வாய்க்காலில் வீசி குழந்தை கொலை-துப்பு துலக்க முடியாமல் திணறும் போலீசார்
தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே ஒன்றரை வயது ஆண் குழந்தை வாய்க்காலில் வீசி கொல்லப்பட்டது. கொலை செய்தவர்களை கண்டுபிடிக்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.
தூத்துக்குடி அடுத்த கோரம்பள்ளம் அருகே பெரியநாயகபுரத்தைச் சேர்ந்தவர் டேனியல்.லாரி டிரைவர். இவரது மனைவி கனகமணி. இவர்களது ஒன்றரை வயது மகன் இசக்கி மணி கடந்த டிசம்பர் மாதம் 18ம் தேதி அன்று வீட்டுக்கு அருகில் விளையாடி கொண்டிருந்தபோது திடீர் என்று காணாமல் போனான்.
இந்நிலையில் குழந்தையின் உடலை போலீசார் டிசம்பர் மாதம் 22-ம் தேதி அங்குள்ள வாய்க்காலில் அழுகிய நிலையில் மீட்டனர். இதையடுத்து யாரோ மர்ம நபர் அக்குழந்தையை வீட்டில் இருந்து கடத்திச் சென்று வாய்க்காலில் வீசியது தெரிய வந்தது.
ரூரல் டிஎஸ்பி ஜெயக்குமார் தலைமையிலான போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி வந்தனர். இது தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த 7 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். சொத்து தகராறு காரணமாக குழந்தை கொல்லப்பட்டதா, அல்லது முன்விரோதம் காரணமாக யாராவது குழந்தையைக் கொடூரமாக கொலை செய்தார்களா என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரித்து வந்தனர். ஆனால் இதுவரை கொலைக்கான காரணம் தெரியவில்லை.
இக்கொடூர செயலில் ஈடுபட்டவர்கள் யார் என்றும் போலீசாரால் கண்டுபிடிக்க முடியவி்ல்லை. மேலும் இந்த சம்பவத்தில் போலீஸ் விசாரணையில் தொய்வு ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications