மக்கள் வலியுறுத்தினால் சங்கரன்கோவில் தொகுதியில் போட்டி: ஜான்பாண்டியன் பேட்டி
சங்கரன்கோவில்: மக்கள் வற்புறுத்தினால் சங்கரன்கோவில் தொகுதியில் நான் போட்டியிடுவேன் என்று தமமுக தலைவர் ஜான்பாண்டியன் தெரிவித்துள்ளார்.
தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் கலந்தாய்வு கூட்டம் சங்கரன்கோவிலில் நடந்தது. இதற்கு ராஜேந்திரன் தலைமை வகித்தார். புதிய தமிழகம் கட்சியைச் சேர்ந்த முன்னாள் மாவட்ட செயலாளர் காளிமுத்து தலைமையில் 300 பேர் ஜான் பாண்டியன் முன்னிலையில் தமமுகவில் சேர்ந்தனர்.
பின்னர் ஜான் பாண்டியன் நிருபர்களிடம் கூறியதாவது,
சட்டப்பேரவைத் தேர்தலில் திராவிட கட்சி, தேசிய கட்சியுடன் கூட்டணி வைப்பேன். அடுத்த மாதம் 27-ம் தேதி மதுரையில் அரசியல் விழிப்புணர்வு மாநாடு நடக்கிறது. இதில் கூட்டணி பற்றி தெரிய வரும். தமமுக எத்தனை தொகுதியில் போட்டியிடும் என்பது பற்றி நான் அனைத்து மாவட்டங்களிலும் மக்களை சந்தித்த பின்னர் முடிவு செய்யப்படும்.
தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்ட 18 சதவீத ஒதுக்கீட்டில் அருந்ததியருக்கு 3 சதவீதம் வழங்கப்படுகிறது. இதை 25 சதவீதமாக உயர்த்தி அருந்ததியருக்கு 5 சதவீதம் கிடைக்க தமிழக அரசை வலியுறுத்துவேன்.
அனைத்து சமுதாய மக்களும் ஒன்று சேர்ந்து வலியுறுத்தினால் நான் சங்கரன்கோவில் தொகுதியில் போட்டியிடுவேன் என்றார்.












Click it and Unblock the Notifications