எம்.ஜி.ஆர். ஆட்சி வந்தால்தான் தமிழ்நாட்டை காப்பாற்ற முடியும்-ஜெயலலிதா

Subscribe to Oneindia Tamil

Jayalalitha
சென்னை: வரும் தேர்தலில் மீண்டும் எம்.ஜி.ஆர். ஆட்சி வந்தால்தான் தமிழ்நாட்டை காப்பாற்ற முடியும் என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறினார்.

ஜெயலலிதாவின் 63வது பிறந்தநாள் 24ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி ஜெயலலிதா பேரவை சார்பில் சென்னையில் இன்று 63 ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடத்தி வைக்கப்பட்டது.

ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடந்த இந்த விழாவில் ஜெயலலிதா கலந்து கொண்டு திருமணங்களை நடத்தி வைத்தார். 63 பேரும் ஒரே நேரத்தில் மணமகள்கள் கழுத்தில் தாலி கட்டினர். பின்னர் மாலை மாற்றிக் கொண்டனர். மணமக்களை ஜெயலலிதா அச்சதை தூவி வாழ்த்தினார்.

ஒவ்வொரு ஜோடிக்கும் அரை பவுன் தாலி, பட்டுப் புடவை மெட்டி, பட்டு வேட்டி,சட்டை, குத்து விளக்கு, குங்குமச் சிமிள், கிரைண்டர், குக்கர், மிக்ஸி, கேஸ் அடுப்பு, டேபிள் பேன், சுவர் கடிகாரம், 2 கை கடிகாரங்கள், பாத்திரங்கள், தலையணை, போர்வை உள்பட 63 சீர்வரிசை பொருட்களையும் ஜெயலலிதா வழங்கி மணமக்களுடன் புகைப்படமும் எடுத்துக் கொண்டார்.

பின்னர் ஜெயலலிதா பேசுகையில்,அதிமுக எனும் பிரமாண்ட குடும்பத்தில் உங்கள் அனைவருடைய வாழ்த்துக்களுடன் 63 ஜோடிகளின் திருமணத்தை நடத்தி வைத்து வாழ்த்துவதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.

மண வாழ்க்கை ஓடத்தில் இன்று முதல் பயணம் செய்ய இருக்கிறீர்கள். இல்லற வாழ்க்கை என்பது இன்பமும் துன்பமும், சுகமும் துக்கமும், நன்மையும் தீமையும் நிறைந்தது. கணவன்-மனைவி இருவரும் இதை புரிந்து கொண்டு ஒருவர் மற்றவருக்காக வாழ உறுதி ஏற்று சவால்களை சந்தியுங்கள்.

நான் அதிமுக என்னும் இந்த குடும்பத்தை நேசிப்பது போல், அதிமுக வெற்றியை நினைத்து பெருமை கொள்வது போல், கழகத்துக்காக வாழ்வது போல் நீங்களும் ஒற்றுமையுடனும், லட்சியத்துடனும் வாழ வேண்டும்.

பெரியவர்கள் நமக்கு சுமையல்ல, வழிகாட்டிகள். நமக்கும் ஒருநாள் முதுமைவரும் என்பதை மணமக்கள் உள்ளத்தில் கொண்டு வாழ வேண்டும்.

குடும்பத்தில் மகிழ்ச்சி எவ்வளவு முக்கியமோ அதே போல் சமூகத்திலும் மகிழ்ச்சி நிலவ வேண்டும். ஆனால் இப்போது ஊழல், கொலை, கொள்ளை, கடத்தல், பதுக்கல் ஆகியவை அரங்கேற்றப்படுகின்றன.

ஒரு துறையில் ரூ. 1 லட்சத்து 80 ஆயிரம் கோடிக்கு ஊழல் நடந்துள்ளது. அது முடிவுக்கு வருவதற்கு முன்பே ரூ. 2 லட்சம் கோடி ஊழல் வெளி வந்துள்ளது. வெளிநாடுகளில் இந்தப் பணம் பதுக்கப்பட்டுள்ளது. இது நாட்டு வளர்ச்சிக்கு பயன்படுத்தப்பட்டிருந்தால் நாடு செழிப்படைந்திருக்கும். இந்த நேரத்தில் உங்களிடம் ஒரு சிறு கதையை கூற விரும்புகிறேன்.

ஒரு குருவும், சீடனும் காட்டுப் பகுதியில் சென்று கொண்டிருந்தார்கள். அப்போது புதிதாக முளைத்த ஒரு செடியை பிடுங்கும்படி சீடனிடம் குரு கூறினார். உடனே சீடன் தனது கால் விரல்களால் அந்த செடியை பிடுங்கி எறிந்து விட்டான். சிறிது தூரம் சென்றதும் ஒரு பெரிய செடியை காட்டி பிடுங்கும்படி கூறினார். உடனே அவன் கையால் பிடுங்கி எறிந்தான்.

மேலும் சிறிது தூரம் சென்றதும் ஒரு மரத்தை காட்டி அதை பிடுங்கும் படி கூறினார். அதை கேட்டதும் சீடன் திகைத்து வெட்டினான். அப்போதுதான் குரு கூறினார். தேவை இல்லாத செடிகளை முளையிலேயே கிள்ளி எறிந்து விட வேண்டும் என்று. இது போல் அனைத்து துறைகளிலும் நடந்து வரும் முறைகேடுகளை முளையிலேயே கிள்ளி எறிய உங்களுக்கு கிடைத்திருக்கும் வாய்ப்புதான் பொது தேர்தல்.

வரும் தேர்தலில் மீண்டும் எம்.ஜி.ஆர். ஆட்சி வந்தால்தான் தமிழ்நாட்டை காப்பாற்ற முடியும். ஏன் இந்த தேசத்தையே காப்பாற்றும் கடமையும் அதிமுகவுக்கு உள்ளது. இந்தியாவை சுரண்டுபவர்கள் தோன்றிய இடம் தமிழ்நாடு. எனவே தமிழ்நாட்டில் கிடைக்கும் வெற்றி மூலம் நாட்டையே காப்பாற்றும் பலம் நமக்கு கிடைக்கும்.

எதிராளிகளிடம் பணம் இருக்கிறது. நம்மிடம் நேர்மையும், தர்மமும் இருக்கிறது. அவர்களிடம் ஆட்சி, அதிகாரம் ஆள்பலம் இருக்கிறது. நம்மிடம் தேச பற்று, நாட்டு நலன், தியாக உணர்வு இருக்கிறது. நாம் வெற்றி பெற எந்த தியாகத்துக்கும் தயாராக இருக்க வேண்டும்.

ஒற்றுமையுடனும் கடமை உணர்வுடனும் எந்த கருத்து வேறுபாடுகளுக்கு இடம் கொடுக்காமல், சுயநல கும்பலிடம் இருந்து நாட்டை காப்பாற்ற அனைவரும் ஜனநாயக கடமை ஆற்ற வேண்டும். எம்.ஜி.ஆர். ஆட்சியை கொண்டு வரும் பணியில் ஒவ்வொருவரும் தன்னை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும்.

நாம் இப்போது வரலாறு படைக்கும் தருணத்தில் நின்று கொண்டிருக்கிறோம். வருகிற தேர்தலில் அதை படைப்போம். புதிய பொன்னுலகம் நோக்கி சென்று கொண்டிருக்கிறோம். விரைவில் மீண்டும் பொற் காலத்தை சந்திக்க இருக்கிறோம். இந்த முறை வெற்றி பெற்றால் எந்த காலத்திலும் அதிமுகவுக்கு தோல்வி இல்லை.தமிழகத்துக்கும் வீழ்ச்சி இல்லை என்றார் ஜெயலலிதா.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+