண்டும் வேண்டாம் என்றார். நான் மாவட்டச் செயலாளர் பொறுப்பிலே இல்லாவிட்டாலும், மாவட்டச் செயலாளர் செய்யக் கூடிய வேலைகளை நான் செய்யத் தயாராக இருக்கிறேன் என்றார்.

அவரைப் புகழ வேண்டுமென்பதற்காக இதை நான் சொல்லவில்லை. நடந்த விஷயங்கள். அமைச்சர் பொறுப்பேற்கிறீர்களா என்று கேட்டபோதும், நீங்கள் இரண்டு சொன்னீர்கள், வேண்டுமானால் மாவட்டச் செயலாளர் பொறுப்பை என் தலையில் கட்டுங்கள், அமைச்சர் வேண்டாம் என்று தான் என்னிடம் அவர் சொன்னார். அவர் இன்றைக்கு தன் கவலைகளை வார்த்தையாக்கிப் பேசினார்.

நம்முடைய கழகம் எதிர்காலத்தில் பெற வேண்டிய மிக முக்கியமான வெற்றி- இதுவரை பெற்ற வெற்றிகளையெல்லாம் விட- பெரிய வெற்றியாக இருக்கப் போவது, வந்தே தீர வேண்டிய வெற்றி- வந்தால் தான் நம் எதிரியின் அட்டகாசத்தை அறவே ஒழிக்க முடியும் என்ற அளவுக்கு வரக் கூடிய வெற்றி- அந்த வெற்றியை நாடி இப்போது நாம் நடை போட்டுக் கொண்டிருக்கிறோம்.

அது நமக்கு வந்து விடக் கூடாது என்பதற்காக தமிழகத்திலே சில சக்திகள் ஒன்று கூடி சதிகள் செய்து கொண்டிருக்கின்றார்கள்.

இதை உணர்ந்து நீங்கள் உறுதி எடுத்துக் கொண்டால், இப்போது இருக்கின்ற இந்தப் பத்திரிகைகள் அல்ல, யார் என்ன ஆயுதங்களோடு நம்மை எதிர்க்க வந்தாலும், அவர்களை தூசியாக தட்டியெறியக் கூடிய ஆற்றல் உங்களுக்கு வரும். அதைத் தான் நீங்கள் செய்ய வேண்டும்.

இல்லாவிட்டால் நம்மைத் தூசியாக, துரும்பாக அவர்கள் எண்ணிக் கொள்வார்கள்.

நமக்கு எதிராக என்னென்ன காரியங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன என்பது எனக்குத் தெரியாதது அல்ல. நம்மை ஆதரித்துக் கொண்டிருக்கின்ற அணியிலே உள்ள சில முக்கியமானவர்களைக் கூட நம்மிடமிருந்து பிரிப்பதற்காக நடைபெறுகின்ற சூழ்ச்சி, சூது இவைகளை எல்லாம் நான் அறிந்து கொள்ளும் நிலையிலே தான் இருக்கிறேன்.

அன்றாடம் அறிந்து கொண்டும் இருக்கின்றேன். இவ்வளவு அழுக்கு, சேறு நம் மீது அள்ளி வீசப்பட்ட பிறகும், அதைப்பற்றிக் கவலைப்படாமல் தமிழ் நாட்டு மக்கள் நம்முடைய கூட்டங்களுக்கு பெருவாரியாக வருகிறார்கள். பல்லாயிரக்கணக்கிலே வருகிறார்கள்.

பேராசிரியர் கலந்து கொள்கின்ற கூட்டங்களானாலும், நம்முடைய ஸ்டாலின் செல்கின்ற கூட்டங்களானாலும், நம்முடைய அமைச்சர்கள் செல்கின்ற கூட்டங்களானாலும், நான் சென்று வருகின்ற கூட்டங்கள், வரவேற்பு நிகழ்ச்சிகளானாலும் அங்கே கூடுகின்ற மக்கள் ஒரு உறவு மனப்பான்மையோடு வாழ்த்தொலிக்கிறார்கள்.

அண்மையில் நான் ஏலகிரிக்குச் சென்று வந்தேன். ஒரே நாள் தான். அந்த ஒரு நாள் சென்றதற்கே பத்தாயிரம் மக்களைச் சந்திக்கின்ற வாய்ப்பு எனக்கு ஏற்பட்டது. சந்தித்தவர்கள் எல்லாம் கட்சித் தோழர்கள் என்ற நிலையிலே இல்லை. பாட்டாளி மக்கள், சர்வ சாதாரணமான குடும்பங்களைச் சேர்ந்தவர்கள், நடுத்தரக் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள். இவர்கள் எல்லாம் ஒரு தம்பியை அண்ணன் பார்ப்பதைப் போல- பெரியவர்கள், வயதானவர்கள் ஒரு மகனைப் பார்ப்பதைப் போலத்தான் என்னைப் பார்த்து வாழ்த்தினார்கள்.

இங்கேயிருந்து ஏலகிரி செல்வதற்கும், திரும்பி வருவதற்கும் ஏறத்தாழ 300 கல் தொலைவு நான் சென்று வந்த நேரத்தில் அத்தனை ஆயிரம் மக்களை நான் சந்தித்தேன். யாரும் முகம் சுளிக்கவில்லை.

யாரும் ஒரு வெறுப்புணர்ச்சியைக் காட்டவில்லை. எனக்கு மக்களைப் பார்க்க பார்க்க மேலும் மேலும் நம்பிக்கை வந்து கொண்டிருக்கிறது. அப்படிப்பட்ட நம்பிக்கையைப் பெறுகின்ற காரணத்தால் திமுக வெற்றி பெறும்.

திருநெல்வேலி மாவட்டம் நான் ஒவ்வொரு மாவட்டத்தைப் பற்றியும் சொல்வதைப் போல எனக்கு புதிய மாவட்டம் அல்ல. இப்போது நம்முடைய ஸ்டாலின் அங்கே அடிக்கடி வருகிறார். நீங்கள் வாழ்த்துகிறீர்கள், கூட்டங்களை நடத்துகிறீர்கள். அவரை 'தளபதி' என்று அழைக்கிறீர்கள். எனக்குப் பெருமையாகக் கூட இருக்கிறது. இந்தத் தளபதி யார் என்று நான் எண்ணும்போது,

பாளையங்கோட்டையிலே "நான் வந்து செல்கின்ற புனிதமான யாத்திரை ஸ்தலம் இது'' என்று நான் அங்கே சிறையிலே இருந்த காரணத்தால் என்னுடைய அண்ணன், பேரறிஞர் அண்ணா புகழ்ந்து பேசினாரே, அப்படிப்பட்ட பாளையங்கோட்டையில், நான் தனிமைச் சிறையில் இருந்ததும்- அங்கேயிருந்த ஒரு அணில் குஞ்சு தான் எனக்குத் துணையாக இருந்ததும்- நீங்கள் எல்லாம் அறியாதது அல்ல.

அத்தகைய சித்திரவதைகளை அனுபவித்து பல நாட்கள் பாளையங்கோட்டையிலே இருந்து, அதற்குப் பிறகு நெருக்கடி காலத்திலே நான் பட்ட சிரமங்களுக்காக கவலையில்லை, என்னை நம்பி வந்திருக்கின்ற கழகத் தோழர்கள் பலரும்- இவ்வளவு அவஸ்தைகளுக்கு ஆளாகிறார்களே- என்னை நம்பி வந்த காரணத்தால் அல்லவா என்று அதை விட அதிகமாக நான் பட்ட கவலை- எனக்கேற்பட்ட சித்திரவதைகளை விட அதிகமாக இருந்தது என்பதை எண்ணிப் பார்த்தால், அதற்குப் பிறகும் நாம் மீண்டு வந்திருக்கிறோம். காரணம் என்னுடைய பலத்தால் அல்ல- பேராசிரியரின் பலத்தால் அல்ல,ஸ்டாலினின் பலத்தால் அல்ல, வீராசாமியின் பலத்தால் அல்ல, பரிதியின் பலத்தால் அல்ல- எத்தனை பேருடைய பலம்- உங்களையெல்லாம் பார்க்கும் போது ஒவ்வொரு முறையும் எனக்கு பலம் பெருகிக் கொண்டே இருக்கின்றது. வலிமை வளர்ந்து கொண்டே இருக்கிறது.

பாளையங்கோட்டை சிறையிலிருந்து விடுதலையாகி வெளியே வரும்போது நீங்கள் ஒரு மன்னரை வரவேற்று மகிழ்வதைப் போல வரவேற்று மகிழ்ந்த அந்தக் காட்சி என் கண் முன்னால் இன்றைக்கும் நின்று கொண்டிருக்கின்றது. பாளையங்கோட்டை சிறைச்சாலையிலே நான் இருந்த போது அங்கே நீங்கள் என்னை வந்து காண்பதற்காக நீங்கள் பட்ட பாடும், நான் அங்கேயிருந்து விடுதலையாகி வெளியே வந்த பிறகு, அதற்கு பிறகு என்னைக் கொல்வதற்கே ஒரு சூழ்ச்சி நடந்து, காரிலே செல்லும்போது அதே மாவட்டத்தில் உளி வீசப்பட்ட சம்பவம் நடந்ததும், இவைகள் எல்லாம் திருநெல்வேலி மாவட்டத்தின் மறக்க முடியாத அடையாளங்கள், என்னைப் பொறுத்தவரையில்.

அப்படி மறக்க முடியாத மாவட்டங்களில் திருநெல்வேலி மாவட்டமும் ஒன்று.

அந்த மாவட்டத்தில் மாவீரர்களாக விளங்கிக் கொண்டிருக்கின்ற நீங்கள், இந்தக் கட்சியை தோற்க விட மாட்டீர்கள். ஏனென்றால் இந்தக் கட்சி மந்திரி பதவிகளுக்காகவோ, எம்.எல்.ஏ, எம்.எல்.சி, பதவிகளுக்காகவோ, எம்.பி. பதவிகளுக்காகவோ தொடங்கப்பட்டதல்ல. இந்தக் கழகம் திராவிட இன உணர்வைக் கட்டிக் காப்பதற்காகத் தொடங்கப்பட்டது. அந்த உணர்வை தொடர்ந்து நாம் காப்பாற்றியே தீரவேண்டும்.

சில அசம்பாவிதங்கள் இயக்கத்திற்கு ஏற்பட்டது உண்டு. அவைகளை எல்லாம் தாண்டித்தான் இந்த இயக்கம் வளர்ந்திருக்கிறது, வளர்ந்து கொண்டிருக்கிறது, மேலும் வளரப் போகிறது. அப்படிப்பட்ட இயக்கத்திலே உங்களை நீங்கள் ஒப்படைத்துக் கொண்டிருக்கிறீர்கள்.

நாம் இதே வேகத்தில், இன்றைக்கு பெறுகின்ற அதே உணர்வைப் பெற்று, ஒற்றுமை உணர்வோடு இந்த இயக்கத்தைக் கட்டிக் காப்போம் என்ற உறுதியை அண்ணா அறிவாலயத்திலே- அண்ணாவின் நினைவாக சபதமாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றார் கருணாநிதி.

முன்னதாக அவரிடம் செய்தியாளர்கள், சட்டசபை தேர்தலில் காங்கிரஸ்-அதிமுக உறவு ஏற்படும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் இளங்கோவன் கூறியிருக்கிறாரே? என்று கேட்டதற்கு, அதுபற்றி எனக்கு தெரியாது என்று முதல்வர் பதிலளித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+