ஸ்பெக்ட்ரம் பற்றி 'வாய்தா ராணி-டான்சி ஜெயலலிதா' பேசலாமா?-ஸ்டாலின்

தி.மு.க. பொதுக்குழு தீர்மானங்கள் விளக்க பொதுக்கூட்டம் சைதாப்பேட்டை நடந்தது. அதில் பேசிய ஸ்டாலின்,
தி.மு.க. அரசு பல திட்டங்களையும், சாதனைகளையும் புரிந்திருக்கிறது. அண்ணா சாலை அருகே அழகும் கலைநயமும் கொண்டு கம்பீரமாக நிற்கும் புதிய சட்டசபை வளாகம் சென்னை நகருக்கு மாபெரும் பெருமை ஆகும். அதேபோல், கோட்டூர்புரத்தில் அமைந்துள்ள அண்ணா நூற்றாண்டுவிழா நூலகம் தெற்கு ஆசியாவிலேயே பெரிய நூலகமாக திகழ்கிறது.
வடசென்னை மக்களின் குடிநீர் பிரச்சனையை போக்குவதற்காக மீஞ்சூரில் ஆயிரம் கோடி ரூபாய் செலவில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தை செயல்படுத்தி உள்ளோம்.
தென்சென்னை மக்களின் குடிநீருக்காக மத்திய அரசின் உதவியுடன் ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் நெமிலியில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.
ரூ.15,000 கோடி செலவில் சென்னை மெட்ரோ ரெயில் திட்டத்தை தொடங்கி இருக்கிறோம். 45 கிலோ மீட்டர் நீளம் தூரத்திற்கு ரெயில்பாதை அமைக்கும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.
இப்படி தி.மு.க. அரசு பல சாதனைகளை செய்துள்ளது. ஆட்சி பொறுப்புக்கு வந்து 5 ஆண்டுகள் நெருங்கி வரும் நிலையில், மக்கள் தாங்கள் வைத்த கோரிக்கைகளை என்ன ஆனது என்று கேட்பார்களே என்ற அச்சம் இல்லாமல், அனைத்தையும் செய்துமுடித்து, கொடுத்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றி, தேர்தல் பிரசாரத்திற்கு மக்களிடம் செல்லும் தைரியம் தி.மு.கவுக்கு மட்டுமே உண்டு.
எனவே, தி.மு.க. ஆட்சி மீது குறைசொல்ல முடியாது என்பதால், ஸ்பெக்ட்ரம் பிரச்சினையை கையில் எடுத்துள்ளார்கள். ஸ்பெக்ட்ரம் பிரச்சனை பற்றி மக்களிடையே பொய் பிரசாரம் செய்கிறார்கள். ஸ்பெக்ட்ரம் வழக்கு விசாரணைக்கு ஆ.ராசா முழு ஒத்துழைப்பு கொடுத்து வருகிறார். அவர் எப்போதாதவது விசாரணைக்கு செல்லாமல் இருந்தாரா? எந்த குற்றமும் செய்யாத ராசா மீது பொய்குற்றம் சுமத்துகிறார்கள்.
தவறு நடந்திருந்தால் தண்டனையை ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கிறோம். ராசா சி.பி.ஐ. விசாரணைக்குச் செல்லவில்லையா? கைது என்ற நிலை வந்த போது கூட உடன்பட மறுத்தாரா? இல்லையே. எந்தக் குற்றமும் செய்யாத ராசாவை, தி.மு.கவை களங்கப்படுத்த ஜெயலலிதா தொடர்ந்து பொய் குற்றச்சாட்டைக் கூறி வருகிறார்.
டான்சி வழக்கில் ஜெயலலிதா மீது வழக்கு போடப்படவில்லையா? அரசு சொத்துக்களை அபகரித்த போதிலும் நீதிமன்றம் அவரை விடுதலை செய்தது. சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூர் நீதிமன்றத்தில் ஜெயலலிதா எத்தனை வாய்தா வாங்கினார்? வாய்தா ராணியான ஜெயலலிதாவுக்கு ஸ்பெக்ட்ரம் வழக்கு விசாரணை பற்றி பேச யோக்கியதையோ, அருகதையோ கிடையாது.
தி.மு.கவை யாரும் அழிக்க முடியாது. யாராவது அழிக்க முயன்றால் அவர்கள்தான் அழிந்து போவார்கள். முதல்வர் கருணாநிதி 6வது முறையாக ஆட்சி பொறுப்புக்கு வந்து தி.மு.க. ஆட்சி தொடரும் என்றார் ஸ்டாலின்.
நிதியமைச்சர் அன்பழகன் பேசுகையில், தமிழர்கள் எண்ணிக்கையில் அதிகமாக இருந்தும் வரலாற்றில் பலமுறை ஏமாந்து போயிருக்கிறார்கள். தமிழகத்தில் தி.மு.க. அமைப்பு மட்டும் இல்லாவிட்டால், இந்த ஜனநாயக கருவி இருந்திருக்காவிட்டால் தமிழகத்தை யார் வேண்டுமானாலும் சூரையாடியிருப்பார்கள்.
தமிழ் இனத்தை, தமிழ் உணர்வை, தமிழர்களின் சுயமரியாதை நிலைநிறுத்துவதற்காக பேரறிஞர் அண்ணா 1949ம் ஆண்டு தி.மு.க. இயக்கத்தை தொடங்கினார். அண்ணாவின் வழியில் அவரது நம்பிக்கைக்கு உரியவரான கருணாநிதி தமிழகத்தில் தொடர்ந்து ஆட்சி நடத்தி வருகிறார்.
முதலவர் பதவி அவருக்கு பெரியதல்ல. அதைவிட பெரிய மதிப்பை, புகழை எல்லாம் பெற்றிருக்கிறார். இங்கேயே பேசியவர்கள், கருணாநிதி 6-வது முறையாக தமிழகத்தின் முதல்வர் ஆவார் என்று குறிப்பிட்டார்கள்.
அப்படிச் சொல்வது தவறு, தமிழகத்தை 6வது முறையாக பாதுகாக்க அவரை ஒரு கருவியாக பயன்படுத்திக் கொள்வோம் என்றுதான் கூற வேண்டும். தி.மு.கவை தவிர தமிழக மக்களின் நலனை நாடக்கூடிய வேறு இயக்கம் தமிழகத்தில் கிடையாது. மற்றவர்கள் யாரும் அந்த உரிமையை கொண்டாட முடியாது என்றார்.
கொள்கை பரப்பு செயலாளராக ஆ.ராசா நீடிக்கிறார்:
இந் நிலையில் ராசா கட்சி பதவியை ராஜினாமா செய்யவில்லை, அவர் கொள்கை பரப்பு செயலாளராக நீடிக்கிறார் என்று தி.மு.க. செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் எம்.பி. கூறியுள்ளார்.
தி.மு.க.வின் கொள்கை பரப்பு செயலாளராக இருக்கும் ஆ.ராசா தனது கட்சி பதவியை ராஜினாமா செய்துள்ளதாகவும், அந்த கடிதம் நேற்று நடந்த தி.மு.க. பொதுக்குழுவில் வாசிக்கப்பட்டதாகவும் தகவல்கள் பரவின.
இதுகுறித்து இளங்கோவனிடம் நிருபர்கள் கேட்டபோது, இது முற்றிலும் தவறானது, அடிப்படை ஆதாரமற்றது. கட்சிக்கு அதுபோன்ற ராஜினாமா கடிதம் எதுவும் வரவில்லை. பொதுக்குழுவில் கடிதத்தை வாசித்ததாகவும் என் காதில் எதுவும் விழவில்லை. இப்போது வரை ராசா தான் கட்சியின் கொள்கை பரப்பு செயலாளராக இருக்கிறார். அவர் அந்த பதவியில் தொடர்ந்து நீடிப்பார். அவர் குற்றமற்றவர் என்று நிரூபித்து வெளியில் வருவார் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது என்றார்.












Click it and Unblock the Notifications