அதிமுகவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்வாரா என்பதை விஜய்யிடம்தான் கேட்க வேண்டும்-ஜெ.

நேற்று மாலை அதிமுக தலைமைக் கழக அலுவலகத்திற்கு வந்தார் ஜெயலலிதா. வழக்கம் போல அவருக்கு கட்சியினர் சிறப்பான வரவேற்பு கொடுத்தனர். பின்னர் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள் ஜெயலலிதா முன்னிலையில் கட்சியில் இணைந்தனர்.
அதன் பின்னர் ஜெயலலிதா செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது கேட்கப்பட்ட கேள்விகளுக்கு ஜெயலலிதா பதிலளிக்கையில்,
ஒவ்வொரு கட்சியாகப் பேசி வருகிறோம்
கூட்டணி தொடர்பாகவும், தொகுதிப் பங்கீடு தொடர்பாகவும் சில கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருக்கிறது. கார்த்திக் தலைமையில் இயங்கும் கட்சியுடன் கூட்டணி பற்றி பேச்சுவார்த்தை இன்று முடிந்து, அவரது கட்சி அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியை ஆதரிப்பது என்ற முடிவெடுத்துள்ளது. மற்ற கட்சிகளுடன் கூட்டணி சேருவது குறித்த முடிவுகள் எடுக்கப்பட்டதும் ஒவ்வொன்றாக உங்களுக்கு அறிவிக்கப்படும்.
காங்கிரஸ் அரசு மக்களுக்கு எதிராக எப்போது எல்லாம் செயல்பட்டிருக்கிறதோ அப்போது எல்லாம் அதை எதிர்த்து போராட கருத்து தெரிவிக்க ஒரு போதும் நாங்கள் தயங்கியது இல்லை. காங்கிரஸ்-அ.தி.மு.க. கூட்டணி வரும் என்று நான் ஒருபோதும் சொல்லவில்லை.
வேறு வழியில்லாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்
திமுக அரசு இதுவரை அறிவித்த திட்டங்களும் சரி, இனிமேல் அறிவிக்க உள்ள திட்டங்களும் சரி, மக்கள் இந்த அரசு மீது வெறுப்பு கொண்டு, வேறு வழி இல்லாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
இதுவரை கண்டிராத விலைவாசி உயர்வு, மின்வெட்டு, சட்டம் ஒழுங்கு சீரழிவு, மணல் கொள்ளை, ஒட்டுமொத்தத்தில் மக்கள் உயிருக்கும், உடமைக்கும் பாதுகாப்பு இல்லாமல் பட்டபகலிலேயே கொலைகள் கொள்ளைகள் நடக்கின்றன. இதை கண்டும் காவல் துறை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது, போன்ற மக்கள் விரோத நிலைமைகள் சட்டமன்ற தேர்தலில் மக்களுக்கு எடுத்துக்கூறப்படும்.
மக்கள் இருளில் மூழ்கிக் கிடக்கிறார்கள். யாராவது வந்து நம்மை கைத்தூக்கிவிடமாட்டார்களா? இந்த இருளில் இருந்து காப்பாற்றி நம்மை யாராவது வெளிச்சத்துக்கு கொண்டுவரமாட்டார்களா. பிரச்சினைக்கு யாராவது தீர்வு கண்டு நம்மை எல்லாம் வளமாக வாழவைக்கமாட்டார்களா? என்று மக்கள் ஏங்கி கொண்டிருக்கிறார்கள். இதை எல்லாம் மக்களுக்கு எங்களது சட்டசபைத் தேர்தல் பிரசாரத்தின்போது எடுத்துக் கூறுவோம்.
நடிகர் விஜய்யின் தந்தை என்னை சந்தித்துப் பேசினார். தேர்தலின்போது விஜய் அதிமுகவுக்காக பிரசாரம் செய்வாரா என்பதை அவரிடம்தான் கேட்க வேண்டும்.
ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் எந்த தவறும் நடக்கவில்லை என்று கபில் சிபல் கூறுவது மிகவும் கண்டனத்துக்குரியது. மத்திய தணிக்கை குழு என்பது இந்திய அரசியல் அமைப்பு சட்டப்படி ஏற்படுத்தப்பட்ட ஒரு அமைப்பாகும். அப்படி இருக்கும் போது மத்திய மந்திரி கபில்சிபல் தணிக்கை குழு அறிக்கை தவறானது என்று கூறுவது, மிகவும் கண்டனத்துக்குரியது. இது அரசியல் அமைப்புக்கு எதிரானது என்றே சொல்லலாம்.
பெட்ரோல்-டீசல் விலை உயர்வுக்கு கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறேன். கடந்த வாரம்தான் பெட்ரோல் விலை 3 ரூபாய் அளவுக்கு உயர்த்தப்பட்டது. ஒரு மாதம் ஆவதற்குள் ரூ.2.50 உயர்த்தி உள்ளனர். நாளை டெல்லியில் கம்iனிஸ்டு கட்சிகள், அ.தி.மு.க., தெலுங்கு தேசம் போன்ற கட்சிகள் எல்லாம் கூடி அகில இந்திய அளவில் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து போராட்டம் நடத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளோம்.
ஆட்சி செய்ய தகுதிபடைத்த ஒரே கட்சி அ.தி.மு.க.தான்
இன்று பல்வேறு கட்சியில் இருந்து விலகி அ.தி.மு.க.வில் ஆயிரக்கணக்கான பேர் சேர்ந்துள்ளனர். மாற்றுத்திறனாளிகளின் பிரதிநிதிகள் 50 பேர் சேர்ந்துள்ளனர். இது மக்களுக்கு அ.தி.மு.க. மீது நம்பிக்கை இருக்கிறது என்பதை காட்டுகிறது. ஏன் என்றால் தமிழ்நாட்டை ஆட்சி செய்ய தகுதிபடைத்த ஒரே கட்சி அ.தி.மு.க. என்றுதான் மக்கள் முடிவுக்கு வந்துள்ளனர் என்றார் ஜெயலலிதா.












Click it and Unblock the Notifications