''உரித்துப் பார்த்தால் வெங்காயத்தில் ஒன்றும் இருக்காது'-பரிதி இளம்வழுதி

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுக ஆட்சியில் 2005-2006ம் ஆண்டு ரூ.1,951 கோடி உபரி வருவாய் இருந்தது. தற்போதைய ஆட்சியின் நிர்வாக சீர்கேடுகள், ஊதாரித்தனமான செலவுகளால் ரூ.3,129 கோடி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதை சரிசெய்ய அரசு என்ன செய்யப்போகிறது? என்று சட்டசபையில் அதிமுக கேள்வி எழுப்பியது.

தமிழக சட்டசபையில் இடைக்கால பட்ஜெட் மீது நடந்த விவாதம்:

மூர்த்தி (பா.ம.க.): சட்டம் ஒழுங்கு பிரச்சினைகளை தவிர்ப்பதற்காக விழாக் காலங்களில் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட வேண்டும். வறுமை கோட்டின் கீழ் வசிப்பவர் எண்ணிக்கையை மீண்டும் கணக்கெடுக்க வேண்டும். அரசு நிலங்களை தனியார் ஆக்கிரமிப்பதை தடுக்க வேண்டும். கேளம்பாக்கம் அருகே சிவசங்கர பாபா அரசுக்குச் சொந்தமான ரூ.30 கோடி மதிப்புள்ள ஏழரை ஏக்கர் நிலத்துக்கு இலவச பட்டா பெற்றுள்ளார். அதுபோல் எனது தொகுதியில் சில தனியார் என்ஜினீயரிங் கல்லூரிகளுக்கு அரசு நிலம் இலவசமாக வழங்கப்பட்டு உள்ளன. இந்த நிலத்தை மீட்டு, நிலமற்ற விவசாயிகளுக்கு நிலம் வழங்கும் திட்டத்தின் கீழ் ஏழைகளுக்கு அவற்றை வழங்க வேண்டும். மறைமலைநகரில் அனைத்து அரசு பஸ்களும் நின்று செல்ல உத்தரவிட வேண்டும்.

ஜான் ஜோசப் (மார்க்சிஸ்ட்): வெள்ளச் சேதத்தை மதிப்பிட மத்திய குழு வந்து சென்றது. ஆனால் நிதி இன்னும் வரவில்லை. பால் கொள்முதல் விலையை உயர்த்துவது, பால் கூட்டுறவு சங்கப் பணியாளர்களை நிரந்தரம் செய்வது உட்பட பல கோரிக்கைகளை முன்வைத்து பால் உற்பத்தியாளர்கள் போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.

பால்வளத்துறை அமைச்சர் மதிவாணன்: பால்கூட்டுறவு சங்கங்களில் 11,000 ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். உரியமுறையில் பணிக்கு வரவில்லை என்பதால் அவர்களை நிரந்தரப்படுத்த அரசுக்கு அதிகாரம் இல்லை என்று சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்துவிட்டது. ஆனால் அவர்களின் குறைகளை தீர்ப்பதற்காக ஊதிய உயர்வை முதல்வர் அறிவித்துள்ளார்.

ராமசாமி (இந்திய கம்யூனிஸ்ட்): கடந்த 5 ஆண்டுகளில் இலவசங்களைப் பெரும் ஏழைகள் அதிகரித்துவிட்டனர். இந்தியா முழுவதும் தற்கொலை செய்துகொண்ட 43,000 விவசாயிகளில் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் 3,000 என்று புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. நதிகள் இணைப்பு என்று தொடக்கத்தில் பேசினார்கள். ஆனால் இந்த ஆண்டு காவிரி, வைகை, தாமிரபரணி ஆறுகளில் இருந்து பல டி.எம்.சி. தண்ணீர் கடலில் கலந்து வீணாகிவிட்டது. முகாம்களில் இளைஞர்களின் கூட்டங்களை பார்க்கும்போது வேலை வாய்ப்புகள் இல்லாமல் போய்விட்டது என்று தெரிகிறது.

நிதியமைச்சர் அன்பழகன்: மாவட்டம் தோறும் வேலை வாய்ப்பு முகாம்களை நடத்துவது, அந்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்துவதற்காகத்தான். அதை குறைபட பேசக்கூடாது.

கலியவரதன் (பா.ம.க.): கிராமங்களில் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும். மற்ற இடங்களில் டாஸ்மாக் கடைகள் செயல்படும் நேரத்தை குறைக்க வேண்டும்.

அக்ரி கிருஷ்ணமூர்த்தி (அதிமுக): அதிமுக ஆட்சியில் 2005-2006ம் ஆண்டு ரூ.1,951 கோடி உபரி வருவாய் இருந்தது. தற்போதைய ஆட்சியின் நிர்வாக சீர்கேடுகள், ஊதாரித்தனமான செலவுகளால் ரூ.3,129 கோடி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதை சரிசெய்ய அரசு என்ன செய்யப்போகிறது? அரசின் மொத்த கடன் 1 லட்சத்து ஆயிரத்து 541 கோடி. இந்த ஆட்சியில் இலவச திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. அதற்கான நிதி ஆதாரம் என்ன என்று தெரிவிக்க வேண்டும்.

அமைச்சர் பரிதிஇளம் வழுதி: தற்போதைய கடன் சுமை, அவர்கள் (அதிமுக) வைத்துவிட்டு போன கடன் சுமையையும் சேர்த்துதான் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

அக்ரி கிருஷ்ணமூர்த்தி: இந்த ஆட்சியில் கடன் சுமை எவ்வளவு? அதற்கான வட்டித்தொகை எவ்வளவு? அதை எவ்வாறு திருப்பிச் செலுத்த உள்ளது என்பது உள்ளிட்ட விவரங்களை வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும்.

விலைவாசி உயர்வால் ஏழை, எளிய, நடுத்தர மக்கள் அத்தியாவசிய பொருட்கள்கூட வாங்கி பயன்படுத்த முடியாத துர்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர். அதிமுக ஆட்சிக்காலத்தில் சுனாமி, புயல், வெள்ளம், வறட்சி போன்ற பேரழிவு ஏற்பட்டபோதிலும் 5 ஆண்டு காலம் விலைவாசி கட்டுக்குள் இருந்தது. இப்போது இயற்கை சூழ்நிலை சாதகமாக இருக்கின்ற போதிலும் அத்தியாவசியப் பொருட்களின் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்து உள்ளது. விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த இந்த அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது?.

உணவுத்துறை அமைச்சர் எ.வ.வேலு: அதிமுக ஆட்சிக்கு வந்தபோது இருந்த விலை அவர்கள் ஆட்சியை விட்டு போகும் அதிகமாக இருந்தது. அரிசி விலை 2001ம் ஆண்டு இருந்ததைவிட 2006ம் ஆண்டு 14 சதவீதம் அதிகமாக இருந்தது. அதுபோல துவரம் பருப்பு விலை 21 சதவீதமும், நல்லெண்ணெய் விலை 46 சதவீதமும், சர்க்கரை விலை 29 சதவீதமும், மிளகாய் விலை ரூ.51 சதவீதமும் அதிகமாக இருந்தது. அவர்கள் ஆட்சிக் காலத்தில் 5 ஆண்டுகளும் விலை ஏற்றம் தவிர்க்க முடியாததாக இருந்தது.

ஆனால், திமுக ஆட்சியில் மக்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காகவும், விலை ஏற்றத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்பதற்காகவும் சிறப்பு பொதுவிநியோகத் திட்டம் என்ற திட்டத்தைக் கொண்டு வந்து துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு குறைந்த விலையில் கொடுக்கப்படுகிறது. ஆனால், அதிமுக ஆட்சியில் விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை. விலைவாசி உயர்வை சுட்டிக்காட்டி இந்த ஆட்சிக்கு களங்கம் கற்பிக்க முயற்சி செய்கிறீர்கள். அது ஒருகாலமும் நடக்காது. மக்கள் விலைவாசி குறைந்து வருவதை அனுபவித்து கொண்டுதான் இருக்கிறார்கள்.

அமைச்சர் பரிதிஇளம் வழுதி: வெங்காய விலை 80 ரூபாய் என்று சொன்னார்கள். ஆனால், இன்று வெங்காய விலை என்ன என்று மனசாட்சியோடு சொல்ல வேண்டும். இந்த அரசு எடுத்துள்ள முயற்சி காரணமாக வெங்காய விலை குறைந்துள்ளது. ஒரு கிலோ வெங்காயம் அதுவும் நல்ல வெங்காயம் 20 ரூபாய்க்கு என்னால் வாங்கித்தர முடியும். இந்த நேரத்தில் ஒரு பாட்டு நினைவுக்கு வருகிறது. ''உரித்துப் பார்த்தால் வெங்காயத்தில் ஒன்றும் இருக்காது. உளறித் திரிபவர் வார்த்தையில் ஒரு உறுப்படியும் இருக்காது''.

2,40,000 விவசாயிகளுக்கு மின் இணைப்பு: ஆற்காடு

இந் நிலையில் சட்டசபையில் இன்று கேள்வி நேரத்தின்போது, அதிமுக எம்எல்ஏ ஓ.பன்னீர்செல்வம், விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்குவது தொடர்பாக கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதில் அளித்துப் பேசிய மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி,

இந்த ஆண்டு 2,40,000 விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கப்படும். தர்மபுரி மாவட்டம் மொரக்கூரில் 110 கிலோ வாட் திறன் கொண்ட துணை மின் நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு அருகில் உள்ள மின் மாற்றிகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+