தமிழகத்தில் அரசியல் நாகரீகம் இல்லையே! - கருணாநிதி வேதனை

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் அரசியல் நாகரீகமே இல்லாமல் போய்விட்டதே என வேதனையுடன் கூறியுள்ளார் முதல்வர் கருணாநிதி.

கம்யூனிஸ்டு தலைவர் ஜீவானந்தம் பேத்தியும், தமிழக அரசின் செய்தித்துறை துணை இயக்குனர் ஜீவாமணிக்குமாரின் மகளுமான பத்மா உஷா- ராமமூர்த்தி திருமணம் வேப்பேரி பெரியார் திடலில் இன்று நடந்தது.

திருமணத்தை முதல்வர் கருணாநிதி நடத்தி வைத்தார். மணமக்களை வாழ்த்தி அவர் பேசியதாவது:

"பொதுவுடைமை இயக்கத் தலைவர் அண்ணன் ஜீவாவுடைய பேத்தியும் - ஜீவா மணிக்குமாரின் மகளுமான பத்மா உஷாவுக்கும் -தருமபுரி மாவட்டம், கா. மாதனின் மகன் செல்வன் ராமமூர்த்திக்கும் நடைபெற்றுள்ள இந்த மணவிழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்துகின்ற வாய்ப்பினைப் பெற்றமைக்காக நான் மிகுந்த மகிழ்ச்சியடைகின்றேன்.

காலையில் எழும்போதே உடல் நலிவோடு எழுந்து இந்த நிகழ்ச்சிக்கு வரமுடியுமோ என்ற அய்யப்பாட்டோடு மருத்துவர்களை அழைத்து, சிகிச்சை பெற்று, எப்படியும் இந்த மணவிழா நிகழ்ச்சியிலே கலந்து கொண்டே தீர வேண்டுமென்ற அந்த உந்துதலோடு உங்களையெல்லாம் சந்திக்கும் இந்த வாய்ப்பை நான் பெற்றிருக்கிறேன்.

உடல் நலிவு...

அண்ணன் ஜீவாவுக்கும் எனக்கும் உள்ள உறவு, தொடர்பு, நட்பு, நாகரிகப் பண்பாட்டோடு கூடிய வாக்குவாதங்கள் -இவைகள் எல்லாம் என்றைக்கும் அழிக்க முடியாதவை. அவருடைய இல்லத்தில் நடைபெறுகின்ற இந்த மணவிழாவிலே எப்படியும் நான் கலந்து கொள்ள வேண்டுமென்று நான் எண்ணிய காரணத்தால்தான், மிகுந்த நலிவோடு இரவு தூக்கத்திலே ஆழ்ந்த நான், காலையிலே விழிக்கும்போதும் அதே உணர்வோடு எழுந்து மருத்துவர்களின் உதவியோடு இங்கே வந்திருக்கிறேன்.

நீண்ட நேரம் நான் உரையாற்ற முடியாது என்பதை உங்களுக்கு நான் சொல்லத் தேவையில்லை. ஜீவா தமிழகத்திலே உயிர் நாதமாக ஒரு காலத்திலே விளங்கி, இன்றைக்கும் அவர் அன்றைக்கு விதைத்த விதை முளைத்து, செடியாகி, மரமாகி அந்த ஆலமரத்தின் விழுதின் கீழ் எத்தனையோ பேர் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

அப்படி வாழ்கின்றவர்கள் சிலரை நான் இங்கே காணமுடியவில்லை. இருந்தாலும் நான் அண்ணன் ஜீவாவுக்கு ஆற்ற வேண்டிய கடமையை இந்த மணவிழாவிற்கு வந்து மணமக்களை வாழ்த்துவதின் மூலம் மணமக்கள் இல்வாழ்க்கையைத் தொடங்கி வைப்பதின் மூலம் ஆற்றுவதாக நான் கருதுகிறேன்.

இந்தக் குடும்பத்திலே இன்று நேற்றல்ல, நீண்ட நாட்களாக எனக்கு உள்ள பற்றும், இந்தக் குடும்ப விழா பலவற்றில் நான் கலந்து கொண்டதையும் நீங்கள் எல்லாம் நன்றாக அறிவீர்கள். ஏற்கனவே ஒரு திருமண விழாவிலே நான் கலந்து கொள்ளும்போது இந்தக் குடும்பத்தாருக்கும் எனக்கும் உள்ள உறவுகளையெல்லாம் எனக்கு முன்னால் பேசிய கம்யூனிஸ்ட் கட்சி நண்பர்கள் எல்லாம் எடுத்துச் சொன்னார்கள்.

நான் உள்ளபடியே வருத்தப்படுகிறேன். ஒரு பெரிய தலைவர் தன்னால் உருவாக்கப்பட்ட பல தளபதிகள் -அவருடைய குடும்பத்தை தாங்கிப் பிடிப்பார்கள் என்ற நம்பிக்கையோடு தான் மறைந்து போகிறார்கள். ஆனால் அப்படி தாங்கிப் பிடிக்க வேண்டிய கடமையை அந்தக் குடும்பத்துக்குச் செய்ய வேண்டிய உதவியை மறந்துவிட்டவர்கள் இன்னும் நாட்டிலே இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்களையெல்லாம் மறப்போம், மன்னிப்போம் என்று அண்ணா அவர்களுடைய மொழியிலே நான் சொல்ல விரும்புகிறேன்.

சண்டைபோட்டுக் கொண்டே...

அண்ணன் ஜீவாவின் பொதுவுடைமை கருத்துக்களைப் பொறுத்தவரை எனக்கு அமைந்த ஆசிரியர்களில் ஒருவர். நானும் அவரும் சண்டை போட்டுக் கொண்டே பொதுவுடைமை இயக்கத்தை தமிழ்நாட்டில் பல பகுதிகளில் வளர்த்தவர்கள். அவர் எழுத -நான் எழுத - அவர் பேச -நானும் அவருடைய பேச்சை மறுத்துப் பேச -இப்படி ஒருவருக்கு ஒருவர் கருத்துக்களை மாறி மாறி மேடைகளில், ஏடுகளில் எடுத்தாண்டவர்கள்.

அப்படிப்பட்ட அண்ணன் ஜீவாவும் நான் அவரைப் பற்றி எழுதியதையோ, அல்லது அவர் என்னைப் பற்றி எழுதியதையோ பேசுவதைப் பற்றியோ நாங்கள் இருவரும் அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல், சொல்லப்பட்ட கருத்துக்களை மாத்திரம் பெரிதாக எடுத்துக் கொண்டு நாங்கள் கொண்ட நட்பை -ஆழமான நட்பை என்றைக்கும் அகற்றிக்கொண்டதில்லை.

அத்தகைய ஒரு நல்ல குடும்பத்தில் கொள்கைக் குடும்பத்தில் நடைபெறுகின்ற இந்த நிகழ்ச்சியிலே நான் கலந்து கொள்வது என்னைப் பொறுத்தவரையிலே தலையாய சிறப்பு வாய்ந்த ஒரு நிகழ்ச்சி என்பதை நான் சொல்ல விரும்புகிறேன்.

என்ன தம்பி, எப்படி இருக்கிறாய்?"" என்று அவர் கேட்கும்போதும், "நல்லா இருக்கண்ணன்"" என்று நான் சொல்லும்போதும் -இருவருமே அந்தக் காலத்திலே இழைந்த அந்த அன்பும் உறவும் நட்பும் இன்றைக்குள்ள அரசியல் கட்சிகளிடையே மலர்ந்தால், மணம் வீசினால் அந்த நாகரிகத்தை எல்லோரும் பெற்றால் -கட்சித் தகராறுகள் வேறு - கொள்கைப் பூசல்கள் வேறு - இலட்சிய வேறுபாடுகள் வேறு - இவைகளையெல்லாம் மறந்து விட்டு - நட்பு வேறு என்ற அந்த அரசியல் நாகரிகத்தை உலகத்திலே - தமிழ்நாட்டைத் தவிர வேறு எல்லா இடங்களிலும் பெற்றிருக்கிறார்கள்.

தமிழ் நாட்டிலேதான் அந்த உறவு மனப்பான்மை, அந்த நேச மனப்பான்மை, அந்த நாகரிகம் இல்லை. தந்தை பெரியாரும், மூதறிஞர் ராஜாஜியும் - கிராமங்களிலே சொல்வார்களே, ஜென்ம விரோதிகள் என்று - அதுபோல இருந்தாலும் கூட ராஜாஜி மறைந்தபோது, அந்த நிகழ்வுக்காக கண்ணீர் வடித்தவர் எங்கள் தந்தை பெரியார் ஆவார்கள்.

அப்படி பல தலைவர்கள் தமிழகத்திலே அரசியல் நாகரிகத்தை வளர்த்திருக்கிறார்கள். இன்றைக்கு என்னவோ, அரசியல் நாகரிகம் என்றால் என்ன விலை -எந்தக்கடையிலே விற்கிறது என்று கேட்கின்ற அளவுக்கு - விசாரிக்கின்ற அளவுக்கு நாகரிகம் நலிந்து போய்விட்டது. நசிந்து போய் விட்டது.

நேற்றைக்குக்கூட நான், நம்முடைய தமிழர் தலைவர் ஆசிரியர் வீரமணியிடத்திலே, தொலைபேசியிலே பேசும்போது, இன்றைக்கு காலையில் இந்த நிகழ்ச்சிக்கு அவர் வர முடியாததற்கான வருத்தத்தைத் தெரிவித்துக் கொண்டார்கள்.

அப்போது சொன்னார் -நீங்கள்தான் இருக்கிறீர்களே, நான் எதற்காக என்று சொன்னார்கள். அது எதைக்குறிப்பிடுகிறது என்றால், இயக்கத்திலே எங்களுக்குள்ள பிணைப்பு, கொள்கையிலே எங்களுக்குள்ள ஈர்ப்பு, நாங்கள் இருவரும் இந்த இயக்கத்திலே உள்ளவர்களும், அண்ணன் ஜீவாயிடத்திலே கொண்ட நட்பு, மரியாதை, அவரிடம் வைத்திருந்த மதிப்பு இவைகள் எல்லாம் சுட்டிக்காட்டக் கூடியவைகள்.

அத்தகைய பெரும் புகழ் வாய்ந்த வீரராக -தீரராக -தியாகச் செம்மலாக - எதற்கும் கலங்காத அஞ்சா நெஞ்சனாக -கொள்கை மட்டுமே பெரிது - கோடி கோடியாகக் கொட்டிக் கொடுத்தாலும், எத்தனை வரவேற்புகள் மாளிகைகளிலிருந்து கிடைத்தாலும், அவைகளையெல்லாம் துச்சமென மதிக்கக்கூடிய அருமைத் தலைவர் ஜீவா.

அந்தக் குடும்பத்துச் செல்வங்கள் -அவருடைய மகன் ஆனாலும், பேரன் ஆனாலும், பேத்தி ஆனாலும் இவர்கள் எல்லாம் என்னுடைய குடும்பத்துச் செல்வங்களைப் போல இன்றைக்கும் நான் அவர்களைக் கருதுகிறேன்.

அப்படித்தான் அவர்களை நான் பார்க்கிறேன். அண்ணன் ஜீவாவின் குடும்பம் வேறு -என்னுடைய குடும்பம் வேறு என்று நான் என்றைக்கும் கருதுபவன் அல்ல. அந்தக் குடும்பத்திலே உள்ள அனைவரையும் நீங்கள் கேட்டாலே தெரிந்து கொள்ளலாம். அந்த அளவிற்கு நான் அரசுப் பொறுப்பிலே இருக்கின்ற இந்தக் காலத்திலும் -இல்லாத காலத்திலும் கூட - அந்தக் குடும்பத்தோடு நெருங்கிப் பழகியவன்.

அப்படிப்பட்ட உணர்வுதான் இன்றைக்கும் மணிக்குமாரிடைய வேண்டுகோளை ஆணையாக ஏற்று இந்த விழாவிலே கலந்து கொள்ளக் கூடிய வாய்ப்பை எனக்கு வழங்கியிருக்கிறது என்று கூறி, மணவிழா இன்பம் காணுகின்ற நம்முடைய மணமக்கள் பத்மா உஷாவும், மாதனுடைய அன்புச்செல்வன் ராமமூர்த்தியும் பெறுவார்கள், பெற வேண்டும், நிச்சயம் பெறுவார்கள் என்ற நம்பிக்கையோடு வாழ்க மணமக்கள், எல்லா வளமும் பெற்று வாழ்க என்று வாழ்த்தி நான் என்னுடைய உரையை நிறைவு செய்கின்றேன்...", என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+