சிங்காரச் சென்னை என்று கூறி நகரத்தை சீரழித்துக் கொண்டிருக்கிறது திமுக அரசு-ஜெ.

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழ்நாட்டின் தலை நகரமான சென்னை மாநகரத்திலேயே சாலைகள் குண்டும், குழியுமாக காட்சியளிக்கும் அளவுக்கு சாலைக் கட்டமைப்பு மிக மோசமாக இருக்கிறது. தரமற்ற சாலைகள் போடப்பட்டதன் காரணமாக, அண்மையில் பெய்த மழைக்கு அனைத்து சாலைகளும் பழுதடைந்துள்ளன.
சென்னை மாநகரத்திலேயே சாலைகளின் லட்சணம் இப்படி இருக்கிறது என்றால், கிராமப்புற சாலைகள் எப்படி இருக்கும் என்பதை உங்களின் யூகத்திற்கே விட்டு விடுகிறேன்.
சென்னை மாநகரத்தில் உள்ள சாலைகள் வெகுவாக பழுதடைந்துள்ளதன் காரண மாக அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதாகவும், வாகனங்களில் அடிக்கடி பழுது ஏற்படுவதன் காரணமாக பொது மக்களுக்கு கூடுதல் செலவு ஏற்பட்டுள்ளதாகவும், போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதன் காரணமாக குறித்த நேரத்தில் அலுவலகங்களுக்கும், பள்ளிகளுக்கும், கல்லூரிகளுக்கும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் சென்னை வாழ்மக்கள் தெரிவிக்கின்றனர்.
சுருக்கமாக சொல்ல வேண்டு மென்றால், வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் பெருத்த இன்னலுக்கு ஆளாகியுள்ளனர்.
தரமற்ற சாலைகள் காரண மாகத்தான் அண்மையில் பெய்த மழைக்கு சாலைகள் பழுதடைந்துள்ளன என்றும், மழை நின்று வெகுநாட்களாகியும் பழுதடைந்த பகுதிகளை சீர்செய்யக் கூட தி.மு.க. அரசு முன்வர வில்லை என்றும் புகார்கள் வந்த வண்ணம் உள்ளன.
மொத்தத்தில், சிங்கார சென்னை என்று சொல்லி சென்னை மாநகரத்தை சீரழித்துக் கொண்டிருக்கிறது. இது குறித்து தொடர்புடைய அதிகாரிகளிடம் பொது மக்கள் முறையிட்டும் எந்த விதமான நடவடிக்கையையும் அரசு எடுக்கவில்லை.
எனவே, சென்னை மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்தும் மக்களின் துயர் தீர்க்கும் வகையில், உடனடியாக அனைத்துச் சாலைகளையும் சீர்செய்ய வலியுறுத்தியும் அ.தி.மு.க. தென்சென்னை மாவட்டக் கழகத்தின் சார்பில், செவ்வாய்க்கிழமை காலை 10 மணி அளவில், சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அவர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications