ராமதாஸே சேரவில்லை என்று கூறி விட்ட பிறகு பாமகவுடன் கூட்டணி இல்லை-கருணாநிதி

கூட்டணியில் சேரத் துடித்து வந்த பாமக,முதல்வர் கருணாநிதியே முன்வந்து பாமக கூட்டணியில் இருக்கிறது என்று சொல்லியும், அதை நிராகரிக்கும் வகையில், நாங்கள் கூட்டணி குறித்து முடிவெடுக்கவில்லை என்று கூறி விட்டார்.
இந்த நிலையில் தனது டெல்லி பயணத்தை முடித்துக் கொண்டுநேற்று சென்னை திரும்பிய முதல்வர் கருணாநிதி அண்ணா அறிவாலயத்தில், செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர் அளித்த பேட்டி:
டெல்லிப் பயணம் எப்படி அமைந்தது?
வானம் நிர்மலமாக இருந்தது - வழியில் தடைகள் எதுவும் இல்லை - பொதுவாக நன்றாக பயணம் அமைந்தது.
கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையில் எந்த அளவுக்கு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது? காங்கிரஸ் கட்சிக்கு எத்தனை இடங்கள் என்று பேசப்பட்டதா?
காங்கிரசும், திராவிட முன்னேற்றக் கழகமும் அணி சேர்ந்த இந்தத் தேர்தலில் போட்டியிடுவது என்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. எத்தனை இடங்கள், யார் யாருக்கு என்னென்ன தொகுதிகள் என்பனவற்றை தி.மு.கழகத்தின் தேர்தல் பணிக் குழுவோடு கலந்து பேசி திராவிட முன்னேற்றக் கழகமும், காங்கிரசும் அந்த விவரங்களை பிறகு அறிவிக்கும்.
நாளை அல்லது நாளை மறுநாள் காங்கிரஸ் கட்சியினுடைய குழுவிலே உள்ளவர்களின் பெயர்கள் அறிவிக்கப்படக் கூடும். திராவிட முன்னேற்றக் கழகத்தைப் பொறுத்தவரையில் நான் பொதுச் செயலாளரோடு கலந்து பேசி - மற்ற கட்சிகளோடு தொகுதி பங்கீடு குறித்து பேசுகின்ற குழுவிலே யார் யார் இடம் பெறுவார்கள் என்பதை அறிவிப்பேன்.
எத்தனை நாட்களுக்குள் தி.மு.க குழு அறிவிக்கப்படும்?
இப்போது தானே டெல்லியிலிருந்து வந்திருக்கிறேன். பொதுச் செயலாளரோடு கலந்து பேசி அறிவிப்பேன்.
காங்கிரஸ் கட்சிக்கு ஆட்சியிலே பங்கு கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கை உங்களிடம் வைக்கப்பட்டிருப்பதாக செய்தி வந்து கொண்டிருக்கிறதே..?
இதுவரையில் அது பற்றிய பேச்சு எதுவும் இல்லை.
பா.ம.க. உங்கள் கூட்டணியில் இருப்பதாக நீங்கள் டெல்லி சென்றவுடன் சொன்னீர்கள். ஆனால் டாக்டர் ராமதாஸ் அன்றிரவே அதை மறுத்து விட்டார். அதைப் பற்றி நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?
சந்தர்ப்ப சூழ்நிலைகள்- அவர்கள் சார்பில் பொறுப்பிலே உள்ளவர்கள் எங்களிடம் கொண்ட தொடர்புகள் - இவற்றை வைத்து பா.ம.க. வும் தி.மு.க. கூட்டணியில் இடம் பெறக் கூடும் என்பதை டெல்லியிலே அனுமானமாகக் கூறினேன். அதை பா.ம.க. வின் தலைவர் மறுத்திருக்கிறார் என்பதை நானும் டெல்லியிலே பத்திரிகைகளிலே பார்த்தேன். அதற்கு நான் பதில் சொல்ல விரும்பவில்லை.
முதலில் உங்கள் கூட்டணியில் இடம் பெற விருப்பம் தெரிவித்து விட்டு, தற்போது மறுக்க வேண்டிய அவசியம் என்ன?
இது இங்கே கேட்க வேண்டிய கேள்வி அல்ல.
பா.ம.க. நேரடியாக காங்கிரசுடன் கூட்டணி வைக்க நீங்கள் உடன்படுவீர்களா?
அவர்கள் தான் தி.மு.க. வுடன் கூட்டணி இல்லை என்று சொல்லி விட்டார்கள். தி.மு.க.வுடன் அணி சேருவது பற்றி அவர்கள் உறுதியாக எதுவும் சொல்லவில்லை. அவர்கள் கட்சியிலே உள்ள பல்வேறு மட்டங்களில் பேசித் தான் முடிவெடுக்க வேண்டுமென்கிறார்கள்.
தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. இடம் பெற இன்னமும் வாய்ப்பு இருக்கிறது என்று கருதுகிறீர்களா?
நாங்கள் இருப்பதாகச் சொன்னதை அவர் இல்லை என்று மறுத்த பிறகு, இந்தக் கேள்விக்கே இடம் இல்லை.
டெல்லியில் மீனவர்கள் பிரச்சினை குறித்து என்ன பேசினீர்கள்?
மீனவர்கள் பிரச்சினை குறித்து காலையில் டெல்லியில் நடைபெற்ற முதல்வர்கள் மாநாட்டிலே விரிவாகப் பேசியிருக்கிறேன். அதற்கு முன்பு பிரதமரைச் சந்தித்தபோதும் அதைப் பற்றிப் பேசியிருக்கிறேன். முதல்வர்கள் மாநாட்டிலும் அதை வலியுறுத்தி பேசி உடனடி நடவடிக்கை வேண்டுமென்று குறிப்பிட்டிருக்கிறேன்.
இன்று (நேற்று) மதியம் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணாவும், வெளி விவகாரத் துறை செயலாளர் நிரூபமா ராவும் என்னை தமிழ்நாடு இல்லத்திலே சந்தித்து - வெளி விவகாரத் துறை செயலாளர் இலங்கை சென்று வந்த விவரங்களையெல்லாம் கூறினார்கள். வெளி விவகாரத் துறை அமைச்சரும், அந்தத் துறையின் செயலாளரும் இலங்கைப் பிரச்சினையில் தொடர்ந்து நடவடிக்கை மேற்கொள்வார்கள் என்று நம்புகிறேன்.
இலங்கைக்கும் தமிழக மீனவர்களுக்கும் இடையே ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்படும் என்று நிரூபமா ராவ் சொல்லியிருக்கிறார். அந்த ஒப்பந்தத்தில் கச்சத்தீவு அருகே மீன் பிடிப்பது குறித்து இடம் பெறுவதற்கான வாய்ப்பு இருக்கிறதா?
அப்படியொரு ஒப்பந்தம் போடப்படுகின்ற சூழ்நிலை ஏற்படுமேயானால் கச்சத்தீவு பற்றியும் அதிலே இடம் பெற வேண்டும் என்பதை நாங்கள் வலியுறுத்துவோம்.
மீனவர்கள் இனிமேல் தாக்கப்பட மாட்டார்கள் என்று உறுதிமொழி ஏதாவது கொடுக்கப்பட்டதா?
தாக்கப்பட்டால் அதற்கு தீவிரமாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று சொல்லியிருக்கிறார்கள்.
இதற்கு முன்பு எம்.கே. நாராயணன் ஒரு முறை இலங்கைக்குச் சென்று விட்டு வந்து இப்படித் தான் சொன்னார். ஆனால் அதற்குப் பிறகும் தொடர்ந்து மீனவர்கள் மீது தாக்குதல் நடக்கிறதே?
தாக்குதல் நடக்கும்போது நாம் கண்டிக்கிறோம். இதற்கு மேலும் நடந்தால் அது பற்றி எப்படிப்பட்ட தீவிர நடவடிக்கைகள் எடுக்கலாம் என்று யோசிப்போம்.
வெளி விவகாரத் துறை செயலாளரின் இலங்கைப் பயணம் கண் துடைப்பு என்று பா.ஜ.க. தலைவர் நிதின் கட்காரி சொல்லியிருக்கிறாரே?
இப்போது தான் அந்தக் கட்சிக்குத் தலைவராக புதிதாக வந்திருக்கிறார். அவரைப் பற்றி நான் எதுவும் சொல்ல விரும்பவில்லை.
கச்சத் தீவை மீட்டு விட்டால் இந்தப் பிரச்சினை முடிவுக்கு வந்துவிடும் என்று நினைக்கிறீர்களா?
விவாதத்திற்கு உரியது.
டெல்லிப் பயணம் அரசு ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் வெற்றிகரமாக அமைந்தது என்று கருதுகிறீர்களா?
நிச்சயமாக.
திமுக கூட்டணிக்குப் புதிய கட்சிகள் வர வாய்ப்பு இருக்கிறதா?
தேர்தல் வந்தால் புதிய கட்சிகள் வருவது இயற்கைதானே! என்றார் கருணாநிதி.












Click it and Unblock the Notifications