தமிழக மீனவர் கொலைகளை என்ஐஏ விசாரணைக்கு விடக் கோரி வழக்கு

Subscribe to Oneindia Tamil

சென்னை: இலங்கைக் கடற்படையினரால் தமிழக மீனவர்கள் நடுக் கடலில் கொல்லப்படும் வழக்குகளை தேசிய புலனாய்வு ஏஜென்சியின் (என்ஐஏ) விசாரணைக்கு விட வேண்டும். இதுதொடர்பாக சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்பட வேண்டும் என்று கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

நெல்லை ஜெபமணியின் மகனும், ஜெபமணி ஜனதாக் கட்சியின் தலைவருமான ஜெபமணி மோகன்ராஜ் இதுதொடர்பாக ஒரு பொது நலன் மனுவை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.

அதில்,

கடந்த ஜனவரி மாதம் 12-ந் தேதி புதுக்கோட்டை மாவட்டம், ஜெகதாபட்டினம் பகுதியைச் சேர்ந்த பாண்டியன் என்ற மீனவர், இலங்கை கடற்படையினரால் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். 22.1.11 அன்று நாகை மாவட்டம், புஷ்பவனத்தை சேர்ந்த ஜெயக்குமார், அவர்களால் கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டார்.

கடந்த சில ஆண்டுகளில் 570 பேர் இலங்கை கடற்படையினராலோ அல்லது தீவிரவாதிகளாலோ கொலை செய்யப்பட்டுள்ளனர். இந்த கொலை சம்பவத்துக்கு இலங்கை கடற்படையினரை மட்டும் குற்றம்சாட்ட முடியாது. இலங்கை-இந்தியா நாடுகளுக்கு இடையேயுள்ள நல்லுறவை கெடுக்கும் விதத்தில் சிலர் செயல்படக்கூடும் என்று இலங்கை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஒவ்வொரு கொலை சம்பவம் தொடர்பாகவும் விசாரணைக்கு உத்தரவிட வேண்டியது உள்துறை செயலாளரின் கடமை. ஆனால் இந்த 570 சம்பவத்திலும் விசாரணைக்கு உத்தரவிடப்படவில்லை. வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுப்பதற்கு போலீசார் கடமை தவறிவிட்டதால், ஒவ்வொருவரின் உயிருக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.

எனவே இதுபற்றி 24.1.11 அன்று நாகை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், கன்னியாகுமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகளுக்கு புகார் அனுப்பி, மீனவர் கொலை சம்பவங்கள் தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டேன்.

தங்கள் அதிகார எல்லைக்குள் இலங்கை கடற்படை வரவில்லை என்று நாகை போலீஸ் சூப்பிரண்டு கூறிவிட்டார். மற்றவர்கள் பேச மறுத்துவிட்டனர். இந்த புகார் குறித்து எனது வாக்குமூலத்தையும் பதிவு செய்யவில்லை.

எனவே இந்த வழக்குகளை தேசிய புலனாய்வு அமைப்புக்கு (என்.ஐ.ஏ.) மாற்றும்படி உள்துறை செயலாளருக்கும், டிஜி.பி.க்கும் கோரிக்கை விடுத்தேன். என்.ஐ.ஏ. சட்டம் போன்ற தீவிரவாத சட்டங்களை தவிர்ப்பதை வெளிப்படையாக சொன்ன அந்த அதிகாரிகள், என்.ஐ.ஏ. அமைப்புக்கு கொலை சம்பவங்களை மாற்றவும் மறுத்துவிட்டனர்.

மேலும் கொலை செய்யப்பட்ட அனைத்து மீனவர்கள் குடும்பங்களுக்கும் நஷ்டஈடு வழங்கப்படுவதில்லை. இதிலும் பாரபட்சம் காட்டப்படுகிறது. இதுவரை இத்தனை பேர் கொல்லப்பட்டிருந்தாலும் ஒரே ஒரு மீனவர் குடும்பத்துக்கு மட்டுமே ரூ. 5 லட்சம் இழப்பீடு தரப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட அனைத்து குடும்பங்களுக்கும் இதே அளவிலான நஷ்டஈட்டு தொகை வழங்க உத்தரவிட வேண்டும்.

கடல் எல்லையில் இந்திய மீனவர்கள் கொலை செய்யப்பட்ட அனைத்து சம்பவங்களையும் என்.ஐ.ஏ. அல்லது சிறப்பு புலனாய்வு பிரிவு விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.

முதலில் இந்த விவகாரம் அரசியல் விவகாரமாக இருக்கிறதே என்று நீதிபதிகள் தெரிவித்தனர். அப்போது குறுக்கிட்ட மனுதாரரின் வழக்கறிஞர் மணிகண்ட வதன் செட்டியார், இதுவரை 570 மீனவர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர். அனைவருமே இலங்கைக் கடற்படையினரால் கொல்லப்பட்டவர்கள் என்றனர்.

இதையடுத்து அரசு வழக்கறிஞர் ராஜா கலிபுல்லாவிடம், இதுபோன்ற சம்பவங்கள் நடந்தபோது அரசு என்ன மாதிரியான நடவடிக்கை எடுக்கிறது. முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்படுகிறதா என்று நீதிபதிகள் கேட்டனர். அதற்கு கலிபுல்லா, சம்பவம் நடப்பது இந்திய கடல் எல்லையைத் தாண்டி என்பதால் உள்ளூர் போலீஸாரால் நடவடிக்கை எடுக்க முடியாது என்றார்.

அப்போது குறுக்கிட்ட வழக்கறிஞர் செட்டியார், 2008ம் ஆண்டு சந்தியா என்பவர் இலங்கைக் கடற்படையால் சுட்டுக் கொல்லப்பட்டார். அவர் கொல்லப்பட்ட பகுதி இந்திய கடல் எல்லைக்குள்தான் வருகிறது என்றார். இதுதொடர்பாக பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையிலும் அது தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் அந்த வழக்கையும் கூட முறையாக விசாரிக்காமல் மூடி விட்டனர் என்றார்.

இதையடுத்து இதுதொடர்பாக 2 வாரங்களுக்குள் பதிலளிக்குமாறு கூறி தமிழக அரசு மற்றும் மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+