நாங்கள் தினந்தோறும் தாலி அறுப்பதை வேடிக்கை பார்க்க நினைக்கிறாரா ப.சிதம்பரம்-மீனவப் பெண்கள் ஆவேசம்

இந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட 100 பெண்களைப் போலீஸார் கைது செய்து அப்புறப்படுத்தினர்.
இலங்கை கடற்படை தொடர்ந்து தமிழக மீனவர்களை கொன்று குவித்து வருகிறது. கடலுக்குள் போகும் மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்பட்டு வருகின்றனர்.
இந்த செயலைக் கண்டித்தும், தமிழக மீனவர்களுக்குப் பாதுகாப்பு வழங்கத் தவறிய மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தைக் கண்டித்தும் அவரது வீட்டை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்த பல்வேறு அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ளன. இதையடுத்து அவரது சென்னை வீட்டுக்குப் பலத்த பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சென்னை காசிமேட்டைச் சேர்ந்த மீனவப் பெண்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் சிதம்பரம் வீட்டை நோக்கி திடீரென திரண்டு வந்ததனர்.
இதனால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. கையில் பூ, பழம், புடவை உள்ளிட்டவற்றுடன் ஆவேசமாக வந்த அவர்கள் ப.சிதம்பரம் நோட்டை முற்றுகையிடும் நோக்கில் அவரது வீடு உள்ள சாஸ்திரி பவன் பகுதியில் வந்தபோது போலீஸார் அவர்களைத் தடுத்து நிறுத்திக் கைது செய்த வேனில் ஏற்றிச் சென்றனர்.
மீனவர் வாழ்வுரிமை இயக்கம், இந்து மக்கள் கட்சி, நாம் தமிழர் கட்சி உள்ளிட்டவற்றைச் சேர்ந்தவர்கள் இதில் கலந்து கொண்டனர்.
இந்தப் போராட்டம் தொடர்பாக மீனவர் வாழ்வுரிமை இயக்கத்தைச் சேர்ந்த சமுத்திரா தேவி கூறுகையில், தினந்தோறும் ஒரு மீனவர் கொல்லப்பட ஒரு பெண் தாலி அறுக்கிறார். இதை ப.சிதம்பரம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார். எங்களுக்குப் பாதுகாப்பு இல்லை.
ஒரு உயிருக்கு 5 லட்சம் ரூபாய் தருவதாக கூறுகிறார்கள். அது எங்களது கணவர்களாக மாறுமா, எங்களது பிள்ளைகளாக மாறுமா, எங்களது பறிபோன வாழ்க்கை திரும்ப வருமா என்று ஆவேசமாக கேட்டார்.
இன்னொரு பெண் கூறுகையில், எங்களுக்குப் பாதுகாப்பு வேண்டும். இல்லாவிட்டால் மிகத் தீவிரமான முறையில் தினசரி போராட்டத்தை நடத்தத் தயங்க மாட்டோம் என்றார்.
இந்தப் போராட்டம் காரணமாக ப.சிதம்பரம் வீட்டுக்குக் கூடுதல் பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது.
இதேபோல காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவன், இலங்கை துணைத் தூதரகம் ஆகியவற்றுக்கும் பாதுகாப்பு போட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications