சட்டசபைத் தேர்தலுக்கு 1.50 லட்சம் வாக்குப்பதிவு எந்திரங்கள்: தேர்தல் அதிகாரிகள் அறிவிப்பு
சென்னை: வெளிமாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ள வாக்குப்பதிவு இயந்திரங்களை அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பும் பணி நடந்து வருகிறது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வரும் மே மாதம் முதல் வாரத்தில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக ஏற்கனவே வட மாநிலங்களில் இருந்து 1. 09 லட்சம் வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. அவற்றை தற்போது மாவட்டம் வாரியாக அனுப்பி வைக்கும் பணி நடந்து வருகிறது. மேலும், மாநிலம் முழுவதும் வாக்குப்பதிவு நடக்கும் இடங்களை அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு நடத்தி வருகின்றனர்.
அதிகாரிகளுக்கு இயந்திரங்களை எப்படி கையாளுவது என்பது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து தேர்தல் உயர் அதிகாரிகள் கூறியதாவது,
தமிழகத்தில் நீண்ட காலமாக ஒரே இடத்தில் பணி புரியும் போலீஸ் அதிகாரிகள் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் விரைவில் வேறு இடங்களுக்கு மாற்றப்படுவர்.
தேர்தல் நேரத்தில் பாதுகாப்பு பணிக்காக வெளிமாநிலங்களில் இருந்து துணை ராணுவத்தினர் உள்பட 30 ஆயிரம் போலீசார் வரவழைக்கப்படுகின்றனர். அவ்வாறு வருபவர்கள் பதட்டமான வாக்குச்சாவடிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவர்.
தமிழகத்தில் மொத்தம் 54 ஆயிரம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றில் 1. 50 லட்சம் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படும். இதில் தற்போது 1.09 லட்சம் இயந்திரங்கள் வெளி மாநிலங்களில் இருந்து வந்துள்ளன என்றார்.
விதிமுறை
தேர்தல் நேரத்தில் பணபுழக்கத்தை குறைக்க பீகார் தேர்தலின்போது விதிக்கப்பட்ட விதிமுறைகள் தமிழகத்திலும் கொண்டுவரப்படுகிறது.அதாவது, வேட்பாளர்கள் தேர்தலுக்கென தனி வங்கிக் கணக்கு துவங்கி அதன் மூலம் தேர்தல் செலவுகள் செய்ய வேண்டும்.
மேலும் பிரசாரங்கள், பொதுக்கூட்டங்கள் ஆகியவை வீடியோ மூலம் கண்காணிக்கப்படும். இந்த விதிமுறைகள் தமிழகத்திலும் கொண்டுவரப்படும் என்று தலைமை தேர்தல் ஆணையர் குரேஷி தமிழகம் வந்தபோது கூறினார். அதன்படி புதிய விதிமுறைகள் அடுத்த வாரம் அறிவிக்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications