சென்னை சங்கமம் நிகழ்ச்சியில் தொடர்பு உள்ளதா?-விளக்கமளிக்க தமிழக அரசுக்கு உத்தரவு
சென்னை: தமிழ் மையம் அமைப்பு நடத்தும் சென்னை சங்கமம் நிகழ்ச்சியில் தமிழக அரசுக்குத் தொடர்பு உள்ளதா என்பது குறித்து இன்றைக்குள் விளக்கம் அளிக்குமாறு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கெடு விதித்து உத்தரவிட்டுள்ளது.
சமீபத்தில் தமிழ் மையம் அமைப்பின் அலுவலகம் சிபிஐ சோதனைக்குள்ளானது. 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பான வழக்கின் ஒரு பகுதியாக இந்த சோதனை நடைபெற்றது. ஆண்டுதோறும் தமிழ் மையம் அமைப்பு, தமிழக அரசின் சுற்றுலாவளர்ச்சித்துறையுடன் இணைந்து சென்னை சங்கமம் நிகழ்ச்சியை நடத்தி வருகிறது. இந்த ஆண்டுக்கான நிகழ்ச்சி குறித்து சமீபத்தில் திமுக எம்.பி. கனிமொழி செய்தியாளர்களிடம் விளக்கினார்.
இந்த நிலையில், இதை எதிர்த்து வழக்கறிஞர் புகழேந்தி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
அதில், ஜெகத் கஸ்பார் ராஜ் தலைமையிலான தமிழ் மையம் அமைப்பு தமிழக அரசின் சுற்றுலா மற்றும் கலாச்சாரத் துறை, தமிழ்நாடு சுற்றுலா மேம்பாட்டுக் கழகத்துடன் இணைந்து சென்னை சங்கமம் நிகழ்ச்சியை நடத்தி வருகிறது.
சமீபத்தில் 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில், தமிழ் மையத்திற்கு உள்ள தொடர்புகள் குறித்து அறிய சிபிஐ சோதனை நடைபெற்றது. எனவே இந்த அமைப்புடன், தமிழக அரசு இணைந்து செயல்படக் கூடாது என உத்தரவிட வேண்டும்.
சிபிஐயின் கண்காணிப்பில் உள்ள ஒரு அமைப்புடன் அரசு இணைந்து செயல்பட்டால் அது பொதுமக்கள் நலனைப் பாதிக்கும் என்று கூறியிருந்தார்.
இந்த மனு நேற்று தலைமை நீதிபதி இக்பால் மற்றும் நீதிபதி சிவஞானம் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுவை விசாரணைக்கு அனுமதித்த நீதிபதிகள்,சென்னை சங்கமம் நிகழ்ச்சி தமிழ் மையத்தின் நிதியில் நடத்தப்படுகிறதா அல்லது அரசு நிதியுதவியுடன் நடத்தப்படுகிறதா அல்லது தமிழ் மையத்தின்கலை நிகழ்ச்சிகளுடன் அரசுக்குத் தொடர்பு உள்ளதா என்பது குறித்து இன்றைக்குள் விளக்கம் அளிக்குமாறு அரசு வக்கீல் ராஜா கலிபுல்லாவுக்கு உத்தரவிட்டனர்.
வழக்கை இன்றைக்கு ஒத்திவைத்த நீதிபதிகள், தமிழ் மையத்திற்கு மனுதாரர் தனியாக ஒரு விளக்க நோட்டீஸ் அனுப்பவும் அனுமதி அளித்தனர்.
சென்னை சங்கமம் நிகழ்ச்சிகள் ஜனவரி 12ம் தேதி தொடங்கி 17ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications