குறிக்கோளே இல்லாத வெத்து வேட்டு பட்ஜெட்-ஜெ. கருத்து

இதுதொடர்பாக ஜெயலலிதா விடுத்துள்ள அறிக்கை:
இடைக்கால நிதிநிலை அறிக்கை, தமிழகத்தை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்ல வேண்டும் என்ற குறிக்கோள் இல்லாத ஒரு வெத்து வேட்டு அறிக்கையாக அமைந்துள்ளது.
2010ம் ஆண்டு சமர்ப்பிக்கப்பட்ட நிதிநிலை அறிக்கையில், 2010-2011ம் ஆண்டிற்கான நிதிப் பற்றாக்குறை ரூ.16,222.13 கோடியாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டது. ஆனால், இந்த இடைக்கால நிதிநிலை அறிக்கையில், நிதிப் பற்றாக்குறை ரூ.17,607.71 கோடி அளவுக்கு உயரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமல்லாமல், 31.3.2011 அன்று தமிழ்நாடு அரசின் மொத்தக் கடன் ரூ.1,01,541 கோடி அளவிற்கு அதிகரிக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுதான் ஐந்தாண்டு கால சாதனை.
தற்போது தமிழக மக்களை முக்கியமாக பாதித்துள்ள பிரச்சினை விலைவாசி உயர்வு. இந்த விலைவாசி உயர்வை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கை பற்றி குறிப்பிடாமல், விலை உயர்விற்கான காரணங்களை நிதிநிலை அறிக்கையில் பட்டியலிட்டு இருப்பது வருத்தமளிக்கும் செயலாகும்.
அடுத்த முக்கியமான பிரச்சினை மின்வெட்டு. சென்ற ஆண்டு நிதிநிலை அறிக்கையில், வரும் நிதியாண்டில் 1,400 மெகாவாட் மின் உற்பத்தித் திறன் கூடுதலாக நிறுவப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில் இதுகுறித்து ஏதும் குறிப்பிடப்படவில்லை. இதன் மூலம் மின்வெட்டு தொடரும் என்பது உறுதியாக்கப்பட்டுள்ளது.
விளை நிலங்கள் வீட்டு மனைகளாக மாற்றப்படுவதை தடுத்து நிறுத்துவது குறித்தும், கரும்பு உற்பத்தி தொடர்ந்து இறங்குமுகமாகவே இருந்து வருவதை சீர் செய்வது குறித்தும் நிதிநிலை அறிக்கையில் குறிப்பிடாதது வேதனை அளிக்கும் செயல் ஆகும்.
வீட்டு வசதித் திட்டம் குறித்து இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில் தம்பட்டம் அடிக்கப்பட்டுள்ளது. உண்மையிலேயே குடிசைகளை கான்கிரீட் வீடுகளாக மாற்ற வேண்டும் என்ற எண்ணம் தி.மு.க. அரசுக்கு இருந்தால், முழுச் செலவையும் அரசே ஏற்றுக் கொண்டு இந்தத் திட்டத்தை செயல்படுத்தி இருக்க வேண்டும். அப்பொழுது தான் அதை வீட்டு வசதித் திட்டம் என்று அறிவிக்க முடியும். இப்பொழுது இந்த அரசினால் அறிவிக்கப்பட்டுள்ள திட்டத்தை "ஏழை மக்களை கடனாளிகளாக ஆக்கும் திட்டம்'' என்று சொல்வது தான் பொருத்தமாகும்.
"முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்டும் பணி இந்த ஆண்டே தொடங்கப்படும்'' என்ற கேரள அரசின் அறிவிப்பு தொடர்பான மேல் நடவடிக்கை குறித்தோ, திருப்பூர் சாய, சலவை ஆலைகளின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான நடவடிக்கை குறித்தோ, மேட்டூர் அணையில் நீர் எடுப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ளும் கர்நாடக அரசு மீது உறுதியான நடவடிக்கை எடுப்பது குறித்தோ, மருத்துவப் படிப்பிற்கான நுழைவுத்தேர்வு குறித்தோ ஏதும் குறிப்பிடப்படவில்லை. இதிலிருந்து தமிழ்நாட்டின் உரிமைகளை மீட்பதிலும், தொழில்களை பாதுகாப்பதிலும் இந்த அரசுக்கு அக்கறை ஏதுமில்லை என்பது தெளிவாகிறது.
சென்ற ஆண்டு நிதிநிலை அறிக்கையில், பாலைப் பதப்படுத்தும் வகையிலும், மதிப்புக் கூட்டப்பட்ட பால் பொருள்களை உற்பத்தி செய்ய ஏதுவாகவும், ரூ.27 கோடி மதிப்பீட்டில் கோவை ஆவின் நிறுவனம் நவீனமயமாக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. ஆனால், இதற்கான பணிகள் இன்று வரை துவக்கப்படவில்லை. இதுகுறித்து இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில் ஏதும் குறிப்பிடப்படவில்லை. தற்போதைய உண்மை நிலை என்னவென்றால், ஆவின் பால் வரத்தில் 6 லட்சம் லிட்டர் அளவுக்கு சரிவு ஏற்பட்டு, இதன் விளைவாக ஆவின் பாலுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது என்பது தான்.
மொத்தத்தில், வளர்ச்சித் திட்டங்கள் மூலம் எழுச்சிப் பாதையில் செல்ல வேண்டிய தமிழகம், கவர்ச்சித் திட்டங்கள் மூலம் வறட்சிப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது என்பதைத் தான் இந்த நிதிநிலை அறிக்கை படம் பிடித்துக் காட்டி இருக்கிறது என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.
புதுமணப் பூங்கா-கி.வீரமணி
தி.க. தலைவர் கி.வீரமணி பட்ஜெட் குறித்துக் கூறுகையில், 4 ஆயிரம் கோடி ரூபாய் உணவு மானியம் ஏழை எளிய மக்களுக்கு உண்ண உணவு, இருக்க இடம், படிக்க கல்வி, விவசாயிகளுக்கு 7 ஆயிரம் கோடி ரூபாய் கடன் தள்ளுபடி என்ற நிம்மதி, புதிய தொழில்கள் மூலம் வாங்கும் சக்தியை உயர்த்திட வகை செய்யும் திட்டங்கள். இப்படி பலப்பல அதிசயங்கள் பூத்துக்குலுங்கும் புதுமணப் பூங்காவாக காய்த்துக்கனிந்த பழத்தோட்டமாக இடைக்கால பட்ஜெட் காட்சியளிக்கிறது என்று கூறியுள்ளார்.
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தி.மு.க. அரசு தாக்கல் செய்து உள்ள இடைக்கால நிதிநிலை அறிக்கையில், பருவநிலை மாற்றத்தால் உள்நாட்டில் விளைச்சல் குறைந்ததாகத் தெரிவித்து உள்ளனர். ஆனால், தமிழ்நாட்டில் பயறு வகைகளின் சாகுபடிப் பரப்பு 36 விழுக்காடு பெருகி உள்ளதாகவும், காய்கறி விளைச்சல் அதிகரித்து உள்ளதாகவும் முன்னுக்குப்பின் முரணாகத் தெரிவித்து உள்ளனர்.
மத்திய அரசில் இடம் பெற்று உள்ள தி.மு.க., பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்குத் தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வருகிறது. உணவுப் பொருள்களின் பதுக்கலை ஊக்குவிக்கும் இணையதள வணிகத்தைத் தடைசெய்ய முயற்சிக்காததே விலைவாசி உயர்வுக்கு ஒரு காரணம் ஆகும்.
நெல்லுக்கு ஒரு குவிண்டாலுக்கு 1,500 ரூபாயும், கரும்பு ஒரு டன்னுக்கு ரூ.3 ஆயிரமும் வழங்க வேண்டும் என்ற விவசாயிகளின் நியாயமான கோரிக்கை குறித்த எந்த அறிவிப்பும் இல்லை.
வடகிழக்குப் பருவமழையால் தமிழ்நாட்டின் பெரும்பாலான மாவட்டங்களில் பலத்த சேதம் ஏற்பட்டு உள்ளது. விவசாயிகள் துன்பத்தில் துடித்துக் கொண்டு இருக்கின்றனர். நிதிநிலை அறிக்கையில், விவசாயிகளுக்கு எவ்வித நிவாரணமும் இல்லை.
பருத்தி ஏற்றுமதியால் நெருக்கடிக்கு உள்ளான நெசவுத் தொழிலைக் காப்பாற்ற எந்த அறிவிப்பும் நிதிநிலை அறிக்கையில் இல்லை என்று தெரிவித்துள்ளார்.
அனைத்து துறைகளிலும் தோல்வி-சிபிஎம்
சிபிஎம் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் கருத்து தெரிவிக்கையில்,
தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட்டில் மக்களுக்கு நம்பிக்கை தரும் குறிப்பிடத்தக்க அம்சங்கள் எதுவும் இல்லை. சட்டமன்ற தேர்தலை எதிர்நோக்கியுள்ள இடைக்கால பட்ஜெட் என்பதால் புதிய திட்டங்கள் மட்டுமல்ல, புதிய வரிகளும் இல்லை. மத்திய அரசின் தாராளமயக் கொள்கைகளை தங்குதடையின்றி தமிழக அரசும் கடைபிடித்து வருவதையே இடைக்கால பட்ஜெட்டும் வெளிப்படுத்துகிறது.
மொத்தத்தில் தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட் பல்வேறு துறைகளிலும் அரசு தோல்வி அடைந்துள்ளது என்பதையே பறைசாற்றுகிறது என்று தெரிவித்துள்ளார்.
-
விஜய்க்கு எதிராக பெரம்பூர், திருச்சியில் கிழக்கில்.. களமிறங்கும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் யார்? -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
அரசியலன்னா இதுதான்.. எப்போ என்ன நடக்கும்னே தெரியாது.. ஸ்டாலின் டிக் அடித்த பெயர்.. பலர் ஷாக் -
இதுவரை திமுக ஜெயிக்காத.. கோவை தெற்கு தொகுதியைத் கேட்டு வாங்கிய செந்தில் பாலாஜி.. என்ன காரணம்? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
ஜெயலலிதா ஸ்டைலை பின்பற்றும் விஜய்! ‘டபுள் தொகுதி’ ஃபார்முலாவை கையில் எடுத்தது ஏன்? இதுவரை யார் யார்? -
திமுக தேர்தல் அறிக்கை LIVE: மகளிர் உரிமை தொகை, புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் தொகை உயர்வு! -
மத்தி, சென்னையை கிளீன் ஸ்வீப் செய்யும் திமுக! தெற்கு, வடக்கில் ட்விஸ்ட்! அப்போ அரியணை? வெளியான சர்வே -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
விஜய்க்கு சத்தமின்றி எடப்பாடி வைத்த செக்.. சம்பவம் பண்ணிட்டாரே.. ஸ்டாலினும் விடலையே.. கேம் ஓவர்? -
தவெகவில் யார் யார் போட்டி? 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள்.. விஜய்யின் நண்பர் ஸ்ரீநாத்துக்கும் சீட்












Click it and Unblock the Notifications