மைலாப்பூரில் நள்ளிரவில் காங்.-வி.சி பிரமுகர்களை கழுத்தை அறுத்து கொன்ற 30 பேர் கும்பல்
சென்னை: மைலாப்பூரில் நேற்று நள்ளிரவில் 30 பேர் கொண்ட கும்பல் இரு இடங்களில் வீடுகளில் புகுந்து இருவரை கழுத்தை அறுத்துக் கொலை செய்தது. கொலையானவர்கள் இருவரும் நண்பர்கள். இதில் ஒருவர் விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர், இன்னொருவர் இளைஞர் காங்கிரஸ் பிரமுகர் ஆவார்.
சென்னை மையிலாப்பூர் சிலேட்டர் புரத்தில் வசித்து வந்த பில்லா சுரேஷ் (35) விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர். நேற்றிரவு மனைவி லதா, மகன்கள் பிரதீப் (6), சந்தோஷ் (4) ஆகியோருடன் தூங்கிக் கொண்டிருந்தார். இரவு 12 மணியளவில் 30 பேர் கொண்ட கும்பல் வீச்சரிவாள், கத்திகளுடன் இவரது வீட்டுக் கதவை தட்டினர்.
கதவைத் திறக்க சுரேஷ் மறுத்ததால் அதை உடைக்க முயன்றனர். மேலும் வீட்டின் ஆஸ்பெஸ்டாஸ் கூரையை உடைத்துக் கொண்டு உள்ளே வந்த கும்பல் சுரேஷை கூரை வழியாகவே வெளியே இழுத்தனர்.
அதில் ஒருவன் கத்தியால் சுரேசின் கழுத்தை அறுத்ததில் அந்த இடத்திலேயே அவர் இறந்தார். ஆனால், அதன் பின்னரும் சுரேசின் கை, கால், வயிற்றுப் பகுதிகளில் சரமாரியாக அரிவாளால் வெட்டிய அந்தக் கும்பல் உடலை சிதைத்து விட்டு தப்பியோடிவிட்டது.
இங்கிருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மைலாப்பூர் ஏகாம்பரம் பிள்ளைத் தெருவுக்கு சென்ற அந்தக் கும்பல் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் 4வது மாடியில் வசித்து வரும் இளைஞர் காங்கிரஸ் பிரமுகரும் பில்லா சுரேசின் நண்பருமான விஜயனின் (36) வீட்டை தட்டியது.
மனைவி மஞ்சுளா, மகள்கள் சுவேதா, வைஷ்ணவி, சோபிகா ஆகியோருடன் தூங்கிக் கொண்டிருந்த அவர் கதவை லேசாக திறந்து பார்த்தார். வெளியில் வீச்சரிவாள்களுடன் கும்பல் நிற்பதைப் பார்த்து கதவை மூட முயன்றார். ஆனால், அதற்குள் கொலையாளிகள் கதவைத் தள்ளிக் கொண்டு அதிரடியாக உள்ளே புகுந்தனர்.
சுமார் 10 பேர் மஞ்சுளாவை சூழ்ந்து நின்று கொள்ள, 3 பேர் மட்டும் விஜயனை குளியல் அறைக்குள் இழுத்து சென்று அவரது கழுத்தை கத்தியால் அறுத்தனர். பின்னர் அவரை சரமாரியாக அரிவாளால் வெட்டிக் கொன்றுவிட்டு ஓடினர்.
இதற்கிடையே மஞ்சுளா எழுப்பிய அலறல் சத்தம் கேட்டு அடுக்கு மாடி குடியிருப்பில் வசித்தவர்கள் வெளியே ஓடி வந்தனர். இதைப் பார்த்த கொலையாளிகள், 2 நாட்டு குண்டுகளை வீசினர். அவை வெடித்ததில் அந்தப் பகுதியே அச்சத்தில் ஆழ்ந்தது. வீடுகளை திறந்து கொண்டு வெளியே வந்தவர்கள் திரும்பவும் வீடுகளுக்குள் ஓடிச் சென்றுவிட்டனர்.
இதையடுத்து கொலையாளிகள் தப்பிச் சென்றனர்.
இந்த இரட்டை கொலை குறித்து விசாரணை நடத்திய மைலாப்பூர் போலீசார் கொலையாளிகளில் ஆனந்த், வினோத், கரிகாலன், கார்த்திகேயன், சந்திரா, ரேணுகா ஆகிய 6 பேரை கைது செய்தனர்.
இவர்களில் சந்திரா காயங்களுடன் இருந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கொலையாளிகளில் முககியமானவர்களான சிவக்குமார், நிர்மல், தமிழ்ச் செல்வன், சீனு, ஈசுவரன் ஆகியோர் தலைமறைவாகி விட்டனர். அவர்களைப் பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த இரட்டை கொலை சம்பவம் மைலாப்பூர் பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கொலைகள் நடந்த சிலேட்டர் புரம் மற்றும் ஏகாம்பரம் பிள்ளைத் தெருவில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications