போலீசிலிருந்து தப்பிய வழக்கில் மாஜி எம்எல்ஏ ரவிசங்கருக்கு 2 ஆண்டு சிறை
நெல்லை: நீதிமன்ற விசாரணைக்காக ஆஜராகியபோது போலீசாரிடமிருந்து தப்பிச் சென்ற வழக்கில் முன்னாள் எம்எல்ஏ ரவிசங்கருக்கு மாஜிஸ்திரேட் நீதிமன்றம் 2 ஆண்டு சிறை தண்டனை விதித்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் முன்னாள் எம்எல்ஏ ரவிசங்கர். அவர் எம்எல்ஏ-வாக இருந்த காலத்தில் விளாத்திகுளம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி தலைவராகவும் இருந்தார்.
அப்போது வங்கியில் ரூ.18 லட்சம் மோசடி செய்ததாக தூத்துக்குடி வணிக புலனாய்வு குற்றப்பிரிவு போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்தனர்.
கடந்த 2004-ம் ஆண்டு ஆகஸ்ட் 31-ம் தேதி போலீசார் ரவிசங்கரை விசாரணைக்கு ஆஜர்படுத்த நெல்லை கொண்டு வந்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பிறகு ரவிசங்கர் போலீசாரிடம் இருந்து தப்பி தலைமறைவானார். இந்நிலையில் சென்னையில் வருமான வரித்துறை அதிகாரி போல் நடித்து கொள்ளையடிக்க முயன்றபோது ரவிசங்கர் போலீசில் சிக்கினார்.
இதையடுத்து போலீசாரிடம் இருந்து தப்பிச் சென்ற வழக்கில் முதலாவது மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ரவிசங்கரை போலீசார் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரி்த்த மாஜிஸ்திரேட் ராஜேந்திர கண்ணன் அவருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார்.
கூட்டுறவு மோசடி வழக்கிலும் அவருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications