தமிழகத்துக்கு வெள்ள நிவாரண நிதி வழங்குவதில் தாமதம்-சீட் பேர பிரச்சனை காரணமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: வெள்ள நிவாரணப் பணிகளுக்காக தமிழக அரசு ரூ.1,832 கோடியை மத்திய அரசிடம் கேட்டு பல மாதங்களாகியும் நிவாரண நிதியை கொடுக்கவில்லை. இதற்கு அரசியல் காரணமா? அல்லது தேர்தல் காரணமா? அல்லது சீட் பேர பிரச்சனை தான் காரணமா? என்று இந்திய கம்யூனிஸ்ட் சட்டசபையில் கேள்வி எழுப்பியது.

இதையடுத்து அந்தக் கட்சிக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் இடையே கடும் வாக்குவாதம் நடந்தது.

இடைக்கால பட்ஜெட் மீது சட்டசபையில் நடந்த விவாத விவரம்:

சிவபுண்ணியம் (இந்திய கம்யூனிஸ்ட்): வெள்ள நிவாரணப் பணிகளுக்காக, தமிழக அரசு ரூ.1,832 கோடியை மத்திய அரசிடம் கேட்டது. பல மாதங்களாகியும் மத்திய அரசு நிவாரண நிதியை கொடுக்கவில்லை. இதற்கு அரசியல் காரணமா? அல்லது தேர்தல் காரணமா? அல்லது சீட் பேர பிரச்சனை தான் காரணமா?

பீட்டர் அல்போன்ஸ் (காங்கிரஸ்): எப்போதுமே போகாத ஊருக்கு வழி சொல்லி பழக்கப்பட்டவர் சிவபுண்ணியம். மாநில அரசு கேட்கும் நிதியை மத்திய அரசு தொடர்ந்து கொடுத்து வருகிறது. வெள்ள சேதங்களை பார்வையிட மத்திய குழுவை அனுப்பி வைத்தது. இந்தக் குழு தனது அறிக்கையை கொடுத்துள்ளது. அதை ஆய்வு செய்து மத்திய அரசு முடிவெடுக்கும். நிச்சயம் மத்திய அரசு நிதி கொடுக்கும். இதில் சிவபுண்ணியத்துக்கு என்ன வேலை?

சிவபுண்ணியம்: அதற்தகுள் அடுத்த வெள்ளம் வந்துவிடும். கடந்த காலங்களில், வெள்ள பாதிப்பு ஏற்பட்டபோது, மத்திய அரசு ஓடிவந்து உடனடியாகக் கொடுத்தது. தற்போது வெள்ள நிவாரண நிதியை கொடுக்கும் பொறுப்பில் இருப்பவர், தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர் ப.சிதம்பரம். அவர் தான் நிதி வழங்க மறுக்கிறார்.

பீட்டர் அல்போன்ஸ்: மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், சென்னை வரும் போதெல்லாம் முதல்வரை சந்திக்கிறார். தமிழகத்துக்கு தேவையான அனைத்து விஷயங்கள் குறித்தும் இருவரும் கருத்துக்களைப் பரிமாறிக் கொள்கின்றனர்.மற்ற மாநிலங்களுக்கு கொடுத்ததை விட, தமிழகத்துக்கு அதிக உதவியை மத்திய அரசு செய்துள்ளது. தமிழகத்துக்கு இதுவரை ஒன்றரை லட்சம் கோடி ரூபாயை மத்திய அரசு வழங்கியுள்ளது. தேவைப்பட்டால் இன்னும் வழங்கும்.மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும், திமுகவுக்கும் காங்கிரசுக்கும் சிண்டு முடியும் வேலையில், சிவபுண்ணியம் ஈடுபட வேண்டாம்.

சிவபுண்ணியம்: மகாராஷ்டிராவில் சமீபத்தில் வெள்ளம் ஏற்பட்டபோது மத்திய அரசு 400 கோடி ரூபாய் கொடுத்தது. பீகாருக்கு 2,000 கோடி ரூபாய் கொடுத்தது. ஆனால், தமிழகத்துக்கு ஒரு பைசா கூட தரவில்லை. கூட்டணி பேச்சுவார்த்தைக் குழுவில் ஆள் சேர்க்கவில்லை எனக் கூறி வெளியே உண்ணாவிரதம் இருக்கும் (இளங்கோவன் ஆதரவாளர்கள்) மோசமான நிலையில் தான் காங்கிரஸ் உள்ளது.

பீட்டர் அல்போன்ஸ்: எங்களுக்குள் கூட்டணி என்று முடிவு செய்துவிட்டோம். ஆனால் நீங்கள் பெட்டி படுக்கைகளோடு பஸ் நிலையத்தில் காத்திருக்கிறீர்கள். எதில் ஏறுவது என்று தெரியாமல் உள்ளீர்கள்.

சிவபுண்ணியம்: நாங்கள் பெட்டி படுக்கையோடு இல்லை. தேசிய அளவிலான கொள்கைப்படி கூட்டணி வைக்கிறோம். அதாவது, உங்களோடு கூட்டணி வைப்பதில்லை என்பதில் உறுதியாக உள்ளோம். கூட்டணி பேச்சுவார்த்தைக்கு போவதற்கு முன் உண்ணாவிரதம் இருப்பது தான் உங்கள் கட்சி.காங்கிரஸ் கட்சி தான் இந்தியாவின் அனைத்து பின்னடைவுகளுக்கும் காரணம்.இலங்கை பிரச்சனை, மீனவர் பிரச்சனை போன்ற பிரச்சனைகளுக்கும் காங்கிரஸ் தான் காரணம். அந்தக் கட்சியோடு கூட்டணி வைத்துள்ளதால், திமுகவால் வலுவாக குரல் கொடுக்க முடியவில்லை.

பீட்டர் அல்போன்ஸ்: அடிமைத்தனத்தை ஒழித்து சுதந்திர இந்தியாவை உருவாக்கியது காங்கிரசின் குற்றமா? சுதந்திர இந்தியாவில் ஜனநாயக முறைப்படி தொடர்ந்து தேர்தல் நடத்தி வருவது குற்றமா? உங்களை இன்னும் இந்த நாட்டில் உலவ விட்டிருப்பது தான் காங்கிரஸ் செய்த ஒரே குற்றம்.

சிவபுண்ணியம்: நிதிப் பற்றாக்குறை, கடன் சுமையில் தமிழக அரசு உள்ளது. கடன் சுமை அதிகரிப்பதற்கு தீர்வு என்ன?, இந்த கடன் சுமையை யார் தலையில் சுமத்தப் போகிறீர்கள்.

நிதியமைச்சர் அன்பழகன்: ஒரு அரசு பல்வேறு திட்டங்களை நிறைவேற்ற கடன் வாங்குகிறது. கடன் வாங்கி தான் திட்டங்களை நிறைவேற்ற முடியும். இலவச திட்டங்களுக்கு கடன் வாங்குவதில்லை. வாங்கிய கடன் அனைத்தும், மூலதனச் செலவுக்காக தான். கட்டுமானம் அல்லது வேறு தொழில்களுக்காக இந்த கடன் பயன்படுத்தப்படுகிறது. இந்த கடன் தான் தமிழகத்தை வாழ வைக்கிறது.

சிவபுண்ணியம்: புதிய விளக்கத்தை அமைச்சர் தந்துள்ளார். கடன் தான் வாழ வைக்கிறது என்றால், அந்தக் கடன் அழிவை ஏற்படுத்தி மூழ்கிவிடும்.

நிதியமைச்சர் அன்பழகன்: கடன் வாங்குவது வளர்ச்சியின் அடையாளம். அதற்காக மேலும் கடன் வாங்கப்படும். பெற்ற கடனை திருப்பி தரும் வல்லமை நமக்கு இருக்கிறது.

பீட்டர் அல்போன்ஸ்: உலகிலேயே மிகப்பெரிய பணக்கார நாடான அமெரிக்கா தான் அதிகளவு கடன் வாங்கியுள்ளது. வளர்ந்த ஐரோப்பிய நாடுகள், சீனா, ஜப்பான் நாடுகள் அனைத்தும் கடன்கள் மூலம் தான் உலகில் வெற்றி சரித்திரத்தை பதித்துள்ளன. ஆசிய வளர்ச்சி வங்கி போன்றவையே, இந்தியா போன்ற வளரும் நாடுகளுக்கு குறைந்த வட்டியில் கடன் கொடுக்க தான் அமைக்கப்பட்டுள்ளன. கடனை திரும்ப கட்டக் கூடிய சக்தியை பெற்றிருப்பது தான் அரசின் வெற்றி. எனவே, கடன் சுமை அதிகரித்துள்ளது என்ற உண்மைக்கு மாறான பிரசாரத்தை திரும்ப பெற வேண்டும்.

அமைச்சர் துரைமுருகன்: எவனும் கேட்டவுடன் கடனை தூக்கி கொடுத்து விட மாட்டான். திருப்பி செலுத்தும் சக்தி இருக்கிறதா என்று பார்த்து தான் கொடுப்பான்.

இவ்வாறு விவாதம் நடந்தது.

நிபந்தனையுடன் குற்றம் சாட்ட தயாரா?-கருணாநிதி:

பின்னர் நடந்த விவாதத்தில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. சி.வி.சண்முகம் பேசுகையில், டாடா நிறுவனத்திற்கும், டி.எல்.எப். நிறுவனத்திற்கும் தரமணியில் குத்தகைக்கு நிலம் வழங்கப்பட்டடுள்ளது என்றார்.

இதற்கு பதிலளித்து துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், சி.வி. சண்முகம் பேசுகையில் டாடா நிறுவனத்திற்கும், டி.எல்.எப். நிறுவனத்திற்கும் தரமணியில் குத்தகைக்கு நிலம் வழங்கியது பற்றி சில கருத்துக்களைக் கூறினார். இந்த விவகாரத்தில் இதே அவையில் 10.5.10 அன்று, எதிர்க்கட்சித் துணைத் தலைவர் கொண்டு வந்த ஒத்திவைப்புத் தீர்மானம், மறு நாளில் விரிவான விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, அதன் இறுதியிலே விளக்கமான விவரங்களை நான் குறிப்பிட்டுக் காட்டியிருக்கிறேன்.

அந்த விளக்கத்தை அறியாமல், தெரியாமல் சி.வி.சண்முகம் இங்கு பேசியிருக்கிறார். அவர் பேசியதற்கு ஆதாரம் இருந்தால், அதற்குரிய நடவடிக்கை எடுக்க இந்த அரசு தயாராக இருக்கிறது. எனவே, ஆதாரம் இல்லாமல் அவர் பேசியிருக்கிற காரணத்தால், அவர் பேசிய வார்த்தையை அவைக் குறிப்பிலிருந்து நீக்க வேண்டும் என்றார்.

இதையடுத்து சி.வி. சண்முகம் கூறிய கருத்துகளை அவைக் குறிப்பிலிருந்து நீக்கி சபாநாயகர் ஆவுடையப்பன் உத்தரவிட்டார்.

இதற்கு அ.தி.மு.க. எம்.எல்.ஏக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து குரல் எழுப்பினர். அப்போது முதல்வர் கருணாநிதி குறுக்கிட்டு பேசுகையில்,

ஏற்கனவே இந்த அவையில் முன்னாள் அமைச்சராக இருந்த, மறைந்த குழந்தைவேலு, இப்படித்தான் என்னிடத்திலே ஆதாரம் இருக்கிறது என்று கூறி என்மீது ஒரு குற்றச்சாட்டைச் சொன்னார். நான் அப்போதே அதை மறுத்து, ஆதாரம் இருந்தால் அதைக் காட்டுங்கள். இல்லா விட்டால் மன்னிப்பு கேளுங்கள்.
நீங்கள் ஆதாரத்தைக் காட்டினால் நான் என் பதவியை ராஜினாமா செய்கிறேன் என்று கூடச் சொன்னேன். ஆதாரத்தை அவர் காட்டவில்லை. அப்போது அருமை நண்பர் எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்தார். ஆதாரத்தைக் காட்டுவதற்குப் பதிலாக, ஒரு போலி ஆதாரத்தைக் கொண்டு வந்து, அன்றைய சபாநாயகராக இருந்த ராஜாராமிடம் கொடுத்தார்.

அதை ராஜாராம் வாங்கி, அவருடைய அறையிலே ஆய்வு செய்த போது, இது போலியான ஆதாரம். உண்மையான ஆதாரம் இல்லை என்று குறிப்பிட்டார். நான் உடனே, அன்றைக்கு ஒரு நிபந்தனையை ஏற்றுக் கொண்டாரே. அதை இப்போது செயல்படுத்துவாரா? என்று நான் கேட்டபோது, நான் தயார் என்று அவர் சொன்னார்.

பிறகு எம்.ஜி.ஆர். அதிலே தலையிட்டு, இத்தோடு நிறுத்துங்கள் என்று கேட்டுக் கொண்டதன் காரணமாக, அந்தப் பிரச்சனை அப்போது நிறுத்தப்பட்டது. அவரால் ஆதாரங்களைக் காட்ட முடியவில்லை. தன்னுடைய பதவியை ராஜினாமா செய்யவும் அவர் தயாராக இல்லை. இப்போதும் நம்முடைய நண்பர் சண்முகம், ஆதாரம் காட்டுவேன் என்று சொல்கிறார். எந்த நிபந்தனையோடு அவர் சொல்கிறார்? என்று நான் கேட்க விரும்புகிறேன் என்றார் கருணாநிதி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+