திருச்செந்தூர் கோயில் வைரங்கள் மாயம்-உயர் மட்ட குழு விசாரணை
திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவில் நகைகளில் இருந்த வைர கற்கள் மாயமாகியுள்ளன.
இது குறித்து திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவில் அறங்காவலர் குழு தலைவர் தேவதாச சுந்தரம் நிருபர்களிடம் கூறியதாவது,
திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவில் கடந்த 1929ம் ஆண்டு அறநிலையத் துறையின் கட்டுபாட்டுக்கு வந்தது. அந்த காலகட்டத்தில் இருந்து சுவாமிகளின் நகை பொறுப்பு ஸ்தலத்தார் வசம் இருந்து வந்தது. பின்னர் 1951ம் ஆண்டில் முதல் முறையாக கோயில் நகைகளின் மதிப்பீட்டு அறிக்கை தயார் செய்யப்பட்டது. அப்போதைய மதிப்பு ரூ.9 லட்சத்து 16 ஆயிரத்து 197 ஆகும். அந்த அறிக்கையில் மொத்தம் 523 பொருட்கள் இருந்தன.
அதன்பிறகு 1966ம் ஆண்டில் நகைகள் மதிப்பீடு செய்யும்போது பெரிய அளவில் திருட்டு சம்பவம் நடந்தது தெரிய வந்தது. இந்த சம்பவத்தில் தொடர்புடையவர் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு இதுவரை அது நிலுவையில் உள்ளது. அதன் பின்னர் 1968ல் கரூவூல பெட்டிக்கு 3 பூட்டுகள் போடப்பட்டு நிர்வாகத்திடம் இரண்டு சாவிகளும், ஸ்தலத்தாரிடம் 1 சாவியும் இருந்தன.
தற்போது அரசு உத்தரவுபடி கோவில் சொத்துகள் அனைத்தும் அறநிலையத் துறை கட்டுபாட்டில் இருக்க வேண்டிய விதிமுறைகளின்படி ஸ்தலத்தாரிடம் கேட்டதற்கு அவர்கள் மறுத்துவிட்டனர். இதையடுத்து கோர்ட் உத்தரவுபடி கடந்த வாரம் கோட்டாட்சியர், தாசில்தார், டிஎஸ்பி, விஏஓ முன்னிலையில் கரூவூல பெட்டி பூட்டு உடைக்கப்பட்டு நகைகள் அனைத்தும் அறநிலையத் துறை கட்டுப்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது.
இந்த நகைகள் அனைத்தும் தனி குழு மூலம் மதிப்பீடு செய்யப்பட்டு வருகிறது. உற்சவர் சண்முகர் வலது கையில் அணிவிக்க கூடிய அபய ஹஸ்தத்தில் உள்ள 283 வைர கற்களில் 133 வைர கற்கள் போலியானது என தெரிய வந்துள்ளது. அதேபோல் சுவாமிக்குரிய வேலிலும் அதே மாதிரியான சம்பவம் நடந்துள்ளது. இனி கருவூல பெட்டிக்கு புதிய 4 பூட்டுகள் போடப்பட்டு 2 சாவிகள் இணை ஆணையர் பொறுப்பிலும், 2 சாவிகள் அறங்காவலர் பொறுப்பிலும் இருக்கும் என்றார்.












Click it and Unblock the Notifications