அலங்காநல்லூரில் கோலாகலமாக நடந்த ஜல்லிக்கட்டு-பாலமேட்டில் ஒருவர் பலி

பொங்கல் பண்டிகையின்போது மதுரை மற்றும் சுற்றுவட்டாரத்தில் மூன்று இடங்களில் நடைபெறும் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகள் விசேஷமானவை. பொங்கல் தினமான தை 1, ஜனவரி 15ம் தேதியன்று, அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு நடைபெறும்.
அடுத்து தை 2ம் தேதியான ஜனவரி 16ம் தேதி பாலமேட்டில் ஜல்லிக்கட்டு நடைபெறும். இதையடுத்து உலகப் புகழ் பெற்று அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு தை 3ம் தேதியான ஜனவரி17ம் தேதி விமரிசையாக நடைபெறும். இன்று அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடைபெற்றது.
இதற்கான சிறப்பு ஏற்பாடுகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. நூற்றுக்கணக்கான காளை மாடுகள் ஜல்லிக்கட்டில் கலந்து கொண்டன. அனைத்து காளைகளும் முறையாக பிராணிகள் நல வாரியத்தால் பரிசோதிக்கப்பட்டன. அதேபோல மாடு பிடி வீரர்களும் பரிசோதிக்கப்பட்ட பின்னரே போட்டியில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டனர்.
ஜல்லிக்கட்டு நடைபெற்ற இடத்தில், பார்வையாளர்களை தனியாக பிரிக்கும் வகையில் நீண்ட தொலைவுக்கு தடுப்புக் கட்டைகள் போடப்பட்டு காலரிகள் அமைக்கப்பட்டிருந்தன.
மருத்துவக் குழுக்கள், ஆம்புலன்ஸ்கள் உள்ளிட்டவை தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன. முதலில் கோவில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. பின்னர் பிற காளைகள் வாடிவாசல் வழியாக அவிழ்த்து விடப்பட்டன.
சீறிப் பாய்ந்து வந்த காளைகளைப் பிடிக்க இளைஞர்களிடையே கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. சில காளைகள் யாரிடமும் பிடிபடாமல் சீறி ஓடின. காளைகளை வெற்றிகரமாக பிடித்த வீரர்களுக்கு பல்வேறு வகையான பரிசுகள் தரப்பட்டன.
பாலமேடு ஜல்லிக்கட்டு-வேடிக்கை பார்த்தவர் பலி
முன்னதாக நேற்று பாலமேட்டில் நடந்த ஜல்லிக்கட்டின்போது மாடு பிடி வீரர்கள் துணிச்சலுடன் சீறிப் பாய்ந்து வந்த காளைகளை அடக்கியது மயிர்சிலிக்க வைக்கும் வகையில் அமைந்தது.
பாலமேடு பொது கிராம மகாலிங்க சுவாமி மட கமிட்டி சார்பில் ஜல்லிக்கட்டு விழா நடந்தது. மாடுபிடி வீரர்கள் கீழே விழுந்தால் காயம் எதுவும் ஏற்படாமல் இருக்க மைதானத்தில் குறிப்பிட்ட தூரம் வரை தென்னை நார்கள் போடப்பட்டு இருந்தன.
ஜல்லிக்கட்டு விழாவிற்கு மதுரை, தேனி, திருச்சி, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம் உள்பட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பதிவு பெற்ற சுமார் 291-க்கும் மேற்பட்ட காளைகள் வந்து இருந்தன. பல்வேறு கட்ட மருத்துவ சோதனைகளுக்குப்பின் 266 காளைகள் போட்டிக்கு அனுமதிக்கப்பட்டன.
இதையடுத்து பாலமேடு உள்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த பதிவு பெற்ற 600 வீரர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. நூற்றுக்கணக்கான பார்வையாளர்கள் இரு மருங்கிலும் காலரிகளில் குவிந்திருக்க மதுரை மாவட்ட கலெக்டர் காமராஜ் காலை பத்தரை மணியளவில் ஜல்லிக்கட்டை கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.
முதலில் கோவில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. அவற்றை யாரும் பிடிக்கவில்லை. அதன் பின்னர் ஒவ்வொரு காளையாக வாடி வாசல் வழியாக அவிழ்த்து விடப்பட்டன.
துடிப்புடன் காத்திருந்த வீரர்கள், சீறி வந்த காளைகளை பிடிக்க முயன்றும், பிடித்தும், விரட்டியும் சாகசத்தில் ஈடுபட்டனர்.
சில காளைகள் பிடிபட்டன. பல காளைகள் தூக்கிப் போட்டு விட்டு சீறி ஓடின. காளைகளை அடக்கியவர்களுக்கு எவர்சில்வர் குடம் முதல் சைக்கிள், கட்டில் வரை விதம்விதமான பரிசுப் பொருட்களும், ரொக்கப் பரிசும் வழங்கப்பட்டன. அதேபோல அடக்க முடியாத காளைகளுக்கு அதன் உரிமையாளர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. தங்கக்காசு, வெள்ளிக்காசு உள்ளிட்டவையும் இதில் அடக்கம்.
ஜல்லிக்கட்டைப் பார்க்க வந்த கூட்டத்தில் சில காளைகள் புகுந்ததில் பலர் காயமடைந்தனர். அவர்களில் பாக்கியராஜ் என்ற திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டைச் சேர்ந்த34 வயது பார்வையாளர் படுகாயமடைந்து உயிரிழந்தார்.
ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை உச்சநீதிமன்றம் நியமித்துள்ள 12 பேர் கொண்ட குழு கண்காணித்தது.
இன்று நடைபெறும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டைக் காண பெரும் திரளானோர் அங்கு குவிந்துள்ளனர். ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணிக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications