மேடையில் பேசிய தா.பாண்டியனை தாக்க முயன்ற வாலிபர்
விருதுநகர்: இந்திய கம்யூனி்ஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் விருதுநகர் பொதுக்கூட்டத்தில் பேசிக் கொண்டிருந்தபோது அவரை ஒரு வாலிபர் தாக்க முயன்றார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்த பொதுக்கூட்டம் இந்திய கம்யூனிஸ்டு மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சார்பில் நேற்றிரவு விருதுநகரில் உள்ள தேசபந்து மைதானத்தில் நடந்தது. அந்த கூட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் ராமசாமி தலைமை வகித்தார். இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் தா.பாண்டியன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார்.
அவர் மேடையில் பேசிக் கொண்டிருக்கையில் கூட்டத்தில் இருந்த ஒருவர் திடீரென மேடைக்கு வந்து, எங்களைப் பற்றி பேசாதே என்று மிரட்டியபடி பாண்டியனை தாக்க முயன்றார்.
இதையடுத்து கம்யூனிஸ்ட் கட்சியினர் மேடைக்கு பாய்ந்து வந்து அந்த நபரை மேடையில் இருந்து இழுத்துச் சென்று நையப் புடைத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இந்த சம்பவம் குறித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சி தாலுகா செயலாளர் சீனிவாசன் விருதுநகர் மேற்கு போலீசில் புகார் கொடுத்தார்.
இதையடுத்து அந்த நபரை போலீசார் விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.












Click it and Unblock the Notifications